(பூங்கொடி 18 – கவிஞர் முடியரசன்: இருவகைப் பூங்கா – தொடர்ச்சி)

பூங்கொடி

4. படிப்பகம் புக்க காதை

இயற்கைக் காட்சிகள்

நங்கையும் தோழியும் களிமலர்ச் சோலையுள்

தங்கிய எழில்எலாம் தனித்தனி கண்டனர்;

தாமரைக் காட்சி

செங்கதிர்ச் செல்வன் வெங்கதிர் புகுதாப்

பொங்கிய நிழல்செறி பூம்பொழிற் கயத்துள்

அடுத்தஓர் இரவலன் அகக்குறிப் புணர்ந்து    5

கொடுத்தலால் மகிழ்ச்சி கூர்முகம் நோக்கி

மகிழ்வால் விரியும் வள்ளல் மனம்போல்

அகவிதழ் முறுக்கவிழ்ந் தலர்ந்த தாமரை

இலைசூழ் மலர்கள் எழிலினைப் பாராய்!

ஊடல் கொண்ட ஒண்டொடி முகம்போல்     10

வாடிக் கவிழ்ந்த மலர்களும் காணுதி!

கொடிமலர்க் காட்சி

செடிகள் மரங்கள் சிரித்து மலர்ந்திடக்

கொடிகள் நோக்கிக் கூடிக் குலாவத்

தாவிப் படர்ந்து தாமும் நகைத்தன

வண்ணப் பூக்கள் வகைவகை மலர்ந்து     15

கண்ணைப் பறிக்கும் காட்சியைப் பாராய்!

வண்டுக் காட்சி

புதிதாய் வருவோன் பொருந்திய நண்பன்

வதியிடன் அறிய வாயில் தோறும்

புகுந்து வினவிப் போதல் போலத்

தகுந்த மலர்தொறும் தண்மது வுண்ணக்     20

குடைந்து குடைந்து கொட்புறும் வண்டினை

நடந்து மெலிந்த நங்காய் நோக்குதி!

தென்புறந் தருமொரு தென்றல் மலர்தொறும்

அன்புடன் தழுவி அசைந்து மெல்லென

நம்முடல் வருடி நலந்தரல் நுகர்வாய்!      25

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி