புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.8 – 1.6.12
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.3- 1.6.7 தொடர்ச்சி)
இராவண காவியம்
1. தமிழகக் காண்டம்
6. தாய்மொழிப் படலம்
8. ஒருமொழி யேனு மினையநாள் காறு
முலகெலாந் தேடியு மடையா
இருவகைக் கைகோ ளன்பினைந் திணையோ
டெழுதிணை யகம்புற மென்னும்
பொருளினை யுடைய பழந்தமிழ்த் தாயைப்
பொருளிலா ளெனப்புகல் பொய்யர்
மருளினை யுண்மைப் பொருளென மதிப்போர்
மதியினுக் குவமையம் மதியே.
9. பேசுநற் குணமு மெழுதெழில் வனப்பும்
பெரியர்சொற் கடந்திடா வொழுக்கும்
வீசொளி மணிப்பூண் பெருக்குமே வரிய
முதுமையோ டிளமையும் வேறோர்
ஆசிலாத் தனித்த நடையுமா கியவிவ்
வறுவகைச் சிறப்பொடு பொலிந்து
மாசிலா மணியா யொளிர் தமிழ்த் தாயை
வடகுட மாதரொப் பாரோ?
10. ஏயதங் கருத்தை யுரைத்திடும் பாட்டு
முரையுமா கியமுத லியலும்
மேயவப் பாட்டைப் பண்ணொடு திறனு
மேவுற விசைத்திடு மிசையும்
வாயவவ் விரண்டோ டுளப்படு கருத்தை
மனக்கொள நடிக்குநா டகமும்
ஆயமூ வுறுப்பி தனையுறுப் பறையென்
றறைகுவ ரறிவிலா வெறியர்.
11. ஒருவகை யொலிப்பு மிருவகை வழக்கு
முரியமுப் பெயருநாற் பாவும்
இருதகை வருமைந் தியலுமா றுறுப்பு
மெழுவகைத் திணையுமெண் வனப்பும்
மருவிய வொன்பான் சுவையும்பத் தழகும்
வகைபட வமைதமிழ் மொழியைத்
திருகிய மனத்தார் சிறப்பிலை யென்று
செப்பினொப் பவர்பொறுப் பவரே.
12. பகுத்தறி வுடைய மக்களை யாண்பெண்
பாலெனு முயர்திணை யாவும்
பகுத்தறி விலவோ டனைத்தையு மொன்று
பலவெனு மஃறிணை யாவும்
பகுத்தறி தரவீற் றெழுத்தினா லவற்றைப்
பாங்குட னுணர்த்திடுந் தமிழ்க்குப்
பகுத்தறி வில்லா தாக்கிய வுலகப்
பான்மொழி யிணையெனப் படுமோ?
+++++++++
8. இருவகைக்கை கோள் – களவு, கற்பு. அகத்திணை ஏழாவன – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என்பன. இவற்றிற்கு முறையே வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பன புறத்திணைகளாகும்.
9. பெரியர் சொற்கடவாமை – இலக்கணவரம்புடைமை. மணிப்பூண் பெருக்கு – இலக்கியப்பரப்பு.
10. வாய – வாய்த்த.
11. இருதகைவரும் – மிகத்தகுதி வாய்ந்த. இயல் -இலக்கணம். இருவகை வழக்கு – உலக வழக்கு, செய்யுள் வழக்கு. முப்பெயர் – இயல், இசை, நாடகம். நாற்பா – வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சிப்பா. ஐந்திலக்கணம் – எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி. ஆறுறுப்பு – எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை. எழுவகைத்திணை 8-ஆம் பாட்டில் காண்க. வனப்பெட்டு – அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயையு, புலன், இழைபு. ஒன்பான் சுவை – நகை. அழுகை, இழிவு, வியப்பு, அச்சம், வீரம், வெகுளி, உவகை, நடுநிலை. பத்தழகு – சுருங்கச் சொல்லல் முதலியன. (மரபியல் – 109)
++++++++
(தொடரும்)
இராவண காவியம் – புலவர் குழந்தை
Leave a Reply