பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம்:3 காட்சி:3
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2 தொடர்ச்சி)
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம்:3 காட்சி:3
அமுதவல்லி – உதாரன்
அறுசீர் விருத்தம்
உதாரன் : கார்நிரம்பும் வான மெல்லாம்
கனமழை பொழிய வெள்ள
நீர்நிரம்பும் வயல்க ளெல்லாம்
நெடும்பயிர் செழிக்க வண்ணத்
தேர்நிரம்பும் வீதி யெல்லாம்
திருவிழா மலிய நாளும்
பேர்நிரம்பும் ஆட்சி மேவும்
பெருவேந் தன்நங் காய்நீ
கற்றறிந்த யாப்பின் சீர்மை
கவிதையாய்ப் பொலிய நெஞ்சில்
உற்றறிந்த எண்ணந் தாமும்
உணர்த்திடும் பான்மை யாக
சொற்றெரிந்த புலவர் போற்றும்
சுவைபல கூட்டிச் சொல்க
நற்றிறத்தைத் தமிழுக் காக்கி
நமதுளம் களிப்போ மின்று
அமுதவல்லி : வாள்சுழலும் வேகங் காட்டி
வரும்பகையை வெருட்டும் வீரர்
வேல்சுழலும் வித்தை காட்டும்
வேய் தோளார் கண்ணுக் கஞ்சும்
தாள்சுழலும் களத்து மேட்டில்
தானியங்கள் நிறையச் செய்யும்
சேல்சுழலும் கழினி யாலே
செழிப்பாகும் எங்கள் நாடு
வீடாளும் பெண்டிர் போற்றும்
விருந்தோம்பும் பண்பி னாலே
காடாளும் துறவோர் தாமும்
கவலையைத் துறப்போ ராக
நாடாளும் மன்னன் பொன்னை
நாடோறும் வழங்க லாலே
ஏடாளும் புலவோர் தாமும்
இருந்தமிழ் வளர்க்கும் நாடு
உடைபடா விளாம்ப ழத்தை
ஓங்கியே மந்தி வீச
உடைபடும் தேன டையால்
ஒழுகுறும் நறவ மாந்தி
நடைதடு மாறு கின்ற
நாயினைக் கெக்கே என்று
பெடையெனும் கோழி தானும்
பெரியதோர் கேலி பேசும்
வாளை திரிய வயலெல்லாம்
வள்ளைக் கொடியில் வண்டுறங்கும்
பாளை விடிய கமுகெல்லாம்
பலவின் கிளையில் தேனுறங்கும்
பூளை விரிய மேடெல்லாம்
பொதும்பை விட்டு முயலுறங்கும்
தோளை விரிக்க மறவரெலாம்
தோகை யனையார் கண்ணுறங்கும்
தேடிக் குவிப்பர் வலியார்தாம்
திகட்ட உண்பர் மெலியரெலாம்
நாடிச் செல்வர் இளையோர்தாம்
நற்கலை யளிப்பர் வித்தரெலாம்
கூடித் திரிவர் மறவர்தாம்
குறுகி மறைவர் பகைவரெலாம்
ஆடிக் களிப்பர் கன்னியர்தாம்
அடையத் துடிப்பர் இளைஞரெலாம்
கண்ணி
வேலைப் பிடித்தவர்
வீரம் மிகுத்திட
தூரப் பகையோட – ஏர்க்
காலைப் பிடித்தவர்
கடின உழைப்பினில்
மிடிமை மறைந்ததோட –தமிழ்
நூலைப் படித்தவர்
நுண்பொருள் மிகுத்திடும்
எண்சுவைக் கவிபாட – செங்
கோலைப் பிடித்தவன்
குலையறு திறத்தால்
நிறையுறும் என்னாடே
உதாரன் : வழமை யானை கற்பனையில்
வாய்க்கும் மோனை எதுகையொடு
பழமைத் தமிழின் திறன்கொண்டு
படைத்த கவிதை நனிநன்று
கிழமை யான நாட்டுநலன்
கிளத்தும் பாங்கும் வெகுசிறப்பு
செழுமை யான நற்கருத்தைச்
சேர்த்துப் பாடிப் புகழ்பெறுக
எண்சீர் விருத்தம்
அமுதவல்லி : இயலென்றும் இசையென்றும்
கூத்தே யென்றும்
இருந்தமிழை மூன்றாக்கல்
நன்றென் றாலும்
மயலாகத் தமக்குள்ளே
பகைமை தோற்றி
மன்னுபுகழ்த் தமிழினந்தான்
மூன்றாய் முட்டி
அயலார்கள் இடைபுகவே
வாய்ப்ப ளித்த
அந்நிலையென் னுள்ளத்தைக்
குலைப்ப துண்டு
செயல்முறையில் தமிழுலகம்
ஒன்றென் றாகிச்
சிந்தைகளி கூறும்நாள்
வந்தி டாதோ
கலிப்பா
ஆயிரம்பல் லாயிரத்
தாண்டுகள் முன்னே
மாயிரு ஞாலத்து
மன்பதை பலவும்
ஏயன அறியா
திருந்திட்ட காலத்தே
அறிவியல் சிந்தனையும்
ஆயபல கலைகளுமாய்ச்
செறிவுமிகு தமிழாலே
சீர்பெற்ற நிலைமாறி
முடிவேந்தர் என்று சொல்லி
மூவேந்தர் தமக்குள்ளே
கடிதாய பகைகொண்டு
நெடிதாய போர் நிகழ்த்த
முறுக்குணா முப்புரி
மொய்ம்பிழந்த வாறாகச்
செறுக்கிழந்து தமிழினந்தான்
தேய்பிரியாய் ஆனதுவே
வயிரம்போல் சிந்தனைகள்
வாய்ப்பாகப் பெற்றிருந்தும்
அயலவர் சிந்தனைக்கு
ஆட்பட்ட காரணத்தால்
மானமே பெரிதாக
மதித்திருந்த தமிழினந்தான்
ஈனமே எனதென்னும்
எளியர்நிலை உற்றதுவே
மொழிதேர்ந்து முன்னுரைக்கும்
முத்தமிழ்ப் புலவோரை
விழிபோலப் பேணியன்று
வீறுபெற்ற தமிழினந்தான்
பெற்றவளை உண்டிக்காய்ப்
பெறுவிலை கூறுவபோல்
நற்றமிழை இகழ்ந்தொதுக்கி
நாணுநிலை உற்றதுவே
எனவாங்கு
மன்னுபுகழ்த் தமிழினம்
எந்நிலை யாகுமென
எண்ணம் பலவாக
இனைந்தேங்கி நினையுங்கால்
பெருங்கடலுள் அலைக்கழியும்
சிறுது ரும்பாய்
உறுவதோர் துயராலே
கலங்குமென் னுள்ளமே
எண்சீர் விருத்தம்
உதாரன் : இனமானம் எனுமொன்றே
உளங்கொ ளாமல்
இறுமாக்கும் தன்மதிப்பே
பெரிதென் றெண்ணும்
மனநிலையால் மாத்தமிழர்
நிலைகு லைந்தார்
மன்பதையின் பேரினந்தான்
குறுகிற் றன்றோ
இனமொன்றே மொழியொன்றே
பேசும் மக்கள்
இணைகின்ற வழியொன்றே
நினைப்போ மானால்
மனமொன்றுந் தமிழகமும்
உருவாம் ; அன்று
மாத்தமிழே வழிகாட்டும்
உலகுக் கெல்லாம்
தன்னாட்சி தன்குடும்ப
ஆட்சி யென்னும்
தன்னலந்தான் தமிழினத்தின்
வீட்சி யாகும்
என்னாட்சி எனுமுணர்வைப்
புறமே தள்ளி
இனமீட்சி யுணர்வாலே
ஒன்று பட்டுத்
தன்னாட்சி தமிழினமும்
பெறுத லொன்றே
தனிவிருப்பாய்த் தமிழரெலாம்
உறுதி பூண்டால்
பொன்னாட்சி தமிழுக்கு
மட்டு மல்ல
புத்துலக மீட்சிக்கும்
வழியென் றாகும்
வழிமரபுப் பெருமையெனுஞ்
சிறப்பில் லாது
வாழுகின்ற சிறுகூட்ட
மக்கள் தாமும்
மொழிமரபு காக்கின்ற
ஆவல் கொண்டு
முனைப்போடு தன்னுரிமைக்
களம்காண் கின்றார்
அழிமரபை விட்டொழித்துத்
தமிழ மக்கள்
அன்னைத்தமிழ் முன்னிருத்தி
மேன்மை காணும்
கெழிமரபே உளங்கொண்டு
கிளர்ந்தெ ழுந்தால்
கிடந்தபுகழ் மீட்சியுற
உலகு போற்றும் (கெழி – நட்பு)
அமுதவல்லி : கண்விற்றே ஓவியத்தைப்
பெறுவா ரில்லை
காதல்தனைக் கைவிட்டு
மகிழ்வா ரில்லை
புண்பட்டுப் பத்துமாதம்
சுமந்த தாயைப்
புறம்போக்கிப் பெறும்வாழ்வில்
மகிழ்வார் போலப்
பண்பட்ட தமிழ்விட்டு
மக்கட் கூட்டம்
பாரிலுறும் மேன்மையிலே
சிறப்பே யில்லை
என்பட்டும் தமிழினத்தின்
மீட்சி யொன்றே
எதிர்காலக் குறிக்கோளாய்க்
கொண்டேன் நானே
ஓங்குகவே தமிழுணர்வு
பொழுதெல் லாமும்
ஒன்றுகவே தமிழருளம்
தமிழின் பேரால்
ஏங்குகவே உலகோரும்
தமிழன் கண்டு
எழுகதமிழ்க் கலைஞர்தமிழ்
உணர்ச்சி கொண்டு
தாங்குகவே தமிழினத்தின்
மேன்மை யொன்றே
தகர்த்திடுக பகைவர்தம்
சூழ்ச்சி யின்றே
நீங்குகவே இனத்துள்ளே
பகையு ணர்ச்சி
நிறுவுகவே நிலைத்ததமிழ்
இனத்தின் மீட்சி
(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி
Leave a Reply