நின்னை நீ மதி! அதுவே நிம்மதி! – ஆற்காடு க. குமரன்
நின்னை நீ மதி! அதுவே நிம்மதி!
உன் நிழல் கூட உனக்குச் சொந்தமில்லை!
அது உன்னை ஊடுருவ முடியாத
ஒளிக்கதிரின் பிம்பம்
மெய்யும் பொய்யே தான்
உயிர் எனும் மெய்
உன்னை விட்டு விலகும் போது
உனக்குள் ஊடுருவும் இயற்கையும்
இதயமும் மட்டுமே உண்மை
உனக்குள் இருக்கும் காற்றுதான்
உன்னைச் சுற்றியும் இருக்கிறது
உள்ளும் வெளியும் உலவும் காற்று
உனக்குள் இல்லாமல் போனால்
இந்தப் பூவுலகும் உனக்கில்லை!
நீ, நீயாக இரு!
உன் நிழல் கூடக் கருப்பாகத் தான் இருக்கிறது
நீ மட்டும் வெள்ளையாக இரு
உண்மையாக இரு!
வன்மையாக இரு!
உண்மையாக இருந்தாலே போதும்
உண்மை யுள்ளவர்களைத் தவிர் மற்றவர்களுக்கு
உன்னைப் பிடிக்காது போகலாம்
எல்லாருக்கும் பிடித்துச் சுவைக்க
நீ தின்பண்டம் அல்ல
எல்லோரும் பார்த்துக் களிக்க
கலைப் பொருளல்ல
உன்னை நீ விரும்பக் கற்றுக்கொள்!
மற்றவர்க்கு நீ என்ன செய்ய நினைக்கிறாயோ
அதை முதலில் உனக்கு நீயே செய்து பார்
உனக்கு நீயே தீமை செய்து கொள்ள
தீ வைத்துக்கொள்ள மனம் வராது
உனக்கு ஏற்படும் நன்மை தீமைக்கு
நீயே காரணம்!
அதற்கும் காரணம்
உன்மீது நீ வைக்காத நம்பிக்கையை
அடுத்தவர்களின் மீது வைப்பதும்
உன் உழைப்பின் மீது நம்பிக்கை வைக்காமல்
நல்ல நேரத்திற்குக் காத்திருந்து நடுத்தெருவுக்கு வந்ததும்
மரியாதை என்ற பெயரில்
மற்றவனிடம் மண்டியிட்டு வாழ்வதும்
விட்டுக் கொடுக்கிறேன் என்ற பெயரில்
விலை போவதும்
பரிதாபப்பட்டே பலியாவதும்
புகழுக்கு அடிமையாகி
புதைந்து போவதும்
ஆடம்பரத்துக்கு அடிமையாகி
அகம்பாவத்தில் அழிவதும்
அயல் மோகத்தில் அன்னையை மறப்பதும்
நாகரிகம் என்ற பெயரில்
பழம்மரபைத் தொலைப்பதும்
கண்டவனைத் தலைவனாக ஏற்றுத்
தன் தனித்தன்மையை இழப்பதும்!
உனக்கு நீயே தலைவனாக வாழ்ந்துபார்
உன் மனத்தைக் கட்டுப்படுத்து
உன்னை நீ நம்பு உன்னால் முடியும்!
உட்கொள்ளும் ஒவ்வொன்றையும்
உண்டாக்கக் கற்றுக்கொள்
உண்டாக்கக் கற்றுக் கொண்டாலே
அந்த உணவுக்காக
உழைப்பவர்களின் உழைப்பு புரியும்
விதைத்து உண்டு பார்
வீணாக்கத் தோன்றாது
உழைத்துச் சம்பாதித்துப் பார்
ஊதாரித்தனம் இருக்காது
ஏதும் நிலை இல்லை
நீ மட்டுமே நிலை
அதுவும் உனக்கு மட்டுமே
அதை நினைவில் வை!
இவண் ஆற்காடு க குமரன் 9789814114
Leave a Reply