‘மே’ பதினேழு – இருள் கவிந்தநாள்… : – அறிவரசன்
‘மே’ பதினேழு
வன்னி நிலத்தின்
முள்ளி வாய்க்காலில்
இன எழுச்சிக்குப்
பின்னடைவு
ஏற்பட்ட நாள்…
தமிழ்
இன வரலாற்றில்
இருள் கவிந்தநாள்…
தமிழ்ப் பொதுமக்களும்
போராளிகளும்
புத்தன்பேர் சொல்பவர்களால்
புதை குழிகளில்
தள்ளப்பட்டநாள்…
விடுதலைப் புலிகள்
அழிக்கப்பட்டதாக
அறங்கொன்றவர்களால்
அறிவிக்கப்பட்ட நாள்…
ஈழத்தமிழர்களை
அடக்கி ஒடுக்கிவிட்டதாகச்
சிங்களக் காடையர்
நம்பத் தொடங்கிய நாள்…
வன்னித் தமிழர்களுக்குப்
பின்னடைவு நேர்ந்ததால்
உண்மைத் தமிழர்கள்
பித்துப் பிடித்து நின்றநாள்…
கொழும்பும் தில்லியும்
நினைத்ததை முடித்ததாகக்
கை குலுக்கிக் கொண்டநாள்…
நமக்கு எதிரானவர்கள்
சிங்களர் மட்டுமல்லர்;
தில்லிக்காரர்களுந்தாம்
என்பது
தெளிவாகத் தெரிந்தநாள்…
‘மே’ பதினேழு
நாம் மறக்கக் கூடாதநாள்
நமக்கு எதிரானவர்களை
வெற்றிகொள்ளும் வரை.
Leave a Reply