(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 13 & 14 தொடர்ச்சி)

 திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 15 & 16

பதினைந்தாம் பாசுரம்
தமிழே பிற உயிரினங்களிலும்
ஐவண்ணப் பைங்கிளிபோல் ஐம்மிளிரும் நாயகியாள் !
தூவிறகு அன்னம்போல் தன்சொல் பிரித்துயர்வாள் !
ஓவியக்கண் பீலிப்புள் ஒய்யாரம் காட்டுதல்போல்
மேவும் சபைதன்னில் மேதைமை செய்திடுவாள் !
மாவரசு சிங்கம்போல் மேலாண்மை கூடியவள் !
மூவாத ஆல்போல் மண்ணுள் விழுதூன்றிப்
பாவாணர் போற்றப் பரந்துவிரிந் தோங்கிடுவாள் !
நாவால் தமிழன்னை நற்புகழ்சொல் எம்பாவாய் !

 

பதினாறாம் பாசுரம்

நல்லூழால் நாம் தமிழரானோம் !

எல்லாச் சிறப்பும் இவளோ டுளவதனால்
இல்லாச் சிறப்பென்றொன் றேதும் இலாததனால்
கல்லாரின் நெஞ்சும் கவர்ந்திழுக்கும் தன்மையதால்
சொல்லே ருழவர்கள் சொற்சிலம்பம் ஆடுவதால்
வல்லோராய்ப் பன்மொழிகள் வாயுரை செய்வோரும்
செல்லா திருந்தமைந்தார் செந்தமிழைக் கற்றபின்னால்!
நல்லூழால், நற்றவத்தால் நாம்தமிழின் பிள்ளையானோம்!
புல்லார்முன் தாயைப் புரந்திடவா, எம்பாவாய் !

 

கவிஞர் வேணு குணசேகரன்

கவிஞர் வேணு குணசேகரன்

(தொடரும்