(அகல் விளக்கு – மு.வரதராசனார். 71. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 27 தொடர்ச்சி

“ஊரில் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள்? நீ ஒன்றுமே சொல்லலையே?” என்றான்.

“நீ ஒன்றும் கேட்கவில்லையே. எதைப் பேசினாலும் உடனே விம்மி விம்மி அழுகிறாய். அதனால் உடம்பும் கெட்டுப்போகிறது” என்றேன்.

அழுவது ஒன்றுதான் இப்போது என் மனத்துக்கு மருந்தாக இருக்கிறது. உண்மையாய்ச் சொல்கிறேன் வேலு அழுத பிறகுதான் மனம் அமைதியாக இருக்கிறது. அழுவது நல்லது, மிக மிக நல்லது வேலு” என்றான்.

“ஊரில் எல்லாரும் நல்லபடி இருக்கிறார்கள். அப்பா இருக்கிறார். தங்கை கற்பகம் இருக்கிறாள்” என்றேன்.

“ஏன்? இன்னும் மைத்துனன் வந்து அழைத்துப் போகாமலே இருக்கிறானா?”

“இல்லை, இப்போது அன்பாக இருக்கிறார்கள். மாலன் முன் போல் இல்லை. மனம் திருந்திவிட்டான்.”

“அப்பா! நல்ல செய்தி சொன்னாய் அப்பா. என் வயிற்றிலே பால் வார்த்தாற் போல் இருக்கிறது. நல்லபடி இருக்கட்டும்; போ. கற்பகத்தின் வாழ்க்கையும் கெட்டுப் போகுமே என்று பயந்தேன். ஆசுபத்திரியில் இருந்தபோது அவளைப் பற்றி நினைத்துக் கவலைப்பட்டேன். நல்லபடி வாழணும்” என்றான்.

காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு மிக அமைதியாகப் பேசினான். பழைய சந்திரனுடைய அறிவின் தெளிவை அந்தப் பேச்சில் கண்டேன்.

“வேலு! எனக்கு ஒன்று தோன்றுகிறது. எனக்கு இளமையிலேயே காம உணர்ச்சி மிகுதியாக இருந்தது. என்னைப்போல் எத்தனையோ பிள்ளைகள் இருப்பார்கள் அல்லவா?” என்றான்.

“ஆமாம். உடல்நூல் அறிஞர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. அறிவின் ஆற்றல் மிகுதியாக உள்ளவர்களுக்கு இந்த உணர்ச்சியும் மிகுதியாம். உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு போனால் அவர்கள் சிறந்த அறிஞராக விளங்குவார்களாம்” என்றேன்.

“அது சரி. அப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெண்ணின் அன்பு இல்லாமல் பட்டினி போட்டால் கெட்டுப் போவார்களே, நான் அப்படித்தான் கெட்டொழிந்தேன். பழங்காலத்தில் போல பதினெட்டு இருபது வயதில் திருமணம் முடித்துவிட்டால்-“

“படிப்புக்கு இடையூறாகப் போய்விடும். வளர வேண்டிய திறமை வளராமலே போய்விடுமே. அது பெரிய இழப்பு அல்லவா?”

“அதுவும் உண்மைதான்” என்று தெளிவாகச் சொல்ல முடியாமல் அவனுடைய தொண்டை கரகரத்தது. கனைத்தான். உடனே இருமல் வந்தது. மார்பைத் தடவிக் கொண்டான். பிறகு தொண்டையை ஒருவாறு சரிப்படுத்திக் கொண்டு, “பெண்களின் அன்பைப் பெற முடியாமல் தடுக்கும்போது, அவர்களின் அழகும் கண்ணில் படாதவாறு தடுக்கவேண்டும். அதை செய்யாமல்-” என்று சொல்லி நிறுத்தினான். பிறகு “சிலர் முகமூடி போட்டு மறைப்பதும் இதற்குத்தானோ, என்னவோ? துறவியாகும் பெண்களையும் விதவைகளையும் மொட்டை யடிக்கும் வழக்கமும் உலகத்தில் இருக்கிறது. ஆமாம், பெண்ணின் அழகு பொல்லாதது. கெடுத்துவிடும் என்று பயந்து தான் செய்திருப்பார்கள்.”

“இருந்தாலும் நாகரிகம் அல்ல.”

“அது சரி. ஒப்புக் கொள்கிறேன். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் முடியுமா? என் பழைய வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. கல்லூரியில் படிக்கும்போது அந்தப் பெண்ணின் அன்பு கிடைத்தவரையில் கெடாமல் இருந்தேன். நீலகிரியில் அந்தத் தேயிலைத் தோட்டத்திலும் ஒருத்தியின் அன்பு கிடைத்தது. ஒழுங்காகத்தான் இருந்தேன். அவள் முரட்டுப் பெண். முரட்டுப் பெண்ணாக இருந்தாலும், அன்பில் முரட்டுத் தன்மை ஏது? எங்கள் ஊர்தான் என்னைக் கெடுத்துவிட்டது.”

இவ்வாறு அவன் சொன்னபோது, ஊர் அல்ல. ஊரில் இருந்த செல்வம், அதிகாரச் செருக்கு, காசுதான் காரணம் என்று அப்போது எனக்குள் எண்ணிக் கொண்டேன்.

“அவர்கள் நானாகத் தேடிப்போன பெண்கள். என் மனைவி அப்படி நான் தேடியவள் அல்ல. அவள் வரும் போதே பயந்து வந்தாள். நான் அவளிடம் அன்பைப் பெறவில்லை. பயத்தைத்தான் பெற்றேன்.”

அவன் முதலில் அன்பைத் தராமல் அதிகாரத்தைக் காட்டியிருப்பான். அதுதான் காரணம் என்று எண்ணிக் கொண்டேன்.

“ஊரில் கண்ட பெண்களோடு பழகினேன். அவர்கள் பயந்து பயந்து வந்தார்கள். அது ஒரு வாழ்வா! சே! ஊர்ச்சோற்றைத் திருடி உண்பது ஒரு வாழ்வா? நம் உரிமையான உணவு ஆகுமா? இப்படி என்னைப்போல் எத்தனை பிள்ளைகள் கெடுகிறார்களோ என்று எண்ணும்போது வருத்தமாக இருக்கிறது. அதனால்தான் பெண்ணன்பு பெறும் வரையில் பெண்ணழகு கண்ணுக்குத் தோன்றாமலே இருந்தால் நல்லது என்று கருதுகிறேன்” என்றான்.

மறுபடியும் அவனே பேசத் தொடங்கினான் “அல்லது, ஐரோப்பியர்களைப் போல் அமெரிக்கர்களைப்போல் நம்மவர்களும் வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டும். ஆண்களையும் பெண்களையும் இளமையில் பழகவொட்டாமல் பூச்சி பூச்சி என்று பயபடுத்திப் பிரிப்பதை விட்டுவிட வேண்டும். அழகுப் பசி இயற்கையாக இருக்கிறது.

அப்படி இளமையில் கலந்து பழக நிறைய வாய்ப்புகள் இருப்பதால் ஐரோப்பிய இளைஞர்கள் அழகைக் கண்டு கண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். இங்கே இயற்கையான பசியை அடக்க வேண்டியிருக்கிறது. ஆனால் சினிமா நாடகங்களில் அழகும் அலங்காரமும் இருப்பதால், அந்தப் பசி மறைமுகமாகத் தூண்டிவிடப்படுகிறது. சமுதாயத்திலோ பார்த்துப் பேசியும் பழகுவதற்கும் வாய்ப்பு இல்லை. இயற்கையான உணர்ச்சிகளை அடக்குவதில் சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். பலர் கெட்டுப்போகிறார்கள்” என்றான்.

“ஆண்கள் அழகாக இல்லையா? அழகான ஆண்களோடு பழகி அந்த அழகுப்பசியைத் தீர்த்துக் கொள்ளக் கூடாதா?” என்றேன். வேண்டும் என்றே கேட்டேன்.

“நீ பெரிய பைத்தியக்காரன்! இயற்கை அப்படிப் படைத்திருக்கிறது. ஆணின் கண்ணுக்குப் பெண்கள் தான் அழகாக இருப்பார்கள். தெருவில் ஏழெட்டுப்பேர் ஆண்களும் பெண்களும் போவதைப் பார்க்கிறாய். யாரை நன்றாகப் பார்ப்பாய்? பெண்களே போகாவிட்டால் ஆண்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அப்போது ஆண்களின் அழகு உன் கண்ணுக்குப் புலப்படாது. அப்படியே தான் பெண்களுக்கும், இயற்கை ஏற்படுத்திய கவர்ச்சி அது. நாய்க்கு இறைச்சியைப் பார்த்தால்தான் வாயில் நீர் ஊறும். பசுவுக்குப் புல்லைப் பார்த்தால்தான் வாய் ஊறும். அதுபோல்தான்” என்றான்.

இவ்வளவு அமைதியாக அறிவாகப் பேசுகிறானே என்று வியந்தேன். நேற்றோடு அவனுடைய கதறலும் அழுகையும் உணர்ச்சியும் முடிந்தன என்று மகிழ்ந்தேன்.

ஆனால் மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தபோது, முன் நாள் போலவே உடம்பைச் சொரிந்து கொண்டும் தலையை அசைத்துக் கொண்டும் அமைதி இல்லாமல் இருந்தான். காப்பி குடித்துக் கால்மணி நேரம் ஆனதும், பெருமூச்சும் அய்யோ என்ற குரலும் கேட்டன. “வேலு! நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கணும்? என்னால் இனிமேல் யாருக்கு நன்மை ஏற்படப்போகிறது? பெற்ற தாய் இல்லை. தந்தை முகத்தில் நான் விழிக்கப்போவதில்லை. கட்டின மனைவியும் இல்லை. ஏன்’பா இந்த வாழ்வு?” என்று கண்ணீர் விட்டு அழத் தொடங்கினான்.

சிறிது நேரம் அமைதியானேன். ஏதோ பழைய நிகழ்ச்சியை நினைத்துக்கொண்டு குமுறுகிறான் என்பது முகக்குறிப்பால் தெரிந்தது. “நம் தோட்டத்தில் சொக்கான் என்று ஒருத்தன் இருந்தானே, நினைவு இருக்கிறதா? ஏழைக் குடும்பம். அவனுடைய பெண் அழகாக இருந்தாள். பக்கத்து ஊரில் கொடுத்திருந்தான். நான் அந்தக் குடும்பத்தையும் கெடுத்தேன். அப்போது பாவம் என்ற எண்ணமே இல்லாமல் பணம் கொடுத்து ஏமாற்றிவிட்டேன். அப்பா கேள்விப் பட்டிருந்தால், என்னைப் பற்றி என்ன நினைப்பார்? இப்படிப்பட்ட கெட்ட வழி அப்பாவுக்குத் தெரியவே தெரியாது. அந்த உத்தமர் வயிற்றில் பிறந்த நான், எவ்வளவு அநியாயம் செய்தேன். நான் ஏன் அந்தக் குடும்பத்தில் பிறந்தேனோ, அய்யய்யோ!” என்று ஒரு பேதைப் பெண் போல் புலம்பினான்.

உடனே, “அப்போதே அதற்குத் தண்டனையும் அனுபவித்தேன். ஒருத்தி என்னை ஏமாற்றினாள். இரண்டு பவுனில் சங்கிலி ஒன்று செய்து போட்டால் சரி என்று ஒருத்தி ஒப்புக் கொண்டாள். மனைவி கழுத்தில் நாலு பவுன் சங்கிலி ஒன்று இருந்தது. அதைக் கழற்றிக் கொண்டு போனேன். அவளுடைய குடிசையில் அவள் சொன்ன நேரத்தில் நுழைந்து சங்கிலியைக் கொடுத்து விட்டுப் பேசிக் கொண்டிருந்தேன். வெளியேயிருந்து அவளுடைய கணவனும் இன்னொருத்தனும் திடீரென்று நுழைந்தார்கள்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார், அகல்விளக்கு