பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 7 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(மார்கழி 27, 2045 / சனவரி 11, 2015 தொடர்ச்சி)
காட்சி – 7அங்கம் : அன்பரசன், கவிஞர்
இடம் : குடில் முன்வாசல்
நிலைமை : (நாடகக் காட்சி முடிந்ததோ! இல்லையோ
ஓடுது! மனமோ அன்புக்கெங்கோ!)
அன்ப : நாடகக் கருத்தை அறியும் முன்பு
ஓடுது என்மனம் ஒன்று கேட்க?
சென்னைக்கு வந்த நோக்கமென்ன?
என்பதே அந்தக் கேள்வி என்பேன்!
கவி : வானத்திலே நாகரீகம்
வட்டமிட்டுச் சுற்றுதென
தேன்வழியப் பேசுகின்ற
சிலர் எனக்குச் சொல்லிடவே
நானுந்தான் வந்தேன்
நாகரீகம் கண்டேன்!
நானிலத்தின் தலைநகரா?
நாணித்தலை குனிந்தேன்!
அன்ப : பார்த்தது தான் சொல்வீரே!
பார்முழுதும் எதிரொலிக்க!
கவி : பெரியதோர் நகரமெனப்
பெருமகிழ்வு கொண்டுவிட
புரியவில்லை எனக்கொன்றும்
புரிந்தோர்க்கு எப்படியோ?
வளமான மாளிகையும்
வானுயர்ந்த கோபுரமும்
களவாடும் பெரியோரின்
கைகளிலே குடியிருக்க
சாலை வழிச் சாக்கடையின்
பாலம் தரும் நிழலின் கீழ்
பால் பருக துவளும் தளிர்
கையயான்றில் கண்தேய்க்க!
பொழிந்து விடக்கண்ணீரோ
வறண்ட ஏரி வயிற்றினிலே!
வழிந்தே ஓடியது
வாழ்வாங்கு சித்திரமாய்!
கால் சுருட்டிக் கை சுருட்டிக்
கால் வயிற்றை உள்ளடக்கி
வால் போன்ற துகிலொன்றை
வரிக்கயிறாய் இடைகட்டி!
சொத் தென்ற பெருமூச்சை
நினைவாக வெளியிட்டு!
நத்தையின் வடிவினிலே
பெற்றவள் படுத்திருக்க!
கொங்கையது தோலாக
கொடுக்கத் துளிப்பாலின்றி!
அங்கமில்லா உருவத்திலே
உயிரொன்று குடியிருக்க!
கந்தலெனக் கந்தலாக
கிடந்தவளோ பால் பருக!
நொந்து அழும் தன் பிள்ளை
படும் பாட்டைத் தானுணர்ந்து!
பேச எண்ண சதிநாவும்
பேசாமல் செய்து விட!
கூசாமல் கண்மூடி
இரு சொட்டு உதிர்த்துவிட்டு!
மூச்சினிலே சொல்லிவிடுவாள்!
நான் பெற்ற கற்பகமே!
ஆச்சம்மா! வெகு நாளும்!
பல்பட்டு கஞ்செனக்கு!
பாலுனக்கு ஊட்டிவிட
வழியேதும் இல்லையம்மா!
நாளும் உயிர் உள்ளவரை
வழி வேறு உண்டென்றால்;
இரவு பகல் வயதென்ற, எண்ணமே இல்லாது,
உறவுனக்குத் தாயயன்றே
ஊட்டிக் கொண்டே நானிருப்பேன்
இப்போது செய்து விட,
ஒன்றுண்டு கேட்டுவிடு;
தப்பாது சேர்ந்து அழ
உயிரொன்று எனக்குண்டு
இப்போதே செய்கிறேன்!
எனச்சொல்லும் தாயங்கே,
எப்போதும் நாவறண்ட,
நாரையாய் நான்கண்டேன்!
மாலையவன் மாய்கின்ற
மங்கலொருபொழுதொன்றில்!
சோலையாம் சாக்கடையில்
எண்ணற்ற அன்னைகளாம்!
வளர்ந்தாகப் புகழும்பாடும்
நாகரீகத்தலை நகரில்
வளரவில்லை சிறிதளவும்
மக்களென்ற மனம் மட்டும்!
அன்ப : வழியொன்று இல்லையாக்கவிஞரே! இந்தப்
பழிபோகும் நாளும் இல்லையா?
கவி : விழியோன்று உண்டு தம்பி! விட்டால்
மொழிவேறு இல்லைத்தம்பி!
வாழ்வென்னும் தராசுதனில்!
வாழ்க்கைதர படிக்கல் வைத்து,
எல்லோர்க்கும் எடை ஒன்றாய்,
நல்கணக்கு காட்டுகின்ற,
கையென்னும் ஓர் அரசை
மெய்யாக நிறுவி விட்டால்;
பிறந்த பயன் பெற்றிடலாம்!
இறந்த பின்னும் வாழ்ந்திடலாம்!
சிலையயன இருப்பது ஏன்?
மனம் வைத்தால்
மலையும் தூளன்றோ;
விலையும் வேறுண்டா?
(காட்சி முடிவு)
(பாடும்)
Leave a Reply