(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5   காட்சி : 2 தொடர்ச்சி)

புதிய புரட்சிக்கவி
களம் : 5 காட்சி : 3

அரசவை. அரசன், அமைச்சர் முதலியோர்.
உதாரன் வீரர் சூழ நிறுத்தப்பட்டிருக்கிறான்.
சிந்து கண்ணி

அரசன் : கொற்றவன் பெற்ற குலக்கொடியை – கவி
கற்க உன்பால் விடுதேன் – அடக்
குற்றம் புரிந்தனையா இல்லையா இதை
மட்டும் உரைத்துவிடு
வெற்றி எட்டுத்திக்கும் முற்றிலுஞ் சென்று
மேவிட ஆள்பவன் நான் – அட
இற்றைக்கு நின்தலை அற்றது -மற்றென்னை
என்னென்றுதான் நினைத்தாய்

  வாள்பிடித்தே  புவியாளும்   இராசர்   - என்
    தாள்பிடித்தே  கிடப்பார்
  ஆள்பிடித்தால்  பிடியொன்    றிருப்பாய்   என்ன
    ஆணவமோ  உனக்கே
  மீள்வதற்கோ இந்தத்   தீமைபுரிந்தனை
    வெல்லத்   தகுந்தவனோ  இல்லை
  மாள்வதற்கே இன்று    மாள்வதற்கே இனி
    மண்ணுலகில் உனக்கும்    வாழ்வில்லை

உதாரன் : மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் – முகில்
வார்க்கும் மழை நாடா – குற்றம்
ஆமென்று நீயுரைத்தால் குற்றமே குற்றம்
அன்றெனில் அவ்விதமே
கோமகள் என்னைக் குறையிரந்தாள் – அவள்
கொள்ளை வனப்பினிலே என்னைக்
காமனுந் தள்ளிடக் காலிடறிற்றுக்
கவிழ்ந்த வண்ணம் வீழ்ந்தேன்

  பழகும்   இருட்டினில்   நானிருந்தேன்
    பால்நிலா    ஆயிரம்போல்     - அவள்
  அழகு    வெளிச்சம்    அடித்தது     என்மேல்
    அடியேன்   செய்த   தொன்றுமில்லை
  பிழைபுரிந்தேன் என்று    தண்டனை   போடுமுன்
    பெற்று   வளர்த்த   உன்றன்
  இழைபுரிச்    சிற்றிடை    அமுதவல்லிக் குள்ள
    இன்னல்   மறப்ப    துண்டோ

நொண்டிச் சிந்து
அரசன் : புவியாளும் எனது ஆட்சியிலே – என்
உறவுக் கென்றோர் நீதியில்லை
குவிந்தஉன் உடற்சதையைப் பல
கூறிட்டு நரிதின்னக் கொடுத்திடுவேன்
தவந்தனில் ஈன்ற என்பெண் – மனம்
தாங்குவ தில்லையெனில் கவலையில்லை
நவிலும்உன் பெரும்பிழைக்கே – தக்க
ராச தண்டனை யுண்டு மாற்றமுண்டோ

  அரசனின்   புதல்வி   அவள் - எனில்
    அயலவ    னிடம்மனம்    அடைதலுண்டோ
  சரச     நிலையி   லிருந்தீர்   - அந்தத்
    தையலும்   நீயும்     அத்தருண மதில்
  இருவிழியாற் பார்த்தேன்    - அறி
    விலி      உனதொரு  குடி அடியோடே
  விரைவில்    எனதாட்சியிலே  - ஒரு
    வேரின்றிப்   பெயர்த்திட விதித்துவிட்டேன்

  கொலைஞர்கள்   வருக   இங்கே  - இக்
    கொடியவனைக்   கொண்டு   சென்றே
  சிலையிடை    நிறுத்தி    வைத்தே   - சிரச்
    சேதம்      புரிக      இன்றே

அமுதவல்லி (அலறலுடன் ஓடி வந்து):
இலையுனக் கதிகாரம் – அந்த
எழிலுடையான் பிழை இழைக்கவில்லை
சிலைநிகர் கன்னிநான் – அந்தச்
செந்தமிழ் வேந்தனை வரித்திட்டேன்
ஒருவனும் ஒருத்தியுமாய் மனம்
உவந்திடல் பிழையென உரைப்பதுண்டோ
அரசென ஒருசாதி – அதற்
கயலென வேறொரு சாதியுண்டோ
கரிசனநால் வருணந் தனைக்
காத்திடுங் கருத்தெனில் இலக்கணந்தான்
தரும்படி அவனை யிங்கே – நீ
தருவித்த வகையது சரியாமோ

  என்மனம்   காதலனைச்  - சென்
    றிழுத்தபின்   னேஅவன் இணங்கின தால்
  அன்னவன்   பிழையில   னாம்  - அதற்கு
  அணங்கெனைத்   தண்டித்தல்    முறை  யெனினும்
  மன்னநின்    னொருமகள்  நான்  - எனை
    வருத்திட     உனக்கதி    காரமில்லை
  உன்குடிக்    கூறிழைத்    தான்  - எனில்
    ஊர்மக்க   ளிடமதை  உரைத்தல் கடன்

(அமுதவல்லி உதாரனிடம் சென்று அவனை நோக்கியிருந்த
வேல்களைத் தள்ளி விடுகிறாள்)

கும்மி
அரசன் (சினந்தெழுந்து) :
நாயை இழுத்துப் புறம் விடுப்பீர் – கெட்ட
நாவை யறுத்துத் தொலைக்கு முன்னே
– இந்தப்
பேயினை நான்பெற்ற பெண்ணெனவே – சொல்லும்
பேச்சை மறந்திடச் சொல்லிடுவீர் – என்
தூய குடிக்கொரு தோசத்தையே தந்த
துட்டச் சிறுக்கியைக் காவற்சிறை – தன்னில்
போய டைப்பீர் அந்தப் பொய்யனை – ஊரெதிர்
போட்டுக் கொலை செய்யக் கூட்டிச் செல்வீர்

அமைச்சன்: பொன்னம் பெரிய தாம் பருந்தையும் – இடை நின்றே தடுத்திடும் சிறு பெட்டையும் – தன்
சின்னஞ் சிறிய வய தாலே – குலப்
பெருமைக் கேலா தசெய் தாலும் – யாம்
உன்னை யிழந்த பின் னாலே – இந்த
நாட்டை யாள அவள் ஒருத்தியே  – நீதி
அன்றிது மங்கைக் கிழைத் திருக்கும் தண்டம்
அன்னதை நீக்கி யருள்க மன்னா 

எண்சீர் விருத்தம்

அமுதவல்லி : மிகையாக மலரொன்று
குறுக்கிட் டாலும்
மீட்சியிலா உயிர்துறக்கும்
அன்றி லென்பார்
பகைவிலங்கு ஆண்குரங்கைக்
கொன்று விட்டால்
பாறையின்கீழ் வீழ்ந்திறக்கும்
மந்தி யென்பார்
பகைக்கஞ்சிப் புறந்தந்தான்
மகனே யென்றால்
பால்தந்த மார்பைநான்
அறுப்பே னென்ற
நகைப்பில்லா நங்கைகுலம்
வந்த வள்தான்
நற்காதல் கொண்டானை
விட்டு வாழாள்

      காதலனைக்      கொலைக்களத்துக்
        கனுப்பக்    கண்டும்
        கன்னியெனை  மன்னிக்கக்
        கேட்டுக்    கொண்ட
      நீதிநன்று      மந்திரியே
        அவனி    றந்தால்
        நிலைத்திடுமென் உயிரெனவும்
        நினைத்து    விட்டாய்
      சாதலெனில்      இருவருமே
        சாதல்      வேண்டும்
        தவிர்தலெனின்  இருவருமே
        தவிர்தல்    வேண்டும்
      ஒதுகஇவ்     விரண்டிலொன்று
        மன்ன      வன்வாய்
        உயிரெமக்கு   வெல்லமல்ல
        மன்றி      லுள்ளீர்

அரசன் : என்ஆணை மறுப்பீரோ
சபையி லுள்ளீர்
இசைகிடந்த என்செங்கோல்
தன்னை வேற்றோர்
பின்நாணும் படிசும்மா
இருப்ப துண்டோ
பிழைபுரிந்தால் நான்சகியேன்
உறுதி கண்டீர்
என்ஆணை என்ஆணை
உதார னோடே
எதிரிலுறும் அமுதவல்லி
இருவர் தம்மைக்
கன்மீதி லேகிடத்திக்
கொலைசெய் வீர்கள்
கடிதுசெல்வீர் கடிதுசெல்வீர்
காலந் தாழ்த்தீர்

அமுதவல்லி : அவையினிலே அசைவில்லை
பேச்சு மில்லை
அச்சடித்த பதுமைபோல்
இருக்கின் றார்கள்
சுவையறிந்த பிறகுணவின்
சுகம்சொல் வாரோ
தூயவனே என்காதல்
துரையெ கேளாய்
எவையும்நமைப் பிரிக்கவில்லை
இன்பங் கண்டோம்
இறப்பதிலே ஒன்றாவோம்
அநீதி செய்த
நவையுடைய மன்னனுக்கு
நாட்டு மக்கள்
நற்பாடங் கற்பியாதி
ருப்ப தில்லை

      இருந்திங்கே     அநீதியிடை
        வாழ     வேண்டாம்
        இறப்புலகில் இடையறாத
        இன்பங்   கொள்வோம்
      பருந்தும்கண்    மூடாத
        நரியும்   நாயும்

பலிபீட வரிசைகளும்
கொடுவாள் கட்டும்
பொருந்தட்டும் கொலைசெய்யும்
எதேச்சை மன்னன்
பொருந்தட்டும் பொதுமக்கள்
ரத்தச் சேற்றை
அருந்தட்டும்  அறத் தொடுபுறங்
கண்ட நாட்டில்
அருங்காதல் செத்தொழிய
அறம்நா ணட்டும்

       (இருவரையும் கொலைஞர் அழைத்துச் செல்கின்றனர்)

(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி