தமிழ் வளர்கிறது! 13-15 : நாரா.நாச்சியப்பன்
(தமிழ் வளர்கிறது! 10-12 : நாரா.நாச்சியப்பன் தொடர்ச்சி)
தமிழ் வளர்கிறது! 13-15
செந்தமிழில் மறுமலர்ச்சி சேர்ப்ப தற்கே
சிறுகதைகள் புதுக்கவிதை வசனப் பாட்டு
விந்தையுற எழுதுகிறோம் என்று சொல்லி
விளையாடும் எழுத்தாளர் கூட்ட மொன்றாம் !
அந்தநாள் ஆபாசக் கதையை யெல்லாம்
அச்சாக்கி மலிவான விலைக்கு விற்றுச்
செந்தமிழைப் பரப்புவதாய்ப் பசப்பு கின்ற
சிறுவணிகர் கூட்டந்தான் மற்றென் றாகும்! (13)
இலக்கியத்தைத் தெருவெல்லாம் பரப்ப வென்றே
எழுந்ததோர் இயக்கமெனில், தெருவின் பேச்சை
இலக்கியமாய்த் தொகுத்தெழுதிப் பெருக்கு தற்கும்
எதிரியென ஒரியக்கம் இருக்கக் கண்டோம்.
கலக்கமின்றித் தெளிவான நீர்கு டிக்கக்
கருதியொரு திருக்குளத்தில் இறங்கும் போது
மலக்குவையைத் தனக்குணவாய்க் கொள்ளும் பன்றி
மணிகுளத்தில் நீராடித் திரிதல் போலே ! (14)
வருவாளே வராளென் றெழுது வோனும்
வருவானே ரெழுத்தாளன் என்று கூறி !
திருவான தமிழேடு தெருவில் வந்தால்
செழித்தோங்கும் எனநம்பி வழிதி றந்தோம்.
தெருவீதிப் புழுதியெலாம் பறந்து வந்து
திருவீட்டில் நுழைந்துதமிழ் ஏட்டி லேறி
உருவான தமிழொளியை மறைக்கக் கண்டோம் !
உடன்புழுதி துடைப்பதற்கோர் இயக்கம் வேண்டும்! (15)
(தொடரும்)
பாவலர் நாரா. நாச்சியப்பன்:
தமிழ் வளர்கிறது
Leave a Reply