பிரான்சு கம்பன் மகளிரணியின் முத்தான கவிதை மூன்று
பள்ளிக்கு ஏன் செல்ல வேண்டும்?
மரபுக் கவிதையைச் சுவைப்போர் குறைந்து வருவதும், அதைப் புரிந்து கொள்வோர் அருகி வருவதும் கண்கூடு. தொன்று தொட்டு வரும் கவி அரங்கம் அல்லது கவி மலர் என்கிற பாணியில் மக்களைச் சலிப்புற வைப்பதற்கு மாற்றாக அவர்கள் ஊன்றிக் கவனிக்கும் வகையில் அவற்றை அளித்தால் என்ன என்ற எண்ணத்தின் வெளிப்பாடே கடந்த இரு வருட மகளிர் விழாவில் முன் வைத்தக் கவிதைகள். சென்ற வருடம் “வினா-விடை” முறையில் ஒரு கவிஞர் கேட்கவும், மற்றொருவர் விடையளிக்கவும் வைத்த உத்தி நல்ல பயனளித்தது. மக்கள் ஆர்வத்துடன் தாங்களும் மறுமொழியைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தில் கவிதைகளைக் கவனித்தனர். எனவே இவ்வருடம் ஓர் “கவிதை நிகழ்வு” எனப் பெற்றோர் உறங்கும் மகனைப் பள்ளி செல்ல எழுப்புவதாகப், “பள்ளிக்கு ஏன் செல்ல வேண்டும்?” என அளித்தோம். வழக்கமான அறிவு வளர, பண்பு வெளிப்பட என்கிற காரணங்கள் அன்றிப், புதுமை படைத்ததால் கவிதைகள் வரவேற்பு பெற்றன. தந்தை-மகன்-தாய் என்கிற வரிசையில் படிக்கப்பட்டக் கவிதைகள் கீழே: – பிரான்சு கம்பன் மகளிரணி
தாயாய் மாறி உழைத்து விடு!
ஒளியில் உலகம் விழித்தெழுந்தே
ஓடி யாடும் வேளையிலே,
குளித்து, துலங்கும் முகத்தோடு
கூடும் அறிவின் திறத்தோடு,
எளிய மலரின் அழகோடு
ஏற்கும் வாழ்வை வெறுக்கின்றாய்!
துளியும் விரும்பா சோர்வதனால்,
தூக்கம் தழுவித் தொலைக்கின்றாய்!
உழைப்பின் பயனை உணர்ந்தாலும்,
ஓய்ந்தே நாளைக் கழிக்கின்றாய்!
விழைந்தே செயலை ஆற்றாது,
வீணில் சோம்பித் திரிகின்றாய்!
பிழைத்தல் மட்டும் வாழ்வல்ல,
பீடை பிடிக்கும் எழுந்து விடு!
தழைக்கும் மனித குலத்துக்கு,
தாயாய் மாறி உழைத்து விடு!
விதைக்கும் காலம் உறங்கிவிட்டால்,
வதைக்கும் காலம் ஒன்றுவரும்!
சிதைக்கும் உறுதி தனைக்களைந்து,
தீதாம் உறக்கம் கலைத்துவிடு!
உதைக்கும் வயது கடந்ததனால்,
உண்மை இங்கே உரைக்கின்றேன்.
பதைக்கும் மனத்தைப் புரிந்துகொண்டு,
பாங்காய் நடந்து மகிழவிடு!
தலைவன் எனவே நீநடந்தால்,
தொலையும் மக்கள் துன்பமெல்லாம்!
அலைபோல் ஆடும் வாழ்வினிலே,
ஆளும் வழியைக் காட்டிடவே
நிலையாய் நின்று செயலாற்றும்
நீண்ட கடமை உனக்குண்டு!
விலையாய் நீயும் உன்தூக்கம்,
விட்டே ஒழித்து புறப்படுக!
– திருமதி சிமோன்
உறக்கம் என்றால் கேவலமா ?
உனது தூக்கம் சிதறியதால்
உலகம் தூங்கக் கூடாதா ?
எனது தூக்கம் கெடுத்ததினால்
என்ன பயனை நீர்பெற்றீர் ?
மனது முழுதும் துயர்க்காடு !
மனித வாழ்வு பெரும்பாடு !
தினமும் மாறும் வாழ்வினிலே
திறமை மட்டும் போதாது !
உலகம் முழுதும் பார்ப்போமால்
உண்மை வாழ்வு புரிந்துவிடும் !
நிலவும் உலகில் அமைதியில்லை !
நிறைய உழைத்தும் பயனில்லை !
அலையும் வாழ்வில் தூக்கமில்லை !
ஆழ்ந்துப் படித்தால் வேலையில்லை !
எளிதாய் வாழ்ந்து மகிழ்வடைய
எதற்குத் தேவை சுறுசுறுப்பு ?
வாழும் உலகில் காண்பதெல்லாம்
வாழும் மனிதர் மேற்தோற்றம் !
பாழும் நோயில் வீழ்பவரில்
பலத்தைக் காட்டும் வீரனுண்டு !
சூழும் வறுமை நிலைக்கோட்டில்
துடிக்கும் மேதை பலருண்டு !
தாழும் நிலைமை அடைந்தவரில்
தரத்தால் சிறந்த மனிதருண்டு !
நாட்டில் ஆளும் அமைச்சர்கள்
நன்றாய்த் தூங்கி வாழ்கின்றர் !
காட்டில் வாழும் விலங்கினமும்
கவலை யின்றி தூங்குதப்பா !
கூட்டில் வாழும் கிளிகூட
குழந்தைப் போல வாழுதப்பா !
வீட்டில் வாழும் எந்நிலைமை …
விடியும் முன்பே சுப்ரபாதம் ….
உறக்கம் என்றால் கேவலமா ?
உரசிப் பார்ப்பீர் நின்தலையை !
பிறக்கும் குழந்தை தூங்கிவிட்டால்
பெரிதாய் மகிழ்வீர் முகம்விரிய !
மறக்கும் நினைவை உடையவரே !
மறந்துப் போச்சா நின்தூக்கம் ?
அரக்கன் போல மாறிடுவீர் !
அயர்ந்து நானோ தூங்கிவிட்டால்.
உருத்திடும் கண்கள் சிவந்திட
உருவமோ எலும்பாய் மாறிட
வருத்திடும் வலியில் துடித்திட
வாவென நோயை அழைக்கவா ?
மருத்துவ மனைக்குச் செல்லவா ?
மாத்திரை நின்போல் உண்ணவா ?
கருத்துடன் கேளும் யோசனை !
காலையில் என்போல் தூங்குவீர் !
– திரு சமரசம்
முதல்வனும் நீயே அன்றோ!
கல்வியாம் செல்வம் பெற்று ,
கற்றவன் எனும்பேர் கொண்டாய்!
வல்வினை மாற்றும் மாய
வழியினைப் பிறர்க்குச் சொல்லும்
துல்லிய பொருள் கண்டு,
தூய்மையாய் அருள் விளக்கும்
நல்லறி வூட்டும் உன்னை,
நற்பயன் ஆகப் பெற்றேன்!
சிரித்திடும் மழலைச் செல்வம்,
சீர்பெற உந்தன் சேவை
விரித்திடும் வான எல்லை
வரிக்கவோர் துணையும் நீயே!
பரிந்திடும் அன்பால் போற்றி,
பணித்திடு அவர்தம் வேலை!
தரித்திடும் வருமோர் காலம்,r
தக்கதோர் தலைமை என்றே!
பண்புண்டு, பகிரும் உன்பால்
பாசமுண்டு, துடைக்கும் துன்ப
உண்மையுண்டு, உழைக்கும் மாறா
உரமுண்டு! களையாய் உன்னில்
தண்மதியின், கறைபோல் சோம்பல்
தளையுண்டு! அதனை விட்டால்
கண்மணியே, உன்போல் சுட்டிக்
காட்டிடவே யாருண் டிங்கே!
வீணிது கடத்தும் நேரம்,
விழித்திடு தூக்கம் போதும்!
காண்பது கனவும் அல்ல,
கேட்பது முறையும் அன்று!
நாணின்று அம்பே போல,
நடந்திட விரைந்து செல்க!
மாண்புறு வகையில் பள்ளி
முதல்வனும் நீயே அன்றோ!
வணக்கம்!
முத்தான மூன்று கவிதைகளை நான்கண்டு
பித்தான நெஞ்சால் பிதற்றுகிறேன்! – கொத்தான
தாழைமடல் போல்மணக்கும் தண்டமிழ்! வாழ்த்துகிறேன்
வாழையடி வாழையென வந்து
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
கவிதைப்பின்னூட்டத்திற்கு நன்றி. தாங்களும் அகரமுதல இதழுக்குக் கவிதைகள்,கட்டுரைகள் அளிக்கலாமே! இலக்கியத் தொண்டாற்றும் மகளிர் அணியினருக்குப் பாராட்டினைத் தெரிவியுங்கள்.
அன்புடன்,
இலக்குவனார் திருவள்ளுவன், ஆசிரியர்