muutathirumanam01

‘‘முல்லை சூடி நறுமணம் முழுகிப்

பட்டுடை பூண்டு பாலொடு பழங்கள்

ஏந்திய வண்ணம் என்னருமை மகள்

தனது கணவனும் தானுமாகப்

பஞ்சணை சென்று பதைப்புறு காதலால்

ஒருவரை ஒருவர் இழுத்தும் போர்த்தும்,

முகமல ரோடு முகமலர் ஒற்றியும்,

இதழோடு இதழை இனிது சுவைத்தும்

நின்றும் இருந்தும் நேயமோடு ஆடியும்

பிணங்கியும் கூடியும் பெரிது மகிழ்ந்தே

இன்பத்துறையில் இருப்பர் என்று எண்ணினேன்.

இந்த எண்ணத்தால் இருந்தேன் உயிரோடு‘

பாழும் கப்பல் பாய்ந்து வந்து

என்மகள் மருமகன் இருக்கும் நாட்டில்

என்னை இறக்கவே, இரவில் ஒரு நாள்

என் மகள் – மருமகன் இருவரும் இருந்த

அறையோ சிறிது திறந்து கிடந்ததை

நள் இராப்பொழுதில் நான் கண்டபோதில்

இழுத்துச் சாத்த என்கை சென்றது;

கழுத்தோ கதவுக்கு உட்புறம் நீண்டது!

கண்களோ மருமகனும் மகளும் கனிந்து

காதல் விளைப்பதைக் காண ஓடின!

வாயின் கடையில் எச்சில் வழியக்

குறட்டை விட்டுக், கண்கள் குழிந்து

நரைத்தலை சோர்ந்து நல்லுடல் எலும்பாய்ச்

சொந்த மருகக் கிழவன் தூங்கினான்!

இளமை ததும்ப, எழிலும் ததும்பக்

காதல் ததும்பக், கண்ணீர் ததும்பி

என் மகள் கிழவனருகில் இருந்தாள்.

சிவந்த கன்னத்தால் விளக்கொளி சிவந்தது!

கண்ணீர்ப் பெருக்கால் கவின் உடை நனைத்தாள்!

தொண்டு கிழவன் விழிப்பான் என்று

கெண்டை விழிகள் மூடாக் கிளிமகள்

காதலும் தானும் கனலும் புழுவுமாய்

ஏங்கினாள்; பின்பு வெடுக்கென்று எழுந்தாள்.

சர்க்கரைச் சிமிழியை பாலிற் சாய்த்தாள்.

செம்பை எடுத்து வெம்பி அழுதாள்.

எதையோ நினைத்தாள்! எதற்கோ விழித்தாள்!

உட்கொளும் தருணம் ஓடி நான் பிடுங்கினேன்.

பாழுந் தாயே! பாழுந் தாயே!

என் சாவுக்கே உனை இங்கு அழைத்தேன்!

சாதலைத் தடுக்கவோ தாய் எமன் வந்தாய்?

என்று – எனைத் தூற்றினாள். இதற்குள் ஓர் பூனை

சாய்ந்த பாலை நக்கித் தன் தலை

சாய்ந்து வீழ்ந்து செத்தது கண்டேன்.

மண்ணாய்ப் போக! மண்ணாய்ப் போக!

மனம் பொருந்தா மணம் மண்ணாய்ப் போக!

சமூகச் சட்டமே! சமூக வழக்கமே!

நீங்கள் மக்கள் அனைவரும்

ஏங்கா திருக்க மண்ணாய்ப் போகவே!

– பாவேந்தர் பாரதிதாசன்