தமிழரை வலிமை கொள்ளச் செய்குவாய்! – நாமக்கல் கவிஞர்
5,6/6
இளந்தமிழனுக்கு
ஓடி ஓடி நாட்டி லெங்கும்
உண்மை யைப்ப ரப்புவாய்;
ஊன மான அடிமை வாழ்வை
உதறித் தள்ள ஓதுவாய்;
வாடி வாடி அறம்ம றந்து
வறுமைப் பட்ட தமிழரை
வாய்மை யோடு தூய்மை காட்டும்
வலிமை கொள்ளச் செய்குவாய்;
கூடிக் கூடிக் கதைகள் பேசிச்
செய்கை யற்ற யாரையும்
குப்பை யோடு தள்ளி விட்டுக்
கொள்கை யோடு நின்றுநீ
பாடிப் பாடித் தமிழின் ஓசை
உலக மெங்கும் பரவவே
பார்த்த யாரும் வார்த்தை கேட்டுப்
பணியு மாறு சேவைசெய். 5
தமிழ னென்ற பெருமை யோடு
தலைநி மிர்ந்து நில்லடா!
தரணி யெங்கும் இணையி லாஉன்
சரிதை கொண்டு செல்லடா!
அமிழ்த மென்ற தமிழி னோசை
அண்ட முட்ட உலகெலாம்
அகில தேச மக்க ளுங்கண்
டாசை கொள்ளச் செய்துமேல்
கமழ்ம ணத்தின் தமிழில் மற்ற
நாட்டி லுள்ள கலையெலாம்
கட்டி வந்து தமிழர் வீட்டில்
கதவி டித்துக் கொட்டியே
நமது சொந்தம் இந்த நாடு
நானி லத்தில் மீளவும்
நல்ல வாழ்வு கொள்ளச் சேவை
செய்து வாழ்க நீண்டநாள்! 6
(தொடரும்)
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை
Leave a Reply