(பூங்கொடி 5 – கவிஞர் முடியரசன்: தமிழ்த் தெய்வ வணக்கம் தொடர்ச்சி)

1. விழாவயர் காதை

தமிழகச் சிறப்பு

அலையெழு நெடுங்கடல் ஆடை உடீஇய

நிலமகள் தனக்கு நிறைமதி முகமெனும்

 நாவலந் தீவின் நாடியாய் விளங்கும்

பாவலர் புகழ் தரு பண்டைத் தமிழகம்

மேவலர் அணுகா வீரங் கெழுமிய

காவலர் மூவர் கயல்புலி வில்லெனும்

கொடிமூன் றுயர்த்திக் கோலோச் சியது ;

சங்கம் நிறீஇத் தமிழ்மொழி ஓம்பிப்

பொங்கும் புகழ்வரப் பொலிந்த நன்னாடு;

‘யாதும் ஊரே யாவருங் கேளிர்’ என்

றோதி ஓதி உயர்ந்ததோ டன்றி

வருபவர் தமக்கெலாம் வணங்கி வரவுரை

தருவது தொழிலாய்த் தான்கொண் டதுவே.

                 பொங்கல் வந்தது

அயலவர் மொழிக்கெலாம் ஆளுகை தருதல்

தவறென உணரார் தாய்மொழி ஈங்குச்

3

சிறுகச் சிறுகச் சீரிழங் தேகுதல்

அறியக் காணுர் அயர்ந்தனர்; அந்நாள்

 பொங்கல் நாளெனும் மங்கலத் திருநாள்

எங்கணும் மகிழ்ச்சி இலங்கிட வந்தது;

அறிக்கை விடுதல்

கட்சி சமயங் கருதிடா நல்லோர்

நச்சி ஒருசிலர் நாட்டு மக்கட்கு

ஆய்ந்து வரைந்ததோர் அறிக்கை அனுப்பினர்;

விழாக் கொண்டாடுக

 ‘தமிழர் திருநாள் தைமுதல் நாளாம்

அமிழ் தென இனிக்கும் பொங்கல் திருநாள்

உழைப்பின் உயர்வை உணர்த்தும் பெருநாள்

சளைப்பிலா முயற்சி தருபயன் பெற்றுப்

புதுமை இன்பம் பூணும் நன்னாள்

இதுவே பெருவிழா எனக்கொண் டாடுக;

ஆங்காங் குறையுநர் அயலவர் பண்புகள்

நீங்கிய திருநாள் நினைந்திதைப் பேணுக

பிறபிற பண்புகள் பேணிய போதும்

நமக்கென மொழியும் நாளும் உளவென

உலகம் அறிய உணர்த்துவம் வாரீர்;

நகரை அணிசெய்க

 பலவகைத் தோரணம் பாங்குடன் நாற்றுமின்

 வளர்குலைக் கமுகும் வாழையுங் கட்டுமின்

 கிளரொளி மாடங் கிளைபடு குடிசை

யாங்கனும் யாங்கணும். ஒங்குக இன்பம் .

(தொடரும்)

கவிஞர் முடியரசன்பூங்கொடி