புரட்சிக் கவிஞர் புகழுடன் எய்தினார் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
தமிழிலக்கிய வானில் எழிலுறு ஞாயிறாக இலங்கித் தம் இன்றமிழ்ப் பாக்கதிர்களால் மூட நம்பிக்கை இருளைப் போக்கிக் கொண்டிருந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சித்திரைத் திங்கள் 9ஆம் நாளில் (21-4-64இல்) பூதவுடல் நீக்கிப் புகழ் உடல் எய்திவிட்டார். அச்சமின்றி ஆண்மையுடன் அடிமை நிலையை எதிர்த்து அழகிய பாடல்களை எழுதிய கைகள் அயர்ந்துவிட்டன; சூழ்ந்திருப்போர் விருப்பு வெறுப்பினை நோக்காது உள்ளத்தில் தோன்றியனவற்றை ஒளிமறைவின்றி முழங்கிய வாய் ஓய்ந்துவிட்டது. எழுபத்துமூன்று ஆண்டுகள் இவ்வுலகில் நடமாடிய கால்கள் சாய்ந்துவிட்டன. இனி நம் ஏறனைய பீடு நடைப்பெரும் புலவரைப் பூதவுடலில் யாண்டுமே காண இயலாது. ஒப்பாரும் மிக்காருமின்றி உயர்பெரும் புரட்சிக் கவிஞராய் மக்களுளங்களில் இடம் பெற்றிருந்த பாரதிதாசனார் பாரைவிட்டுப் பிரிந்துவிட்டார்.
‘‘நெருநல் உளன் ஒருவன் இன்றில்லையென்னும்
பெருமையுடைத்தன்றோ இவ்வுலகு’’.
பலவகை மூட நம்பிக்கைகளால் பாழ்பட்டிருந்த தமிழக மண்பதையை உய்விக்கத் தோன்றி உலையாது பணியாற்றிய பெரியார் ஈ.வே.இராமசாமி வழிநின்று புதுமுறைத் தமிழ்ப் பாடல்களைக் கருவியாகக் கொண்டு சாதிக் கொடுமை, பெண்ணடிமை, புரோகிதப் பாம்பு முதலியவற்றை எதிர்த்துப் போராடிப் புகழ் பெற்றார். சங்ககாலப் புலவர்களைப் போன்றும் இற்றைநாள் மேனாட்டுக் கவிஞர்களை ஒத்தும் இயற்கையையும் மக்கள் வாழ்வையுமே பாடற்பொருளாகக் கொண்டார். எத்துறையிலும் அடிமைப்போக்கை மறுத்து முழங்கியமையால் ஆங்கிலப் புலவர்களில் செல்லி, பைரன், வேர்ட்சுவொர்த்து போன்றவர்கட்கு ஒப்பாகப் போற்றப்பட்டார்.
ஏனையநாடுகளில் தோன்றியிருப்பரேல் இவர்க்கு உலகப் பெரும் புகழ் எளிதில் கிட்டியிருக்கும். தம்மவரை மதிக்காத தமிழ்நாட்டில் தோன்றிவிட்டார்.
அயல்நாட்டு ஆங்கிலப் புலவராம் சேக்சுபியரின் நானூறாவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் ஆர்வம் காட்டும் நம்நாட்டு இதழ்கள் அதில் நானூற்றில் ஒரு பங்கு கூட அவர் மறைந்த செய்தியை வெளியிட்டு வணக்கம் செலுத்துவதில் ஆர்வம் கொண்டில. கவிஞராக மட்டுமின்றி நாடக ஆசிரியராகவும் திரைக்கதை, உரையால் எழுதும் கலைஞராகவும், சீர்திருத்தப் பெரியாராகவும் திகழ்ந்த இவரை நாம் என்றும் மறத்தற்கின்று.
தமிழ் மொழியினிடத்தில் தணியாத ஆர்வமும் அதைக் காத்து ஓம்புவதில் உலையா முயற்சியும் உடையவர்.
‘‘யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்’’.
என்று உண்மையை ஒளியாது கூறிய அவரது குருவெனக் கருதப்படும் தேசீயப் பெரும் புலவர் பாரதியாரினும் பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ்ப் பற்று அளவிட்டுரைக்க இயலாததாகும். பாவேந்தர் இயற்றியுள்ள ‘இன்பத்தமிழ்’ எனும் பாடலும், ‘‘தமிழியக்கம்’’ நூலும் தக்க சான்றுகளாகும்.
‘‘இன்பத்தமிழ்’’ எனும் பகுதியில்
தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’’
‘‘தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்குவேல்’’
‘‘தமிழ் எங்கள் பிறவிக்குத்தாய் – இன்பத்
தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்றதீ’’
என்று அவர் தமிழார்வம் பொங்கிப் பொலிவதைக் காணுங்கள்.
தமிழியக்கத்தில் பல்வேறு நிலையில் உள்ளவர்களும் தமிழ்ப்பற்றும் புலமையும் உடையோராய்த் தமிழைக் காத்தல் வேண்டும் என்பதை அழகுற ஆண்மையுடன் எடுத்தியம்பியுள்ளார்.
‘‘அரசியல் சீர்வாய்ந்தார்’’ எனும் பகுதியில்
‘‘தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டில்
முதலமைச்சராய் வருதல் வேண்டும்.
தமிழ்ப் பகைவன் முதலமைச்சராய்த் தமிழ்நாட்டில்
வாராது தடுத்தல் வேண்டும்’’
என்று அறைகின்றதை அறிமின்.
இந்தி முதன்மையை எதிர்த்துப் புலவரை நோக்கிப் பின்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
‘‘சொந்தமொழி பயின்றிடற்குத் திட்டம் செய்யார்
சோ தாக்கள், தறுதலைகள், ஒன்றுசேர்ந்தே
இந்தியினைப் பொது மொழியாய்க் கொள்கவென்றே
இந்நாட்டில் வற்புறுத்தல் செய்தோர் அந்தோ!
இந்தியிலே இலக்கணமோ கலைப்பெருக்கோ
எள்ளளவும் கிடையாதே! ஆளவந்தார்
செந்தமிழ்க்கு வல்லூறாய் வாய்த்தார் என்ற
செய்தியினை யறிந்தாலே சிரிக்கும் வையம்
கொந்தளிக்கும் தமிழ்ப் புலவீர்! தமிழைத் தீயர்
கொன்றழித்தால் நும்வாழ்வு சிறப்பதெங்கே?
செந்தமிழைக் காத்திடற்கு நீவிரெல்லாம்
சேர்ந்தொன்றாய்க் களநோக்கி விரைந்து வாரீர்.’’
இவ்வாறு தமிழைக் காக்க அல்லும் பகலும் அயராது உழைத்த அரும்பெரும் பாவலர் இவ்வவனியினின்றும் அந்தோ அகன்றுவிட்டாரே!
அன்னைத் தமிழ்காக்க இனியாருளர்?
Leave a Reply