காப்பியாற்றுப்படை


நெடுங்காந்தள் மூசிய அடைகரை அன்ன‌
வால் இயற்றிய வளைஇளம் நெற்றி
கண்விழித்தாங்கு மொழி ப‌டாத்து மடமை
காப்பியாறு இமிழ்தரு இன்னொலியின்
கதுப்பு சிவந்தவள் மணிகிளர் காட்சி.
கழைபடுத்த பாம்பின் நுண்ணுரி சுற்ற‌
இலஞ்சி நீழல் குவி இணர் கவிக்க‌
எழிலுண் மைக்கடல் எறிதிரை ஏய்ப்ப‌
குணில் பாய் முரசம் உள்ளொலி எதிர‌
மழைக்கண் கொண்டு பேய்வெள்ளருவி
மலர் பொருது மற்று மண் பொருது இறங்கி
பொறிப்பரல் முரல  நீர்வழி போன்ம்
நீடிய நெஞ்சின் அளியவள் காட்சி.
முதிர்கான் போழ்ந்த வெண்ணிய காலை
முழைகள் ஒளியும் அதிர்செவி முயலாய்
காட்டி காட்டி மறைக்கும் மன்றிடை
கள்ளநகையாள் அவிழ்தரும் நகையுடன்
சிந்திய சொல்லில் வித்திய முதிர்நெல்
விளைதரும் என்று பலவு வீழ்த்த‌
படப்பை தோறும் குறியின் எதிர்த்து
கிடந்துழி யாண்டு காண்குவன் மன்னே.
மணிமிடைப்பவளமும் களிற்றியானை நிரையும்
நித்திலக்கோவையுள் தொகைத்த தொகையாய்
அகம் குமிழ்த்தாள் அகவல் கேட்டேன்.
அலரி தூஉய் வெண்காடு செத்து வெரூஉய்
வல்நெடுங் கூர் ஒலி வதைபட கேட்டேன்
என் உயிர் கொல் ஓதை முளிகால் பிசைந்து
விண்ணும் நிரவி மண்ணில் வேர்க்கும்.
பஃறுளி பாய்ந்து வெஃறுளி தடவிய‌
களித்தமிழின் காப்பியாற்றுப்படை இஃது.

பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தில் உள்ள செய்யுட்களை எழுதியவர் “காப்பியாற்றுக் காப்பியனார்”. இதில் இவர் களாங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் எனும் சேர மன்னனைப்பாடியுள்ளார். சேர நாட்டில் ஓடும் ஓர் ஆறு காப்பியாறு. அதை வைத்து எழுதிய சங்கநடைக் கவிதை இக்கவிதை.

தலைவன் “காப்பியாற்றங்கரை” வழியே போய் அந்த அடர்ந்த காட்டின் உள்ளொலியில் தலைவியின் கள்ளநகைப்பொலி கேட்டுக் களிக்கும் காட்சியைப்பற்றிய கவிதை இது)

அரும்பொருளுரை:

நெடிய காந்தள் மலர்கள் அடர்ந்த (மூசிய) செடிகள் அடைந்தாற்போல் உள்ள ஆற்றங்கரையை ஒக்குமாறு ஒளி(வால்) இயல்பானதாகவே விளங்கும்படி (இயற்றிய)வளைந்த இளைய‌ நெற்றியை உடையவள்.

அந்த நெற்றியையே அகன்ற கண்ணாக்கி ஒரு (மறை)மொழியை அதன் மீதுமுகப்படாம் போல் போர்த்து ஒன்றும் அறியாதவள் போல்(மடமை)நிற்பவள்.

காப்பியாறு (அந்த ஊருக்கு வளம் தந்து காக்கும் ஆறு)நீர்ச்சிதறல்களால்மெல்லிதாக இசைக்கும்(இமிழ் தரு)இனிய ஒலியால் (கிளு கிளுப்பு அடைந்து) கன்னம் சிவந்தவளாய் மாணிக்கக்கல் போன்று ஓளிசிந்தும் அந்தக்காட்சி.

மூங்கில்மீது இழைந்த பாம்பின் நுண்ணிய தோல்(பாம்பு உரி)சுற்றியிருக்க‌ நீர்ச்சுனை(இலஞ்சி)யில் படிந்த நிழல் அருகுள்ள பூங்கொத்துக்குவியல்களால் (குவி இணர்)கவிந்து இருக்க‌ அது போல் எழில் உண்ட கருப்புக்கடல்(மை தீட்டப்பட்டதால்) வீசும் அலைகள் போன்ற ஒரு மாயத்தோற்றம் செய்து ஏய்க்கும் கண்கள்.

முரசுவின் மீது விழும் தடிகள் (குணில்)ஏற்படுத்தும் ஒலிகள் போன்ற உள்ளத்து ஏக்கத்தின் ஒலிகள் எதிரொலிக்க‌ ஈரம் சொட்டும்குளிர்விழிகளால்(மழைக்கண்)மிகவும் பெருகிய (பேய்)வெள்ளி போன்ற அருவி மலர்களைத் தாக்கி மற்றும் மண்திட்டுகளைத் தாக்கி (பொருது)விழும் அருவி.

புள்ளிகள் நிறைந்த கூழாங்கற்கள் நீர் ஓட்டத்தில் உருண்டு ஒலிக்க(முரல)விரையும் ஓடை போல் நீரின் நீண்ட பாதையில் ஏக்கம் நிறைந்த அந்த (பரிதாபத்துக்கு அல்லது இரக்கத்திற்குரிய)(அளியவள்) தலைவியின் காட்சி.

அடர்ந்த காட்டுள் நுழைந்த வெண்கதிர் வெளிச்சம் நிறைந்த ஒரு காலைப்பொழுதில் பொந்துகள்(சிறிய குகைகள் போன்றவை)(முழைகள்) தோறும் ஒளிந்து ஓடும் நடுங்கும் செவிகள் உடைய முயல் போல் பொய்ச்சிரிப்பு செய்யும் தலைவி மெய்ச் சிரிப்புகளையும் அவ்வப்போது அவிழ்த்து விடுவாள். (அது எப்போது என்று யார் அறிவார்?)

அந்த சிரிப்புகளோடு சில சொற்களையும் உதிர்த்து முற்றிய விதைநெற்கள் போன்று விதைப்பாள்.

அதுவும் விளைச்சல் தரும் என்று எண்ணி பலாக்கனிகள் (பலவு) மரத்தின் அடிப்பகுதியில் வீழ்த்திக்கொண்டு பழுக்கத் தோன்றும்(வீழ்த்த) வளத் தோட்டங்களில்(படப்பை)தலைவி வந்து நிற்பதாகச்சொன்ன இடத்தில்(குறியின்) எதிர்பார்த்துக்காத்து (எதிர்த்து) அவளைப் பார்த்தே தீருவேன் என்று அங்கே (பழியாய்)க் கிடக்கும்பொழுது (கிட‌ந்துழி) (மன்னே. ..அசைச்சொல்).

மணிமிடைப்பவளம் (இரத்தினங்களிடையே பவளங்கள்)

களிற்றியானை நிரை (களிறு (ஆண் யானை)களின் கூட்டம்)

நித்திலக்கோவை (முத்துக்குவியல்)

இவை காதலின் சாறுதனைப் பிழிந்து தரும் அகநானூற்றுப்பாடல்கள். ஆனால் அவள் இவ்வெல்லாப்பாடல்களையும் தொகுத்து அதை ஒரு தொகையாய் (தொகுத்த தொகையாய்)த் தந்தாள். அதைத் தான் அவள் நெஞ்சில் குவிந்து கூர்ந்து ஒலித்தாள்.(அகம் குமிழ்த்தாள்)

என் நெஞ்சைக்கவ்வும் அவ்வொலி (அகவல் ஒலி)நான் கேட்டேன். அஃது எப்படி இருந்தது?

சிறு வெள்ளைப்பூக்கள்(அலரி)சிதறி தூவிய ஒரு பெரும் வெண்காடு போல‌ (வெண்காடு செத்து)ஒரு மெல்லிய அச்சத்தையும் படரச்செய்தது.(வெரூஉய்)நீண்டதாயும் கூர்மை கொண்டு நெஞ்சு பிளப்பதாயும் அந்த ஒலி என்னை வதைப்பது போலவும் கேட்டேன்.

“என் உயிரைக்கொல்லும் ஓசை அது” என்றும் கொள்ளலாம்.

“அந்த ஒலி தானோ என் உயிர்?” என்றும் கொள்ளலாம்.

பின்னதில் கொல் என்பது அசைச்சொல்.(தானோ)

ஆனால் அந்த ஒலி “குழைவு தன்மை உடைய காற்றை”ப் (முளி கால்)பிசைந்து செய்யப்பட்டது போன்று தலைவன் உணர்கிறான்.

அது வானம் பரவி மண்ணிலும் வேர்விடும்(வேர்க்கும்).

காப்பியாற்றின் வழி எப்படி உள்ளது?

அது பலதுளிப் பெருவெள்ளமாய் அங்கு விரிந்து படர்ந்த புல்வெளியையும் தடவி இழையும் ஆறு. களிப்பு பொங்கும் தமிழில் வந்த காப்பியாறு வழி ஏற்படுத்திக்கொண்டு பாயும் காப்பியாற்றுப்படை. இதில் தலைவியின் மென் சிரிப்பின் ஒலியும் சொல் துளிகளும் தூவிக்கிடந்து எழில் கொஞ்சுகிறது.

(உ)ருத்திரா இ.பரமசிவன், 25.02.2014