(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் 5/6  தொடர்ச்சி)

மாணவர் ஆற்றுப்படை

– பேராசிரியர் சி.இலக்குவனார்

6/6

உண்மை கூறா உலகில் வாழ்வது

அம்ம கொடிது; அன்றியும் மாணவ!

சொல்வ தொன்று; செய்வ தொன்று

வீட்டில் ஒன்று; வெளியில் ஒன்று;                              165

கண்டால் ஒன்று; சென்றால் ஒன்று;

நேர்மையும் இன்று; நிலையும் இன்று;

அழுக்கா றென்ற ஆழ்கடல் உண்டே;

அவாவெனும் கொடிய அராவும் உண்டே;

வெகுளி யென்ற வெந்தீ உண்டே                              170

இன்னாச் சொல்எனும் ஈட்டியும் உண்டே

தன்னலம் என்ற தாக்கணங் குண்டே

இவற்றைத் தப்பி இசைமிக வாழ்தல்

அரிது! அரிது! அண்ணல் துணை கொளின்

எளிதாய் இயலும்; இனிதாய் நிகழும்;                     175

துறவி உள்ளமும், தொண்டர் பணியும்

பலர்புகழ் அணியாம் பணிவும் இன்சொலும்,

இகழ்ச்சி புகழ்ச்சி, இன்பம் துன்பம்

ஒன்றெனக் கருதும் உயர்பேர் ஒழுக்கமும்

தமக் கெனக் கொண்டு தாழ்விலா தின்று                 180

அறுபதாம் ஆண்டை அடைந்துள பெரியார்

அரசரும் அமைச்சரும் அறிஞரும் புலவரும்

புகழுரை வழங்கிப் போற்றிடும் பெரியார்

இன்னும் அறுபதை இனிதே கடந்து

வள்ளுவர் நெறியில் வாழும் உலகைக்                    185

காண்பா ராகக்கனவு நினைவால்

பல்கலை வள்ளல் பார்புகழ் அரசர்

அண்ணாமலையார் அளப்பரும் புகழ்போல்

என்றும் வாழ்க; இனிதே வாழ்க;

நன்றே வாழ்க; நாடெலாம் வாழ்கவே!                       190

– பேராசிரியர் சி.இலக்குவனார்