ஈழம்+ஞானப்பிரகாசன் : eezham_gnanam

[‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’ எனும் இறையுணர்வுப் பாடலைத் தமிழுணர்வுப் பாடலாய் மாற்றி இந்த ‘மாவீரர் திருநா’ளில் என் தமிழஞ்சலியாய்ச் சாற்றுகிறேன்!]

பல்லவி

மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன் – நான்

மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்

கல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் – கருங்
கல்லானாலும் துயிலும் இல்லக் கல்லாவேன் – பசும்
புல்லானாலும் கரிகாலன் கை வில்லாவேன் – நான்

மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்

உருவடி – 1

பொருளானாலும் விடுதலைக்கே எரிபொருளாவேன் – வெறும்
கரியானாலும் தமிழை எழுதத் துணையாவேன்

பேச்சானாலும் தமிழர் உரிமைப் பேச்சாவேன் – தமிழ்ப்
பேச்சானாலும் தமிழர் உரிமைப் பேச்சாவேன் – விடும்
மூச்சானாலும் ஈழத்துக்காய் நான்விடுவேன் – நான்

மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்

உருவடி – 2

சொல்லானாலும் மானம் என்னும் சொல்லாவேன் – உதிர்
சருகானாலும் தமிழ் மண்ணுக்கே உரமாவேன்

துகளானாலும் பகைவர் விழிக்கு வினையாவேன் – தூசித்
துகளானாலும் பகைவர் விழிக்கு வினையாவேன் – தனி
உயிரானாலும் மீண்டும் நற்றமிழ்ப் பயிராவேன் – நான்

மண்ணானாலும் தமிழீழத்து மண்ணாவேன் – ஒரு
மரமானாலும் பதுங்கும் குழிமேல் பனையாவேன்!

 

~இ.பு.ஞானப்பிரகாசன்

maaveerarnaal_patam01