gnalathamizhthaay01

thalaippu_inidheilakkiyam02

 10

தமிழன்னையை வாழ்த்துவோம்!

நண்ணுமிளமைப் பருவத்தி லேமுதல்
நாவை யசைத்த மொழி- எங்கள்
கண்ணைத் திறந்துல கத்தை விளக்கிக்
கருத்தோ டிசைந்த மொழி- எந்தம்
எண்ணத்தைக் கூறற்கு நானென்று முன்வந்
திருந்து திருந்து மொழி- வேற்று
வண்ணப் பிறமொழி கற்க வுதவிய
வண்மைபொ ருந்தும் மொழி- அதனால்
எங்கள் தமிழன்னை வாழிய வாழிய
வென்றடி வாழ்த்துவமே!

தாராமங்கலம் புலவர் அ. வரதநஞ்சைய(பிள்ளை) அவர்கள் இயற்றிய ‘தமிழரசி குறவஞ்சி’ நூலில்   வரும் தமிழ் வாழ்த்துப் பாடல்.

   “மழலைப்பருவத்தில் முதல் முதலில் நாவை அசைத்துப் பிறந்த மொழி தமிழ்தான்! அறிவுக்கண்களைத் திறந்து உலக நடப்புகளையும் அறிவுக் களஞ்சியத்தையும் காட்டியதும் தமிழே! எண்ணத்தை வெளிப் படுத்துவதற்கு முந்தி வந்த செம்மொழி தமிழே! பிற மொழிகளைக் கற்பதற்கு உதவும் சொல்வளம், பொருள் வளம் நிறைந்த மொழி தமிழே! எனவே, எங்கள் தமிழன்னை வாழிய! வாழிய! என்று அதன் திருவடியை வாழ்த்துவோம்!”

  வளம் மிகுந்த செம்மொழியாகத் திகழ்ந்து உலகத்தைப் பார்க்க உதவும் கண்ணாகத் திகழும் தமிழே, நாம் முதலில் நாவசைத்த பொழுது பிறந்த மொழி எனச் சிறப்பைக் கூறித் தொன்மைச் சிறப்புடைய தமிழன்னையை நாம் மறவாமல் போற்ற வேண்டும் என்கின்றார் புலவர்.

  நாமும் நாளும் தமிழன்னையைத் தொழுவோம்!


இலக்குவனார் திருவள்ளுவன்