bharathidasan09

1. முல்லைமலர் என விளங்கு தமிழைக் காத்த

மூவேந்தர் பரம்பரையின் முதல்வனானாய்!

சொல்மலர வில்லையடா இறந்த சோகம்!

சுட்டெரிக்கக் கனலானாய்! கவிதைத் தேனீ!

எல்லையில்லாப் பெரும் பயணம் தொடங்கி விட்டாய்

எரிமலையே தமிழ்காத்த வலிய கோட்டை

கல்லுடைந்து வீழ்ந்ததுவோ? கால வேந்தன்

கைகளினைப் பஞ்சணையாய் ஆக்கிக் கொண்டாய்.

2. தூய தமிழ்க் கணையெடுத்துப் பகையை வென்று

தூளாக்கித் தலையெடுத்தாய்; குயிலதாகி

ஓயாத கவிதைத்தேன் ஊற்றி வைத்தாய்

உன் மொழியால் தென்னகத்தார் நெஞ்சில் வேகம்

பாய்ந்ததடா பகை முடிக்கத் திரண்ட காலை

படை முதல்வா நீ பறந்தாய் உணர்ச்சி வெள்ளம்

ஓய்ந்ததடா உன் முடிவால் புரட்சி கொண்ட

உன்னுருவம் நெஞ்சலையில் நின்று பாடும்.

3. பொங்குகடல் எனவெழுந்த புதுமைச் சொற்கள்

புகுந்தவிடம் தமிழ் வளர்த்த வீடு கோலத்

திங்களெனும் நிலவானாய்ப் புதுவை தந்த

தீக்காடே உன் பெயரால் பகைவர் மூச்சு

மங்கியதே எதிர் பாராத முத்த மீந்தாய்

மாண்டாய் நீ தென்னகத்தின் தமிழியக்கச்

சிங்கமென வாழ்ந்திட்டாய் பயணங் கொண்டாய்

செந்தழலில் உன்னுருவம் சிதைந்ததம்மா!

4. வாளெடுத்த பாண்டியன் போல் தமிழெடுத்து

வந்த பகை துணித்த திறம் சொல்லடங்கா

தோளெடுத்து நீ கிளம்பிக் கவிதை சொன்னால்

தொல்லினத்துத் தமிழ் மறவர் துடித்து நிற்பார்

மாளாத பெரும் புலமை மலர்ந்த நெஞ்சம்

மக்களுளத் தளவிளக்கு மறைந்த தந்தோ

தூளான மட்கலம் போல் ஆன தந்தோ!

துணையிழந்த தலைவிபடும் துயரமம்மா!

–          புலவர் நா.மீனவன்

– குறள்நெறி: வைகாசி 2, 1995 / மே 15. 1964