தலைப்பு-மூச்சே நம்மொழி - thalaippu_muuchea_nammozhi

குழல்து ளைகளில் மேவும் செம்மொழிகுயில்

குரலின் நெடிலிசை கூவும் செம்மொழி!

மழலை மொழிக்கிளி பேசும் செம்மொழிமுடி

மன்னர் மக்களோ டுயர்ந்த நம்மொழி!

தாயாம் இயற்கையே தந்த செம்மொழிஇது

தன்னோர் யானைவெண் தந்தச் செம்மொழி!

ஓயாக் கடலொலி இழிழாம் எண்ணுவீர்நாம்

உணர்ந்து வளர்த்தது தமிழாம் எண்ணுவீர்!

முத்தமிழ்க்கலை யறிந்த செம்மொழிசுடர்

முத்து அமிழ்கடல் செறிந்த நம்மொழி!

வித்தாம் அறிவியல் போற்றும் செம்மொழிபுகழ்

விரியும் விசும்புடைக் காற்றும் செம்மொழி!

கண்ணோர் திருக்குறள் யாத்த செம்மொழி – சிலம்புக்

கலையின் களஞ்சியம் படைத்த செம்மொழி!

நண்ணும் மானுட வெற்றிச்செம்மொழி – புரட்சி

நற்கவி வேந்தரின் நேயம் செம்மொழி!

 

என்று முளதெனும் கம்பன் செம்மொழிதிசை

எட்டும் பாரதி இன்சொல் நம்மொழி!

நன்று தீதுணர் சித்தர் செம்மொழிபொதிகை

நல்கிக் காத்திடும் மூச்சே நம்மொழி!

முனைவர் மின்னூர் சீனிவாசன் : நம்மொழி செம்மொழி

(‘உங்கள் குரல்’ தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலர்: பக்கம்.43)