புதியதோர் தமிழுலகம் புவியில் தோன்றும்! 

 

கி.மு.வில் ஆயிரத்து ஐந்நூறாம் ஆண்டதனில்

சேமம் நாடியிங்கு நாடோடிக் கூட்டமொன்று

மலைமொழிப் பேச்சுடனே நிலைதேடி வந்தார்கள்

ஆரியராய் இம்மண்ணில் அடிவைத்த அந்நியர்கள்.

செந்தமிழ்ச் சீருடைய  சிறப்புமிகுப் பைந்தமிழன்

இந்தியத் திருமண்ணில்  எங்கும் குடியிருந்தான்

வந்தாரை வரவேற்கும் வாசமிகு  தமிழனவன்

தந்தான் தனதுரிமை தடம்தேடி வந்தோர்க்கு.

அந்நியனாய் வந்தவனும் ஆளத்தொடங்கி இங்கு

அழித்திட்டான் தமிழ்ப்பண்பை அவன்வகுத்த குலப்பிரிவால்.

ஆரியரும்  தமிழருடன்  அருகிப் பழகியதால்

அன்றாட வாழ்விலவர் ஆதிக்கம் பெருகிற்று.

ஆரியரின்  ஆட்சிக்கு ஆட்பட்டான்  தமிழ்மகனும்.

ஆரியர்க்கோ தேவையவர் ஆட்சிக்கு அறநூல்கள்;;

அதற்கான நூற்பொருளும் அன்றில்லை ஆ+ரியர்பால்.

ஆரியரின் தேவைகளை ஆக்கிப் படைத்திடவே

அறனறிந்து மூத்த அறிவுடைத் தமிழ்ப்புலவோர்

செய்தனர் அவர்மொழிக்கு சிறப்பான எழுத்துருவும்

சமைத்தனர் சமற்கிருதம் சமயநூல் ஆக்கிடவே.

சங்கத் தமிழ்நூல்கள் சாற்றைப் பிழிந்தெடுத்து

ஆக்கினர் சமற்கிருத அறநூல்கள் ஆரியர்க்கே.

தான்சமைத்த மொழியெனலால் தான்வடித்த நூலெனலால்

தமிழ்மகனும் தடம்புரண்டான் தனையிழந்தான் அவனான்.

வடமொழிக்குத் துணைநின்றான் வந்தவழி மறந்துவிட்டான்.

வருணா சிரமத்தின் வடிகாலாய் செயல்பட்டான்.

வடமொழியின் ஆட்சியினர் தென்புலத்தை ஆண்டதனால்

வடமொழியின் தாக்கமது வாட்டியது தமிழ்மொழியை.

மக்கள் வழக்காற்றில் மாசுற்ற தமிழிங்கு

பக்கக் கிளைவிட்டு தெக்கண மொழிகளென

தமிழோடு மலையாளம் கன்னடம் தெலுங்கென்று

துளுவும் சேர்ந்திங்கு துளிர்த்தன பலமொழிகள்.

இந்த வழக்காற்றில் இருந்ததனால் தமிழ்மக்கள்

சொந்தத் தனித்தமிழில்  சொல்லாற்றும் நிலையிழந்தார்.

கந்தலாய் வடமொழியைக் கலந்து பேசலுற்றார்.

கடவுள் மொழியென்று கண்மூடித் தனமாக

வடமொழி வழிபாட்டில் வலைப்பட்டார் வழக்குற்றார்

இந்த நிலைகளைய இனியதமிழ் காக்க

வந்தார்கள் அறிஞர்பலர் வரிசையாய் இம்மண்ணில்

பரிதிமால் கலைஞரவர் பாரில் அவதரித்தார்

பார்போற்றும் மறைமலையும் பாரில் வந்துதித்தார்

திருவிக உருவானார்  திருத்தமிழைப் போற்றுதற்கு

பாரதியும் தோன்றியொரு தாசனையும் படைத்திட்டார்

முப்பால் தமிழுக்கு மொழிவேந்தர் பாவாணர்

தப்பாமல் அவதரித்தார் தனித்தமிழை வளர்த்திடவே

இந்த வரிசையிலே வந்த பாவேந்தர்

வாழ்ந்த காலத்தில் பரங்கியரின் ஆதிக்கம்

பரங்கியரின் ஆட்சியிலே பதப்பட்ட தமிழரெலாம்

கரங்கொண்டார் ஆங்கிலத்தை; கருத்தழிந்தார் தமிழ்மறந்தார்.

நாள்தோறும் நாள்தோறும் நலிந்தழியும் தமிழினத்தை

மீட்கத் துடிதுடித்தார்  மிடுக்குடனே பாவேந்தர்.

“முதல்மாந்தன் தமிழன்தான் முதன்மொழியும் தமிழேதான்

மூதறிஞர் நெறிமுறைகள் கண்டதிந்தத் தமிழ்மண்தான்

நான்மறையை உலகிற்குத் தந்தமொழி தமிழ்மொழிதான்”

என்றுபல உண்மைகளை எடுத்துரைத்த பாவேந்தர்

தீந்தமிழை உயிரென்றார் தெவிட்டாத கனியென்றார்

அமுதென்றார் நிலவென்றார் மணமென்றார் மதுவென்றார்

அறிவுக்குத் தோளென்றார் பிறவிக்குத் தாயென்றார்.

உயிரனையத்  தமிழ்மொழியின் உயர்வறியா தமிழ்மக்கள்

உறங்கும்  நிலையறிந்து உள்ளம் நெருப்பாகி

நெஞ்சு பதைபதைத்தார் நிலைநீக்கக் கவிபடைத்தார்

தமிழியக்கம் பாடியிவர் தமிழற்கு ஆணையிட்டார்

பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையுமே

படைத்திடவே  துடித்தெழுவீர்  தொண்டு செய்வீர்

துறைதோறும் துறைதோறும் தமிழுக்கு என்றுரைத்தார்.

தமிழ்நாட்டை  தமிழ்நாடாய்க் காணத் துடிதுடித்தார்.

‘தமிழ்மொழியைத் தமிழாகப் பேச வேண்டும்

தமிழில்தான் எத்துறையும் ஆள வேண்டும்

தமிழ்வழியே கற்பித்தல் நிகழ வேண்டும்

தமிழாலே ஆலயத்தில் தொழுதல் வேண்டும்

தமிழரெலாம் தமிழ்ப் பெயரைத் தாங்க வேண்டும்’

என்றுபல கனவுகண்டார் எழுச்சிக் கவிபடைத்தர்.

என்னசெய்தோம் நாமிங்கு  ஏனில்லை மாற்றமிங்கு!

அரங்குகளில் பேசுகின்றோம் அடைந்த பயனுமென்ன!

அதிகாரம் கொண்டுள்ளோம் ஆனாலும் செய்ததென்ன!

அதிகாரம் உள்ளவர்கள் நினைத்தால் நிலையுயரும்

துணைவேந்தர் செயல்பட்டால் துறைகள் தமிழாகும்

ஆட்சியர்கள் செயல்பட்டால்  ஆட்சிமொழித் தமிழாகும்

கற்றறிந்து பெரும்பொறுப்பில் பணிபுரியும் வல்லுநர்கள்

உற்றதமிழ் உணர்வினராய் உயர்தமிழைப் போற்றுவரேல்

மற்றபிற மக்களெலாம் மலர்ந்திடுவர் தமிழர்களாய்.

ஆங்கிலத்தைப் பயின்றுபணி ஆற்றிவரும் அறிஞரெலாம்

தங்களது தனிப்பண்பு தமிழ்ப்பண்பே என்றுபோற்றி

தயங்காமல் செயல்பட்டால்  தழைக்கும் நல்ல

தமிழுலகம் இப்புவியில் தானாய்த் தோன்றும்.

கற்றறிந்த தமிழுலகே கடிதே வாரீர்!

நற்றமிழர் பாவேந்தர் பிறந்த நாளில்

பற்றுடனே அவர்கண்ட கனவை யெல்லாம்

ஒற்றுமையாய் செயல்பட்டு வெல்வோம் என்று

 உறுதிமொழி கொள்வோம்நாம் உவந்து வாரீர்!

முனைவர் பொறி.மு.பொன்னவைக்கோ

[பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 29.4.2009 அன்று நிகழ்ந்த  பாவேந்தர் பாரதிதாசனின் 119-ஆம் பிறந்தநாள் விழாவில் வழங்கிய பா மலர்]