என்றைக்குமே இன்பம் நிலைகொள்ள வேண்டும்
செங்கதிர் எழுந்ததடி
எங்கும் ஒளி ஆனதடி
பொங்கல்திரு நாளடியே என்னருந் தோழி — அதோ
பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந்தோழி
தெங்கில்இளம் பாளையைப் போல்
செந்நெல்அறுத் தார் உழவர்
அங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி — அவர்
சங்கத் தமிழ் பாடிப்பாடி என்னருந்தோழி.
கட்டடித்தே நெல்லளந்தே
கட்டை வண்டி ஏற்றுகின்றார்
தொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி — அவர்
தோளை வையம் வாழ்த்திற்றடி என்னருந்தோழி.
கொட்டு முழக் கோடு நெல்லைக்
குற்றுகின்ற மாத ரெல்லாம்
பட்டுடை இழுத்துக் கட்டி
என்னருந் தோழி — பாடும்
பாட்டெல்லாம் வெல்லமடி
என்னருந்தோழி.
முத்தமிழ் முழக்கமடி
எங்கணும் இசைக் கருவி
முத்தரிசி பாலில் இட்டார்
என்னருந் தோழி — வெல்லக்
கட்டியுடன் நெய்யுமிட்டார்
என்னருந் தோழி.
தித்திக்கும்தே னும்பலாவும்
செவ்வாழையும் மாம்பழமும்
ஒத்துக் கலந்துண்டா ரடி
என்னருந் தோழி — அவர்
ஒக்கலும் மக்களு மாக
என்னருந் தோழி.
எங்கணும் மகிழ்ச்சியடி
எவ்விடத்தும் ஆடல் பாடல்
பொங்கலோ பொங்கல் என்றார்
என்னருந் தோழி.
பொங்கிற்றடி எங்குமின்பம்
என்னருந் தோழி.
திங்களிது தையடியே
செந்தமிழ ரின்திருநாள்
இங்கிது போல் என்றைக்குமே
என்னருந் தோழி
இன்பம் நிலைகொள்ள வேண்டும்
என்னருந் தோழி.
. . . . . . . . .
வெல்க தமிழர்! மிகஓங்க செந்தமிழ்தான்!
வெல்க தமிழர் விடுதலை! — பல்க
தமிழர் அறமே! தனித்துயர்க யாண்டும்
தமிழர்நல் வாழ்வு தழைத்து.
– பாவேந்தர் பாரதிதாசன்
Leave a Reply