(மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார் :3 / 6 தொடர்ச்சி)

 

 

மாணவர் ஆற்றுப்படை – பேராசிரியர் சி.இலக்குவனார்

4/6

அவர்கருத் தறிந்தே அன்பாய் ஒழுகும்                                               110

தம்பியும் மக்களும் தமரும் பெற்றவர்.

கோவிந்த சாமியாம் கூறும் தம்பி

கொடுப்பதும் கொள்வதும் குறைமிக வின்றி

அறநெறி போற்றிடும் அரிய வணிகர்.

புன்னகை தவழும் நன்னல முகத்தர்.                                                  115

அடக்கமே வடிவம்; அன்பே பண்பு

அண்ணனுக் கேற்ற அருள்உளத் தம்பியர்

உடலால் இருவர் உளத்தால் ஒருவர்

பகுக்க முயல்வோர் பயன்பெறத் தவறும்

உறுதிப் பாட்டால் ஒன்றிய கேண்மையர்.                                         120

ஆதலின்

குமணனின் உயர்ந்த குலவுசீர் அண்ணனை

சென்றுநீ கண்டிடச் சிறிதும் அஞ்சேல்!

வீட்டினும் வெளியினும் விரும்பும் மாணவர்

அன்பாய்த் தொடர அறிவுரை நவின்றே                                             125

கையில் குடையும் காலில் செருப்பும்

மெய்யில் தூய வெண்மைச் சட்டையும்

எளிமையும் இனிமையும் ஏற்றமும் பண்பும்

உருவெடுத் ததுபோல் உயர்நடைச் செம்மல்

செல்வதைக் காணலாம்; செல்கநீ தம்பி,                                              130

வீட்டிலும் வெளியிலும் அன்றி விரும்பிச்

செல்லும் இடம்தனைச் செப்புவேன் கேளாய்

தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறும்

மருத்துவர் இயல்பெலாம் மரபாய்க் கொண்டு

பிணிதனைப் போக்கலே பெருங்கடனாக                                            135

மக்கள் தொண்டு மகிழ்வுடன் ஆற்றும்

இனிய நண்பர் இராமச் சந்திரர்

மருத்துவ அறிஞர் மருத்துவ மனையாம்

இராமன ருளில்* இருந்திடக் காண்பாய்

 

– பேராசிரியர் சி.இலக்குவனார்

[புதுக்கோட்டையில் புகழ்வாய்ந்த மருத்துவராகத் திகழ்ந்த மரு.இராமச்சந்திரனைக் குறிக்கின்றது.]