(சித்திரை 13, 2046 / ஏப்பிரல்26, 2015 தொடர்ச்சி)

two-sparrows10

காட்சி – 22

அங்கம்    :     கவிஞர், அன்பரசன்

இடம்      :     குடிலின் முன்வாசல்

நிலைமை  :     (இன்றைய நாட்டு நிலையை

நன்றே கவிஞர் செப்புகின்றார்)

அன் :     கவிஞரே! கருத்துப் பெட்டகமே!

புவியின் உண்மை நிலைதான் என்ன?

கவி  :     இன்றைய நாட்டின் நிலைமைதனை

நன்றே உரைக்கிறேன்! கேட்டு விடு!

சிந்தனை எல்லாம் சோற்றிற்கே – நாளை

செலவிட வேண்டும் இந்நாட்டில் – சோறு

வெந்ததும் சோற்றுப் பந்திக்கே – நாம்

முந்திட வேண்டும் இந்நாட்டில் – தீய

கொடுமையைக் கண்டால் நமக்கென்ன – என

ஒதுங்கிட வேண்டும் இந்நாட்டில் – முடிந்த

கெடுமதி இன்றேல் வாழ்வில்லை – என

வழிபட வேண்டும் இந்நாட்டில்

பணியிங்கு சோறாய்! முதலாளியை – நாம்

பணிந்திட வேண்டும் இந்நாட்டில் – பணி

மணியிங்கு அடித்ததோ! கடன் கேட்க – நாம்

ஓடிட வேண்டும் இந்நாட்டில்

பசப்பும் நடிப்பும் வாழ்வென்றே – இன்று

இலக்கணம் உண்டு இந்நாட்டில் – பிறரை

கசக்கவும், நசுக்கவும் தெரிந்துவிட! நாம்

கற்றிட வேண்டும் இந்நாட்டில்

கனவிலும் நனவிலும் ஏமாற்று – அறிவைப்

பிழிந்திட வேண்டும் இந்நாட்டில் – நாம்

நினைவிலும் மூச்சிலும் பொய்களையே – நாம்

                                                நினைத்திட வேண்டும் இந்நாட்டில்

சிரிக்கவும் கண்ணீர் சொரியவும் கற்க – பல

பள்ளிகள் உண்டு இந்நாட்டில் – தலைவர்

பெருங்கிழத்தை குமரியயன்றால் – ஆமாம்

போட்டிட வேண்டும் இந்நாட்டில்

அன் :     சூழ்நிலை சமய சந்தர்ப்பமறிந்து

வாழ்வது தானே சிறப்பு என்பர்!

கவி  :     நீதிக்காகப் போராடும் எவனும்

உண்மையை எங்கும் உரைப்பவன் எவனும்

வீதியில் உலாவே வருவானேயானால்

வெற்றியோ தானே கழுத்தில் ஏறும்

நடிப்பவன் வாழ்வை நாய் கூட மதியா!

நாடும் காறியத்துப்பவே செய்யும்

துடிப்புடன் வாழும் வாழ்வே வாழ்வு!

இதுவன்றி வாழ்வில் சிறப்பில்லை தம்பி!

அன் :     சுருக்கமாய்க் கொஞ்சம்

நறுக்கென சொல்வீர்

கவி  :     அடங்கவும் வேண்டாம் – பிறரை

அடக்கவும் வேண்டாம்!

“அடக்கம்’ என நீ!

முடங்கவும் வேண்டாம்!

எதிர்ப்பதை எதிர்த்தே நின்றிட வேண்டும்!

ஏற்பதை ஏற்றே வென்றிட வேண்டும்!

விதியயன அழுவதை நிறுத்திட வேண்டும்!

மதியுண்டு என்பதை நம்பிட வேண்டும்!

 

                                                                (காட்சி முடிவு)  

 (பாடும்)