(மக்கள் திலகம்  எம்ஞ்சிஆர்  1/2 தொடர்ச்சி)

 

மக்கள் திலகம்  எம்ஞ்சிஆர்!  2/2 

 

அரிதரிது   மானிடராய்ப்   பிறத்த  லென்றார்

அதனினும்கூன்   குருடின்றிப்   பிறத்த  லிங்கே

அரிதென்றார் !   அதனினுமே   அரிதாம்   என்றார்

அழகாக  எம்ஞ்சிஆர்போல்  பிறத்த  லென்றார்

அரிதென்றார்   அதனினுமே   அவரைப்  போல

அள்ளியள்ளிக்   கொடுக்கின்ற  மனித  நேயம்

பெரிதாக   உள்ளவர்கள் !   ஔவை   சொல்லின்

பெருமைக்குக்   காட்டிவர்போல்  உள்ளோ  ரரிதே !

 

சீர்திருத்தப்   புரட்சிகளைச்   செய்த  தாலே

சிறப்பாக   நல்புரட்சித்   தலைவ  ரென்றார்

ஊர்மக்கள்   மீதன்பு   செய்த   தாலே

உயர்வாக   மக்கள்தம்   திலக  மென்றார்

யார்வந்து   கேட்டபோதும்   கொடுத்த   தாலே

யாவருமே  பொன்மனத்துச்   செம்ம  லென்றார்

வேர்பலாபோல்  அனைவருக்கும்   இனித்த  தாலே

வெல்லுமென்றன்   இதயக்கனி   என்றார்   அண்ணா !

 

நாடகங்கள்   தனில்நடித்த  போதே   பெற்ற

நறுந்தொகையைப்   பள்ளிகளைக்   கட்ட   ஈந்தார்

ஊடகங்கள்   அறிந்திடாமல்   தன்னு   ழைப்பால்

ஊர்பலவில்   மருத்துவமனை    அமைத்துத்   தந்தார்

வேடமிட்டு   நலிந்துபோன   கலைஞர்   கட்கு

வேண்டியபல்   உதவிகளை   நாளும்  செய்தார்

நாடறிய   தம்சொத்தைச்   செவிடு  ஊமை

நற்கண்கள்   இல்லார்க்கே   எழுதி   வைத்தார் !

 

தான்நடித்த   பாத்திரத்தின்   தன்மை   போன்றே

தன்னுடைய   வாழ்வெல்லாம்   நடந்த   மேலோன்

தான்உழைத்துப்   பெற்றசெல்வம்   ஊருக்   கென்றே

தன்னிரண்டு   கைகளாலும்   அள்ளித்   தந்தோன்

தான்ஆட்சி   தனிலமர்ந்தால்  ஏழை   யர்கள்

தம்துயரோ  தீருமென்றே   தீர்த்து  வைத்தோன்

வான்மழையாய்   செய்ததர்மம்   தலையைக்  காக்கும்

வார்த்தையினை   வாழ்வினிலே  காண  வைத்தோன் !

 

தெய்வத்தாய்  படத்திலிவர்   நடிக்க  வில்லை

தெய்வமென  அன்னையினைத்   தொழுத   தாலே

மெய்யாகத்   தன்னையதில்   காட்டி   நம்மை

மெய்சிலிர்க்க   வைத்திட்டார்  தொழுது   போற்ற

செய்கின்ற   பணிகளினைத்   தாயின்   தாளைச்

செம்மையாக   வணங்கியபின்   செய்த   தாலே

வெய்யோனின்   ஒளியைப்போல்   இன்று   மிங்கே

வெளியுலகும்   போற்றும்நற்   புகழில்   நின்றார் !

 

செங்கதிரே  அவர்நிறத்திற்   குவமை   யாகும்

செம்முழைப்பே   அவர்கற்ற   கல்வி   யாகும்

தங்கிருந்த   வறுமையினை   இளமை   தொட்டுத்

தகர்ப்பதிலே  முன்நின்று   வெற்றி   கண்டார்

எங்கிருந்தோ   வந்துதவி  கேட்டோர்க்  கெல்லாம்

எடுத்தெடுத்தே   இருகைகளால்  அளித்த   தாலே

மங்காத   கொடைநெஞ்சாய்   மக்கள்  நெஞ்சில் !

மகத்தான   தலைவராக   இன்றும்   உள்ளார்

கடையேழு   வள்ளலெனும்    சொல்லை   மாற்றிக்

காணுமெட்டாய்   திகழ்ந்திட்டார்   கருணை   யாலே

நடைபோட்டார்   நடிப்பினிலே   நடித்த   தைப்போல்

நாள்வாழ்வில்  கடைபிடித்தார் !  அதனால்   மக்கள்

படைகொண்டார் !   அதிகாரம்   இல்லா  போதும்

பாசத்தால்   தமிழினத்தை   அடிமை  கொண்டார்

குடையாகச்   செங்கோலைப்  பிடித்து   மக்கள்

குடியாட்சி   செய்ததாலே  குடிக்குள்   வாழ்ந்தார் !

 

தஞ்சையிலே   தமிழன்னை   தலைநி  மிர்த்தித்

தன்னாட்சிப்  பல்கலையாம்   கழகம்   கண்டார்

விஞ்சிநின்று   தமிழ்உலகைக்   காண்ப  தற்கு

வியன்மதுரை   நகரினிலே   சங்கம்  வைத்தார்

கொஞ்சுகின்ற   மழலையர்கள்  கல்வி  கற்கக்

கொடும்பசியைப்   போக்கிடச்சத்   துணவை   ஈந்தார்

வஞ்சகமே   இல்லாத   பொன்ம   னத்தால்

வாழ்த்துகின்ற  மக்களாலே   வாழு  கின்றார் !

 

தாலிக்குத்   தங்கமதைத்   தந்து   தாய்மார்

தம்துயரைப்   போக்கிநல்ல   மகனாய்  நின்றார்

வேலியாகப்   பணிபுரியும்   பெண்க  ளுக்கு

வேண்டியநல்  விடுதிகட்டித்  தமயனாய்  நின்றார்

காலிற்குக்   காலணிகள்   உடுப்ப  தற்குக்

கச்சிதமாய்  சீருடைகள்   நூல்கள்   தந்தும்

ஊரிலுள்ள  குழந்தைகளைப்  படிக்க   வைத்தே

உற்றதந்தை  போலாட்சி  செய்த  நல்லோன் !

 

நடிகரினைக்  கூத்தாடி    என்று   சொல்லி

நாட்டோர்கள்   இழிவுசெய்த    போக்கை   மாற்றி

நடிகரினை   மதித்தவரைப்    போற்று   கின்ற

நல்லதொரு     மாற்றத்தைச்    செய்த    மேலோன் !

நடிப்புவேறு    வாழ்க்கைவேறு    என்றே   பல்லோர்

நடிப்புதனைத்    தொழிலாகச்    செய்த    போது

நடித்தபடி   வாழ்க்கையிலும்    நடந்து    காட்டி

நாட்டிற்குக்    காட்டாக   திகழ்ந்த    நல்லோன் !

திரைதன்னில்   புகைபிடித்தல்    குடித்தல்    என்ற

தீச்செயலை    ஒருபோதும்    ஏற்றி   டாமல்

திரைப்படங்கள்    மக்களுக்கு   வழியைக்   காட்டி

திருத்துகின்ற    சாதனமாய்ச்   செய்த   செம்மல் !

திரைப்படத்தில்    நல்லவனாய்   நடித்த   தைப்போல்

தினம்வாழ்வில்   கடைபிடித்தே    வாழ்ந்த   பண்போன்

திரைப்படத்தில்   தான்சொன்ன    கருத்தை   யெல்லாம்

திறமையான   முதல்வராக    செய்த    வல்லோன் !

 

சத்துணவு    என்கின்ற   திட்டத்   தாலே

சத்தான    கல்விக்கு   வழிவ   குத்தோன்

சொத்துதனைப்   பிறருக்கே    அள்ளித்   தந்து

சொத்தென்று   மக்களன்பைச்    சேர்த்துக்   கொண்டோன் !

வித்தாக    அரசியலில்    நேர்மை    தன்னை

விதைத்துமக்கள்   நலனுக்கே    ஆட்சி   செய்தோன்

வித்தகனாம்   எம்ஞ்சிஆர்  என்னும்   மக்கள்

வியன்திலகம்   வரலாறாய்   என்றும்   வாழ்வார் !

 

அன்னையினைக்   குடியிருந்த  கோயி  லென்றே

அனுதினமும்   தெய்வத்தாய்   எனவ  ணங்கித்

துன்பத்தில்  துடித்தோரைக்  கரையில்  சேர்த்துத்

துயர்துடைத்த  படகோட்டி  யாக  வாழ்ந்து

மின்னுகின்ற  கலங்கரையாம்  விளக்காய்  நின்று

மீட்டுயேழை  யர்க்குஒளி   விளக்காய்த்   திகழ்ந்து

நன்றாக  எங்கவீட்டுப்  பிள்ளை  யென்றே

நாடுபோற்றும்  உத்தமர்தம்   வழியில்  நடப்போம் !

 

-பாவலர் கருமலைத்தமிழாழன்