(பூங்கொடி 21 – கவிஞர் முடியரசன்: கோமகன் ஆவல் – தொடர்ச்சி)

பூங்கொடி

கொழுநன் ஆவேன்

கொழுகொம் பின்றிப் பூங்கொடி தவித்து

விழுவது பொறேனாய்க் கொழுநன் ஆவேன்

எனுமுயர் நினைவால் இரங்கி வந்துளேன்    90

நின்பூங் கொடியோ நேரிசைக் குலத்தாள்

என்பெரு நிலையினை இசைத்தால் உடன்படும்;

உடன்படச் செய்க

குறளகம் விடுத்துக் குமரன் என்னைப்

பெறுமணங் கொள்ளப் பெட்டனள் ஆயின்

அளப்பருஞ் செல்வம் அனேக்தும் ஈவேன்     95

களைத்துடல் இளைக்கக் கருதா தென்றன்

காதற் கடலைக் கடந்திட அவளை

மாலுமி யாக்கி மகிழ்ந்திடக் குறித்தேன்

வேலெனும் விழியாய்! வேண்டினென் நின்னை

மதியுடம் படச்செய் எனும்.அம் மாற்றம்           100

செவியுற நெஞ்சம் செயலறக் கலங்கி

நவையறச் சிலசொல் நவின்றனள் அல்லி,

அல்லியின் அறிவுரை

செல்வக் கோவே சீர்சால் கல்வி

மல்குறு நினக்கு மங்கையர் அறிவுரை

105 குறிப்பது நன்றன் றாயினும் குறிப்பேன்;

விருப்பிலா மகளிரை விழைவது முறையோ?

கருத்தொரு மித்தால் காதல் சிறக்கும்;

ஒருபால் அன்பால் உறுபயன் ஒன்றிலை;

சிறுவர் கூடிச் சிற்றில் இழைத்து

மறுகணம் சிதைத்து மகிழ்வுறல் போலத்     110

திருமணம் செய்து திரிவது பேதைமை;

அறிவுடை மாந்தர் அதனை ஒவ்வார்;

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி