thamizhthaay02

தமிழுக்கும் அமுதென்று பேர் ! — அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் !

தமிழுக்கு நிலவென்றுபேர்! — இன்பத்

தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் !

தமிழுக்கு மணமென்று பேர் ! — இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் !

தமிழுக்கு மதுவென்று பேர்! — இன்பத்

தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் !

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! — இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் !

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! — இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் !

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! — இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! — இன்பத்

தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ

– பாவேந்தர் பாரதிதாசன்