செந்தமிழ்க் காதலன் சின்னச்சாமி – திருச்செங்கோடு என்.கே.பி.வேல்
1.
செந்தமிழுக் குயிரீந்த சின்னச்சாமி!
தென்னகத்து வரலாற்றின் சின்னமாம் நீ!
வெந் தணலில் நொந்துயிரை இந்திக் காக
விட்டவனே! மொழிக்காதல் கற்றவன் நீ!
தந்தைதாய் மனைமக்கள் சொந்தம் நீத்தாய்!
தண்டமிழின் உயிர்ப்பண்பாம் மானம் காத்தாய்!
அந்தோநான் என்னென்பேன் அரிய தியாகம்
யாருனைப்போல் தாய்மொழிக்காகச் செய்தா ரிங்கே?
2.
தொடுத்தபுகழ்க காஞ்சிமா நகரில் தோன்றித்
தொல்லாண்மைத் திராவிடரின் சோர்வைப் போக்கி
அடுக்குமொழி மேடைகளில் அழகாய்ப் பேசி
அனைவருமே தமிழ் சுவைக்க எளிய தாக்கிக்
கொடுத்தபெரும் தமி அறிஞர் அண்ணா இந்தி
குறித்தெடுத்த போராட்டக் களத்தில் உன்னைக்
கொடுத்துமுதற் களப்பலியாய் கொண்டாய் வெற்றி!
குலவு தமிழ்க் காவலனே! சின்னச்சாமி!
3.
ஏடதிலே தமிழ்ப் பெருமை எழுதித் தீர்ப்பார்;
இணையில்லை தமிழிசைக்கே என்பர்; கூத்து;
நாடகங்கள்; திரைப்படங்கள்; மேடைப்பேச்சும்
நடத்திடுவார்; பொருள்சேர்ப்பார்; தமிழால் வாழ்வார்
நாடறிய இந்திக்கே ஓர்போர் ஆட்டம்
நடத்திடவே அரசதனை ஒடுக்கக் கண்டாய்
தேடரிய திருவிளக்கே சின்னச்சாமி!
தீக்குளித்தாய் செந்தமிழின் காதலாலே!
4.
அன்றொருநாள் செந்தமிழின் சுவையில் மூழ்கி
அறம்பாடி வைத்தநந்திக் கலம்ப கத்தைச்
சென்றிடுநும் முயிரிதனை கேட்டா லென்றே
செப்பவுமச் செய்திக்கு அஞ்சா னாகி
வென்றிடுமத் தண்டமிழ் நூல் கேட்டே நல்ல
வீரச்சா வேந்திநின்ற பல்லவன் தான்
இன்றைக்குந் தமிழ்காக்க வந்தான் போலும்
என்னம்மோ யார் கண்டார் சின்னச்சாமி!
5.
இன்றல்ல நேற்றல்ல பல்லாண்டாக
இனிய தமிழ் மொழியழிக்கப் பல்லாற்றாலும்
ஒன்றிவந்த வடமொழியால்; பிறர்பண் பாட்டால்;
உற்றதீ; அறியாமை; வெள்ளம் தன்னால்;
பொன்றாமல் மேன்மேலும் பொலிந்து வாழும்
பொருவில்லாப் பைந்தமிழை இனிக்கும் பேச்சை
இன்றுவந்த இந்திமொழி கெடுக்க எண்ணும்
எண்ணத்தை உயிரீந்து கெடுத்து விட்டாய்!
6. பிற்காலச் சோழர்களின் பெருவாழ் விற்கு
பெற்றமகட் கொடையாகக் கொடுத்து வந்த
முற்கால மறவர்களின் குலங்கள் வாழ்ந்த
மூதூராம் கீழப்பழுவூரில் தோன்றித்
தற்காலம் தமிழர்களின் பெருவாழ்விற்கே;
தமிழ்டமிழ்க்கே இடையூற்றை இந்தி செய்ய
முற்போர்க்கோ லங்கண்டாய் சின்னச் சாமி!
முத்தமிழ்க்கா வலனானாய் வாழ்க! மன்னா!
7.
உன்னரிய தாய்மொழியின் தியாகங் கண்டு
உளம் நெகிழ்ந்த நடிகரெம்சி இராமச் சந்திரன்
பன்னரிய செயலென்றையாயி ரத்தை
பண்புடனே சுப்ரமணியம் ஆயி ரத்தை
பொன்முடிப்பாய் அளித்துள்ளார்; மற்றுமுள்ளோர்
புகழ்கின்றார்; வியக்கின்றார்; போற்றுகின்றார்;
மன்னியநின் திருவுருவை சிலையாய் நாட்டி
மறவாமல் வணங்கிடுவோம் சின்னச்சாமி!
– குறள்நெறி: பங்குனி 19, தி.பி.1995 / 01.04.1964: பக்கம் 12
Leave a Reply