இனி வேண்டா எதிர்மறை எண்ணங்கள்

  –  சு.கிருட்டிணன்

 காட்சி – 1

 சேரன் : டேய்! சேந்தன் என்ன இது புது மிதிவண்டியா? அருமையாக இருக்கிறதே! எப்பொழுது வாங்கினாய்?

சேந்தன்   :நேற்றைக்குத்தான்! எங்க மாமா எனக்குப் பிறந்த நாள் பரிசாக

வாங்கித் தந்திருக்கிறார்.

சேரன் : டேய்! உண்மையிலே இது மிதிவண்டி மாதிரியே இல்லைடா.  பொறிஉருளி மாதிரியே இருக்கிறது.

சேந்தன்   : ஆமாம்டா.. இதில் பற்பொறி(gear) இருக்கிறது.நாம் கொஞ்ச நேரம் அழுத்தி விட்டுப் பற்பொறியைப் போட்டு விட்டுவிட்டால் தன்னால் போய்க்கொண்டே இருக்கும்..

சேரன் :  ஐய்! ஐய்! அப்படியா! இது என்னடா..

சேந்தன்   : அது  நிறுத்தி(break)டா.  நிறுத்திக் கலம் (break drum)உள்ளது!  மிகவும் பாதுகாப்பானது!

சேரன் :  மிகவும் நன்றாக உள்ளதடா!

சேந்தன்   :  அப்படியா! நன்றிடா! நான் வருகிறேன்!

 

காட்சி – 2

(சேந்தன் புது மிதிவண்டியில் வந்து கொண்டிருக்கிறான். சேரன் எதிர்ப்படுகிறான்.)

சேரன் : சேந்தன்..சேந்தன்.. ஒரு நிமிடம் நில்லுடா..

சேந்தன்   : (மிதிவண்டியை நிறுத்தி விட்டு) என்னடா சொல்லு..

சேரன் : இல்லைடா..ஓர் அவசரம்.. கொஞ்சம் மிதிவண்டியைக் கொடுடா.. வேகமாகப் போய்விட்டு  உடனே தந்துவிடுகிறனே்!

சேந்தன்   :  ஊகும். புது  மிதிவண்டிடா.. யாருக்கும் கொடுக்க மாட்டேன்.. போடா…

சேரன் : எனக்கும் தெரியும்டா.. ஆனால்  மிகவும் அவசரம்டா.. அப்பா  அலுவலகத்திற்குக்  கிளம்பும் அவசரத்தில் பணப்பையையே மறந்து விட்டுப் போய் விட்டார்டா.. பேருந்து வந்து விடும்.. அதில் ஏறுவதற்கு முன் போக வேண்டும்.

சேந்தன்   :  எதுவாகயிருந்தாலும் முடியாதுடா.. நீ பாட்டுக்கு அவசரமாகப் போவாய்.. எதிலாவது மோதி விட்டாய் என்றால்..? அதெல்லாம் முடியாதுடா..

சேரன் : (வாடிய முகத்துடன்) சரிடா சேந்தன். நான் ஓடிப்போய் கொடுத்து

விடுகிறேன்..

 

காட்சி – 3

 

(சேந்தன், சேரன் ஓடிப்போவதைப் பார்த்துக் கொண்டே மிதிவண்டியைக் கிளப்புகிறான். பாடிக்கொண்டே மிதிவண்டியை வேகமாக ஓட்டுகிறான்.)

வழிப்போக்கன் : தம்பி! பார்த்துப் போப்பா.. கண்ணை மூடிக் கொண்டு போகிறாய்!.. ஏதாவது நேர்ச்சியில் (accident)சிக்கிக் கொள்ளப் போகிறாய்!

சேந்தன்  : அடப் போய்யா! உன் வேலையப் பாரு.. புது  மிதிவண்டி…  நிறுத்தி

எல்லாம் கச்சிதமாகப் பிடிக்கும்.. நீ பாட்டுக்குப் போப்பா..

வழிப்போக்கன் : சரிடா தம்பி.. சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன்.. அப்புறம் உன்விருப்பம்.  என்றாலும் கவனமாகப் போப்பா..

 

காட்சி – 4

 

(சேந்தன் மிதிவண்டியுடன் கீழே விழுந்து கிடக்கிறான். சேரனும் வேறு சிலரும் சேகரைச் சூழ்ந்து நிற்கின்றனர்.)

சேரன் : என்னடா சேந்தன்.. என்ன ஆயிற்று?

சேந்தன்   : ஐயோ.. வலி கொல்கிறதே.. இந்தப்  பொறிஉருளியில் வந்த ஆசாமி

வேகமாக வந்து எம் மேலே மோதி இப்படி ஆய்விட்டதடா..

சேரன் : ஏய்யா.. பார்த்து வரக்கூடாது.. சின்னப்பிள்ளைகள் வருகிற இடம்.. வீடுகள் இருக்கிற இடத்துல இப்படி வேகமாக வரலாமா? (அடிக்கப் போகிறான்)

சேந்தன்     : (மெதுவாக எழுந்து கொண்டே) சேரன்! என்னோட  மிதிவண்டியைப்

பாருடா.. இப்படி ஆய்விட்டது…(அழுகிறான்)

சேரன் : சரிடா விடு. உனக்கு ஒன்றும் ஆகவில்லையே.. சின்னக் காயத்தோடு  தப்பினாய்!

வா.. வா.. அந்த ஆளைப் பிடித்து  மிதிவண்டியைச் சரி செய்து

வாங்கிக் கொள்ளலாம்..

 

காட்சி – 5

 

சேந்தன்   : டேய்! சேரன்! நீ கேட்ட பொழுதே உன்கிட்ட  மிதிவண்டியைக்

கொடுத்திருந்தால் இப்படி ஆகியிருக்குமா? எம்மேலதான் தப்பு.. நீ

மோதிடுவாய் என்று சொன்னேன்.. அது நானே மோதும்படி ஆய்விட்டது..

சேரன் : டேய்! அப்படி எல்லாம் பேசாதே.. ஏதோ ஆய்விட்டது.. அப்படியே

விட்டு விடுடா..

சேந்தன்   : இல்லை சேரா! என்னுடைய எதிர்மறை எண்ணம்தான் இந்த

விளைவை ஏற்படுத்தி இருக்கிறது.. உனக்கு  மிதிவண்டி கொடுக்க

மனமில்லாமல் நீ மோதி விடுவாய் என்று சொன்னேன். ஆனால் பார்..

நானே மோதி விட்டேன்..

சேரன் : டேய்.. டேய்.. விடுடா.. பெரிய இவன் மாதிரி.. தத்துவமெல்லாம்

பேசிக் கொண்டு.. அங்கே பார்! உங்கள் அப்பாவே வருகிறார்!

 

காட்சி – 6

 

சேகரின் அப்பா : சேந்தன்.. மிக நன்றாகச் சொன்னாய்.. எதிர்மறை எண்ணங்கள்

எப்பொழுதும் வரக்கூடாது. நல்லதையே நினைக்க வேண்டும்..

நல்லதையே சொல்ல வேண்டும்.. நல்லதையே செய்ய

வேண்டும்..

சேரன் : மாமா.. மாமா.. நீஙக வேற.. சேந்தன் எப்பவும் இப்படி செய்யவே

மாட்டான்.. ஏதோ புது மிதிவண்டி… அதனால்…

அப்பா   : அப்படியில்லை சேரா! … ஒருவேளை உன்னிடம் அவன் மிதிவண்டியை

எதிர்மறையாக  எண்ணாமல் கொடுத்திருந்தால் இந்த  நேர்ச்சியே

நடக்காமல் போயிருக்கலாம்.. எனவே சேரா! சேந்தன்! உங்கள்

இருவருக்கும் இப்பொழுது மட்டுமல்ல.. இனி எப்பொழுதும் வேண்டா

எதிர்மறை எண்ணங்கள்…

 

(நிறைவு)