eezham_maaveerar vanakkam

விடுதலைக் கருவை கழுத்தில் சுமந்தனர் !

 

துயிலும் இல்லம்
உரைப்பது ஓன்று
ஆணும் பெண்ணும்
ஓர் நிறை என்று!

ஆயிரம் தாய்
சுமந்த உயிர்கள்
அன்னை பூமியில்
ஆழ(ள)ப் புதைந்தன!.

பனிக்குடம் உடைத்து
புவிமுகம் கண்டவர்
தாயகம் காக்க
நீர்க்குடம் விண்டனர் !.

தாய்முகம் காண
மாரைச் சப்பியோர்
தாய்நிலம் பேண
மரணத்தைச் சப்பினர்!.

விடுதலை வெடியை
மண்ணில் புதைத்தவர்
வெடியின் திரியாய்
தம்முயிர் தந்தனர் !

ஆயிரமாண்டு
விலங்கினை உடைத்திட
ஆலகால
விடத்தினைக் கடித்தனர் !

சிங்கள இனவெறி
கொடுமையை விரட்டிட
சீர்மிகு தலைவனின்
படையினில் உயிர்த்தனர் !

தாயகம் என்னும்
தாகம் தீர்க்க
உயிரை உரித்து
உதிரம் உகுத்தனர் !

தலைவனின் உலையில்
தணலாய் ஒளிர்ந்தனர்
தமிழின ஏட்டில்
தலைப்பென வாழ்பவர் !

பூதம் ஐந்தின்
வடிவாய் எழுந்தனர்
விடுதலைக் கருவை
கழுத்தில் சுமந்தனர் !

இனவெறிப் பேய்கள்
இடையில் வெல்லலாம்
மாவீரர் கனவே
நிறைவில் வென்றிடும் !

(தமிழீழத் தாயகத்திற்காக உயிரீகம் புரிந்தவர்களின் நினைவைப் போற்றிடும் “மாவீரர் நாள் -நவம்பர் 27)

நா.இராசா இரகுநாதன்