தலைப்பு-மீதிநாள் - thalaippu_meethinaal

மீதிநாள் மீட்சிநாள் ஆவதே சிறப்பு!

 

அடிமையில் வீழ்ந்து நிலை தடுமாறி

அழிவினை விரும்பிடும் தமிழ்நாடே! – நீ

மிடிமையில் உழன்றே மீள்நினை வின்றி

மிகநலிந் தால்எவர் மீட்பாரே?

உரிமையை இழந்தாய் உயர்வுகள் துறந்தாய்!

நரிமையின் காலடி வீழ்ந்தாய் – உன்

சரிவுகள் நீக்கும் சான்றவர் உளரோ

சடுதியில் சேர்ந்தெழுந் தார்க்கு?

கட்சியில் புகுந்தாய் காட்சியில் நெளிந்தாய்

களம்காணும் மறத்தினை இழந்தாய் – நீ

காசுக்குப் பறந்தாய் கவர்ச்சிக்குக் குனிந்தாய்!

கடைத்தேற்றும் காவலைத் துறந்தாய்!

சாதியில் புரண்டாய் மதங்களை மறைத்தாய்

பாதியில் உன்போக் கொழிந்தாய்! – உன்

மீதிநாள் மீட்சிநாள் ஆவதே சிறப்பு!

மீறினால் வருவதோ மீளாத இறப்பு!

thamizhamallan02

க.தமிழமல்லன்,

வெல்லும் தூய தமிழ்,

மாசி, 2029 / மார்ச்சு, 1998