– தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(பங்குனி 30, தி.ஆ.2045 / , ஏப்பிரல் 13, 2014 இதழின் தொடர்ச்சி)

tholkappiyar01

61 க, த, ந, ப.ம எனும் ஆவைந்து எழுத்தும்

எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே.

க, த, ந, ப.ம எனும் = க,தந,ப,ம என்று சொல்லப்படும் ஆவைந்து எழுத்தும் = அந்த ஐந்து எழுத்துகளும், எல்லா உயிரோடும் = எல்லா (பன்னிரண்டு) உயிர்களுடனும், செல்லுமார் முதலே = முதல் எழுத்துகளாக வருவதற்குச் செல்லும்.

மேல் நூற்பாவில் மெய் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்களோடு தான் சேர்ந்து வரும் என்று கூறியவர், இந்நூற்பாவிலிருந்து இன்னின்ன மெய்யோடு சேர்ந்து வரும் என்று கூறத் தொடங்குகின்றார். இத்தகைய வரையறை ஆங்கிலம் போன்ற மொழிகளில் இல்லை. இவ்வரையறையால் இலக்கணக் கட்டுக் கோப்பும் மொழியின் வரலாறும் அறியப்படும்.

62. சகரக்கிளவியும் அவற்றோற்றே

அ, ஐ, ஔ எனும் மூன்று அலங்கடையே.

சகரக்கிளவியும் = சகரமாகிய எழுத்தும், அ, ஐ, ஔ எனும் = அ, ஐ, ஔ என்று சொல்லப்படும் மூன்று அலங்கடை = மூன்று எழுத்துக்களும் அல்லாத இடத்து, அவற்றோரற்றே = மேற்சொல்லப்பட்டவை போல எல்லா உயிர்களோடும் சேர்ந்து மொழிக்கு முதலாகிவரும்.

‘ச்’, அ, ஐ, ஔ என்பவற்றோடு சேர்ந்து (ச, சை, சௌ) மொழிக்கு முதலாகி வராது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ‘ச’வை முதலாக உடைய பல தமிழ்ச் சொற்கள் பழைய இலக்கியங்களில் காணப்படுகின்றன. ஆகவே இச்சொற்கள் எல்லாம் தொல்காப்பியர்க்குப் பின்பு தோன்றியவை என்று அறிதல் வேண்டும். இந்நூற்பா தொல்காப்பியர் காலத்தை அறுதியிடுவதற்குத் துணை புரிகிறது.

சை, சௌ, எழுத்துக்களை முதலாக உடைய சொற்கள் எல்லாம் அயல்மொழிகளைச் சார்ந்தனவே. இவற்றை முதலாகவுடைய தனித்தமிழ்ச் சொற்கள் இலை.

63. உ. ஊ, ஒ, ஓ என்னும் நான்கு உயிர்

வ என் எழுத்தொடு வருதல் இல்லை.

‘வ’ என் எழுத்தொடு = ‘வ்’ என்னும் மெய்யெழுத்தோடு உ, ஊ, ஒ, ஓ என்னும் = உ, ஊ, ஒ, ஓ என்று சொல்லப்படும், நான்கு உயிர் = நான்கு உயிர் எழுத்துக்களும், வருதல் இல்லை = வருவது கிடையாது.

வு, வூ, வொ, வோ என்பன இன்னும் மொழிக்கு முதலில் வருவதில்லை.

ஆ, எ, ஒ எனும் = ஆ, எ, ஓ என்று சொல்லப்படும். மூவுயிர் = மூன்று உயிர்களும், ஞகாரத்து உரிய = ‘ஞ்’ என்னும் மெய்யொடு சேர்ந்து மொழி முதலாக வருவதற்கு உரிய.

ஞா, ஞெ, ஞொ என்பனவே தொல்காப்பியர் காலத்தில் மொழிக்கு முதலாகி வந்தன. சங்க இலக்கியங்களில் ‘ஞமலி’ என்னும் சொல்லும் காணப்படுகின்றது. இச்சொல் தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இல்லை என்று அறிய இயலுகின்றது. இச் சொல் (ஞமலி) வழக்குக்கு வருவதற்கு முன்னர் தொல்காப்பியர் வாழ்ந்தவராதல் வேண்டும்.

65. ஆவோடல்லது யகரம் முதலாது.

‘ஆ’வோடு அல்லது = ‘ஆ’வோடு அல்லாமல், யகரம் = ய’ என்னும் மெய், முதலாவது = மொழிக்கு முதலில் வராது.

‘யா’ ஒன்றுதான் தொல்காப்பியர் காலத்தில் மொழிக்கு முதலில் வந்துள்ளது.

சங்க இலக்கியங்களில் ‘யவனர்’ என்ற சொல் பயின்றுள்ளது. ‘யவனர்’ என்பது கிரேக்க நாட்டுச் சொல்லாகிய ஐயோனியன்’ என்பதன் திரிபாகும். இச்சொல் காலப்போக்கில் உரோமன் நாட்டவரையும், அரபியரையும் குறித்துள்ளது.

தொல்காப்பியர் காலத்தில் கிரேக்க நாட்டார் தொடர்பு தமிழர்க்கு இல்லை; அவர் காலத்திற்குப் பின்னரே கிரேக்க நாட்டார் தொடர்பை தமிழர் பெற்றிருத்தல் வேண்டும். ஆகவே தொல்காப்பியர் காலம் கிரேக்க நாட்டார் தமிழ்நாட்டோடு தொடர்பு கொள்வதற்கு முன் உள்ள காலமாகும் என்று தெளியற்பாலது.

பவணந்தியார் தம் நன்னூலில் ‘அ, ஆ, உ, ஊ, ஒ, ஓள, யம்முதல்’ என்றார். ஆதலின் பவணந்தியார் காலத்தில் ‘யுகம், யூகம், யோகம், யௌவனம்’ எனும் சொற்கள் தமிழில் கலந்து  விட்டன என அறியலாம். இவை யாவும் வட சொற்களே.

66. முதலா ஏன தம் பெயர் முதலும்.

முதலா ஏன = மொழிக்கு முதலில் வராத ஏனைய மெய்களும், தம் பெயர் = தம்பெயரைக் கூறுங்கால், முதலும் = மொழிமுதலாகி வரும்.

காட்டு: ‘ங’வை நீக்கு ‘ட’வைக் கூட்டு.

(தொடரும்)