செந்நெருப்புக்காரி : senneruppukkaari

செந்நெருப்புக்காரியே!

பெருமை கொள்கிறேன்!

முகத்தில் மஞ்சள் எங்கே?
காலில் கொலுசெங்கே?
காதில் தோடு எங்கே?
நெற்றியில் பொட்டெங்கே?
அழகிய புன்னகை எங்கே?
கோதி முடித்த கூந்தல் எங்கே?
கண்ட கனவெங்கே?
பஞ்சணையில் உருண்டு படுத்த
தூக்கம் எங்கே?
பூப்பொன்ற கை, மரம் போன்று
காய்த்ததேன்?

பூக்கொய்த கையில்
ஆயுதம் தரித்ததேன்?
ஊரில் உன்னை அழகி என்பர்
உன் வயிறும் ஒட்டிப்போனதேன்?
பருவத்தில் உன் பின் ஒரு கூட்டம்
உன் பருவம் சொன்னது என்ன?
எனக்கென ஓர் உலகம் என்றோ!

நீண்ட குதி செருப்பணிந்து
பஞ்சாபிச் சட்டை அணிந்து
முகத்தில் மஞ்சள் பூசி
கருப்பாய்ச் சிறு பொட்டு வைத்து
ஊரினில் நீ நடக்கும்
போது எங்கள் ஊரின்
தேவதை அல்லவா நீ!

இன்று போடச் செருப்பு இன்றி
கல்லிலும் முள்ளிலும்
பாதம் பட்டு
குருதி வடிவதேன்?

எழில் மகளே!
தலைவன் உனை அழைத்தானோ
ஈழம் எனும் தேசம்
காக்க
விடுதலை எனும்
வேட்கை தீர
உன் கையில் இருப்பது
ஆயுதமா?
பகையின் கனவுடைக்கும்
கருவியா?

உன் மாற்றுருவம்
கண்டு பெருமை
கொள்கிறேன்!
நமக்காக ஒவ்வொரு
துளி வியர்வையையும்
அளிக்கிறாய் என்று!

– தமிழினி தமிழினி

முத்திரை-தமிழ்அருள் : muthirai_thamizharul