மருமகள்

–   க.தமிழமல்லன்

“இனி ஒரு நொடி கூட நான் இங்கிருக்கமாட்டேன். உங்க அப்பாவுக்குக் கொஞ்சங் கூட நாகரிகமே தெரியவில்லை. இவ்வளவு முதுமையிலும் கீழ்த்தரப்பண்பு போகவில்லையே! ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது அவர் இருக்க வேண்டும்.  உடனே வழிபண்ணுங்கள்”

“இரு, இரு. அமைதியாய் இரு. எங்க அப்பா எப்படிப்பட்டவர் என்று தெரியாமல் பேசாதே!“

“எல்லாம் எனக்குத் தெரியும். நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? அவர் மிகவும் ஒழுக்கமானவர், இதுவரைக்கும்  சிறுதவறும் செய்யாதவர், எல்லார்க்கும் வழிகாட்டி…அப்படி இப்படி என்று நீங்கள் சொல்லப்போகிறீர்கள். நானும் அப்படித்தாங்க நம்பினேன்“.

தன் மருமகளும் மகனும் இப்படிக்காரமாய்ப் பேசிக்கொண்டிருந்ததைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் மாமியார் கலையரசி. தன் மருமகள் கணவர்மேல் அப்படி என்ன குற்றத்தைச்சுமத்தப் போகிறாள் என்று கவலையுடன் காதுகொடுத்தாள்.

“நானும் பார்க்கிறேன் அன்றாடம் நான் குளிக்கும்போதுதான் குளிக்கிறார். கதவைத் திறந்துவைத்துவிட்டுக் குளிக்கிறார்ங்க..“

“மறந்து போயிருப்பாரு..“

“இல்லீங்க. அவர் வேண்டுமென்றேதான் அப்படிச் செய்கிறார் .எனக்கு மிகவும் தொல்லையாய் இருக்கிறது…உங்களுக்குத் தெரியாது…. ஒரு நாள் நான் போகிறேன் கழிவறையைக் கூடத் தாழ்ப்பாள் போடமல் இருந்தார்ங்க..“

கலையரசி குழம்பிப் போனாள். கணவனிடம் சொல்ல உடனே ஓடினாள் .ஒரு நொடி தயக்கம். “நான் அவரிடம் போய்க் கேட்கலாமா? அப்படிக் கேட்பது….இத்தனையாண்டு நான் அவருடன் வாழ்ந்தது பொருளற்றதாய்விடுமே…அவர் எப்படிப்பட்டவர்…எவ்வளவு பெரியவர்? எத்தனை பெரிய அறிவாளி? பத்தரை மாற்றுத்தங்கமல்லவா? ஒழுக்கத்தில் அவரைப் போன்றவர் இருக்கமாட்டார்களே? சே! அவரைப் போய் ஐயங்கொள்வதா?”

வீட்டு முன்னே நின்ற வண்டியில் பொருள்கள் ஏற்றப்படுவதைப் பார்த்துவிட்டு மாடியிலிருந்து பரபரக்க ஓடிவந்தார் பெரியவர். அவரைப்பார்த்தும் பாராதது போல் உள்ளே போய்விட்டான் மணி.

“என்னப்பா, வண்டியில் பொருளையெல்லாம் ஏற்றுகிறாய்? என்ன செய்யப்போகிறாய்?

பின்தொடர்ந்த தன் தந்தையைப் பார்க்கவும் கூசினான் மணி… என்றாலும் அவரைச் சினத்துடன் பார்த்துச் சீறினான்.

“உங்கள் முதுமைக்கு இதெல்லாம் தேவைதானா? முதுமைக்குத் தகுந்தபடிதான் நீங்கள் நடக்கிறீர்களா? வெளியில் உங்களை எல்லாரும் எப்படி மதிக்கிறார்கள்? ஆனால் வீட்டுக்குள் நீங்கள் அருவருப்பாக நடப்பது சே..”

“இருப்பா! எல்லாம் எனக்குத் தெரியும். உனக்குத் தொல்லையில்லாமல் வேறு ஏற்பாடு செய்து விட்டேன். மேலே, வேறு குளியலறை கட்டச் சொல்லிவிட்டேன்பா. நானும் அம்மாவும் மேலேயே இருக்கிறோம். உன் மனைவிக்குத் தொல்லையில்லாமல் நீ கீழ்வீட்டில் நன்றாக இரு. தனிக்குடும்பம் நடத்து! நீங்கள் தனியாக ஆக்கிச் சாப்பிடுங்கள். வீட்டைவிட்டுப் போவது உனக்குத்தான்பா தீமை. உன் சம்பளத்தில் வாடகைவீட்டில் இருக்க முடியுமா?“

“அப்பா நீங்கள்…“

ஒன்றும் பேசாதப்பா. எனக்கு 76அகவை ஆகிவிட்டது. சருக்கரை, குருதி அழுத்தம் எல்லாம் இருக்கிறது. உனக்குத் தெரியும் என் நண்பர் என்ன சொன்னார் தெரியுமா?

“குருதி அழுத்தம் உள்ளவர்கள் நடக்கும்போதே விழுந்து செத்துவிடுவார்கள்” அப்படி என்றார். நான்குளிக்கும் போது அப்படி ஆனால், என் பிணத்தை எடுக்க நீங்கள் தொல்லைப்படலாமா? அதற்குத்தான் தாழ்போடாமல் குளித்தேன்.“ என்றார்.

மணிக்குத் தொண்டை அடைத்தது.

 

 +++++