(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 4. தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்

அத்தியாயம் 1 தொடர்ச்சி

மணி ஒன்பதரை, சாப்பாட்டை முடித்துக்கொண்டு புத்தகப் பையும் கையுமாகப் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட திருநாவுக்கரசனும், சம்பந்தனும் ஏதோ நினைவு வந்ததுபோல் வாயிற் படியருகே தயங்கி நின்றனர். கடைசித் தங்கை குழந்தை மங்கையர்க்கரசிக்குக் கைகழுவி விடுவதற்காக வாயிற்புறம் அழைத்துக் கொண்டு வந்த பூரணி, அவர்கள் நிற்பதைப் பார்த்து விட்டாள்.

“ஏண்டா இன்னும் நிற்கிறீர்கள்? பள்ளிக்கூடத்துக்கு உங்களுக்கு நேரமாகவில்லையா?”
மூத்தவன் எதையோ சொல்ல விரும்புவது போலவும், சொல்லத் தயங்குவது போலவும் நின்றான். அதற்குள் பூரணியே புரிந்து கொண்டுவிட்டாள்.

“ஓ! பள்ளிக்கூடச் சம்பளத்துக்குக் கடைசி நாளா? இரு பார்க்கிறேன்.” குழந்தைக்குக் கைகழுவி விட்டு உள்ளே போய்ப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். இருந்ததைக் கொட்டி எண்ணியதில் ஏழரை உரூபாய் தேறியது. பாங்குப் புத்தகத்தை விரித்துப் பார்த்தாள். எடுப்பதற்கு அதில் மேலும் ஒன்றுமில்லை எனத் தெரிந்தது. தம்பியைக் கூப்பிட்டு ஏழு உரூபாயை அவனிடம் கொடுத்து “சம்பளத்தை இன்றைக்கே கட்டிவிடு” என்று சொல்லி அனுப்பினாள். அவர்கள் “வருகிறோம் அக்கா” என்று சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள். அந்த வீட்டின் எல்லையில் தங்கிய கடைசி நாணயமான அந்த எட்டணாவைப் பெட்டிக்குள்ளே போட்டபோது, பூரணிக்குச் சிரிப்புத்தான் வந்தது. துன்பத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று நினைக்கிறபோது உண்டாகிற வறண்ட சிரிப்புதான் அது.

வாசலில் அஞ்சல்காரன் வந்து நின்றான். கூடத்தில் உட்கார்ந்து அம்புலிமாமா பத்திரிகையில் பொம்மை பார்த்துக் கொண்டிருந்த மங்கையர்க்கரசி துள்ளிக் குதித்தோடிப் போய் அஞ்சல்களை வாங்கிக் கொண்டு வந்தாள். பெரிய (உ)ரோசாப்பூ ஒன்று கையும் காலும் முளைத்து வருவதுபோல் அந்தச் சிறுமி அக்காவை நோக்கி ஓடி வந்தாள். தங்கை துள்ளிக் குதித்து ஓடிவந்த அழகில் பூரணியின் கண்கள் சற்றே மகிழ்ச்சியும் மலர்ச்சியும் காட்டின.

வழக்கம்போல் பெரும்பாலான கடிதங்கள் அப்பாவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வந்தவைதான். இரண்டொரு கடிதங்கள் இலங்கையிலிருந்தும் மலேயாவிலிருந்தும் கூட வந்திருந்தன. கடல் கடந்து போயும் அப்பாவின் நினைவை மறக்காத அந்தப் பழைய மாணவர்கள் செய்தித்தாள்கள் மூலம் விவரமறிந்து எழுதியிருந்தார்கள். அவ்வளவு புகழும் பெருமையும் வாய்ந்த ஒருவருடைய பெண்ணாக இருப்பதை நினைப்பதே பெருமையாக இருந்தது அவளுக்கு.

கடைசியாகப் பிரிக்கப்படாமல் இருந்த இரண்டு உறைகளில் ஒன்றைப் பிரித்தாள். தலைப்பில் இருந்த பெயரைப் படித்ததும் அவள் முகம் சிறுத்தது. அப்பாவிடம் வீட்டில் வந்து தனியாகத் தமிழ்ப் படித்தவரும் பெருஞ் செல்வரும் ஆகிய ஒரு வியாபாரி எழுதியிருந்த கடிதம் அது. தமிழ் சொல்லிக் கொடுத்தாலும் அந்த வியாபாரியின் குணமும் முறையற்ற அரசியல் பித்தலாட்டங்களும் அப்பாவுக்குப் பிடிக்காது. கடைசிவரையில் பிடிவாதமாக அந்த மனிதனிடம் கால்காசு கூட வாங்கிக் கொள்ள மறுத்துக் கொண்டே அவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து அனுப்பி விட்டார் அவள் அப்பா.

‘ஏழைகளின் இரத்தத்தைப் பிழிந்து பணம் சேர்த்தவன் அம்மா இவன். மனத்தில் நாணயமில்லாமல் கைகளில் நாணயத்தைக் குவித்துவிட்டான். தமிழைக் கேட்டு வருகிற யாருக்கும் இல்லையென்று மறுப்பது பாவம் என்று நம்புகிறவன் நான். அந்த ஒரே நம்பிக்கைக்காகத்தான் இவனைக் கட்டிக் கொண்டு அழுகிறேன்’ என்று பலமுறை வெறுப்போடு அந்த மனிதரைப்பற்றி பூரணியிடம் சொல்லியிருக்கிறார் அவர். உலகத்தில் எந்த மூலையில் எவ்வளவு பெரிய மனிதனிடத்தில் நாணயக்குறைவும் ஒழுக்கக் குறைவும் இருந்தாலும் அந்த மனிதனைத் துச்சமாக நினைக்கிற துணிவு அப்பாவுக்கு உண்டு. பண்புக்குத்தான் அவரிடம் மதிப்பும் மரியாதையும் உண்டு. வெறும் பணத்திற்கு அதை அவர் தரவே மாட்டார். இத்தனை நினைவுகளும், வெறுப்பும் பொங்க அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தாள் பூரணி.

“இதனுடன் தொகை போடாமல் என் கையெழுத்து மட்டும் போட்டு ஒரு காசோலை  இணைத்திருக்கிறேன். தங்களுக்கு எவ்வளவு தொகை தேவையானாலும் எழுதி எடுத்துக் கொள்ளலாம். தந்தை காலமான பின் தங்கள் வீட்டு நிலையை என்னால் உணர முடிகிறது. தயவு செய்து இதை மறுக்கக்கூடாது.”

பூரணியின் முகம் இன்னும் சிறுத்தது. கடிதத்தின் பின்னால் இருந்த கனமான அந்த வண்ணக் காகிதத்தைப் பார்த்தாள். அந்த சிவப்பு நிற எழுத்துகள் எல்லாம் ஏழைகள் சிந்திய கண்ணீர்த் துளிகளில் அச்சடிக்கப்பட்டனவா? உலகத்திலேயே மிகவும் இழிந்த ஒன்றைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பது போல் ஒரு அருவருப்பு உண்டாயிற்று பூரணிக்கு.

அந்தக் கடிதத்தையும் காசோலையையும் வெறுப்போடு கீழே வீசியெறிந்துவிட்டு நிமிர்ந்தாள். எதிரே அதற்காக அவளைப் பாராட்டுவதுபோல் அப்பாவின் படம் சிரித்துக் கொண்டிருந்தது. எப்போது சிரிக்கிற சிரிப்புதான் அப்போது அப்படித் தோன்றியது.

பூரணி உள்ளே போய் பேனாவை எடுத்து வந்தாள். கீழே கிடந்த அந்தக் காசோலையை எடுத்து அதன் பின்புறம் ‘அப்பாதான் செத்துப் போய்விட்டார். அவருடைய தன்மானம் இன்னும் இந்தக் குடும்பத்திலிருந்து சாகவில்லை. சாகாது. உங்கள் உதவிக்கு நன்றி! தேவையானவர்களுக்கு அதைச் செய்யுங்கள். இதோடு உங்கள் காசோலை திரும்பி வருகிறது’ என்று எழுதி வேறு உறைக்குள் வைத்தாள். வீட்டில் எப்போதோ வாங்கிப பயன்படுத்தப்படாமல்  அஞ்சல் தலைகள் கொஞ்சம் இருந்தன. அவற்றை ஒட்டி முகவரி எழுதினாள். முதல் வேலையாக அதை எதிர்ச்சாரியில் தெருவோரத்தில் இருந்த அஞ்சல் பெட்டியில் கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்தாள். அதைச் செய்ததும்தான் கையிலிருந்து ஏதோ பெரிய அழுக்கைக் கழுவித் தூய்மைப்படுத்திக் கொண்ட மாதிரி இருந்தது அவளுக்கு. மனத்தில் நிம்மதியும் பிறந்தது.

திரும்பி வந்ததும், பிரிக்கப்படாமல் இருந்த மற்றோர் உறை அவள் கண்களில் தென்பட்டது. குழந்தை மறுபடியும் ‘அம்புலிமாமா’வைப் பொம்மை பார்க்கத் தொடங்கியிருந்தாள். பூரணி அதுவும் ஒரு அனுதாபக் கடிதமாக இருக்கும் என்று பிரித்தாள். திருப்பரங்குன்றத்தில் அவர்கள் குடியிருக்கும் அந்த வீட்டின் சொந்தக்காரர் மதுரையில் குடியிருந்தார். அவர் எழுதியிருந்த கடிதம்தான் அது.

வீட்டை அடுத்த மாதம் விற்கப் போகிறேன். அதற்குள் தாங்கள் தரவேண்டிய ஆறு மாதத்து வாடகைப் பாக்கியைச் செலுத்திவிட்டு வேறு இடம் பார்த்துக் கொள்ள வேண்டியது.”
கடிதம் அவள் கையிலிருந்து நழுவிக் குழந்தை வைத்திருந்த அம்புலிமாமாவுக்குப் பக்கத்தில் விழுந்தது.

“அக்கா இந்தாங்க” என்று மழலையில் மிழற்றிக் கொண்டே குழந்தை மங்கையர்க்கரசி அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். பூரணி அப்பாவின் படத்தை அந்த அற்புதக் கண்களைப் பார்த்துக் கொண்டு சிலையாக நின்றாள்.

‘பெண்ணே! வாழ்க்கையில் முதல் துயர அம்பு உன்னை நோக்கிப் பாய்கிறது. நான் இறந்தபின் நீ சந்திக்கிற முதல் துன்பம் இது. கலங்காதே. துன்பங்களை வெல்லுகிற முயற்சிதான் வாழ்க்கை.

அப்பாவின் படம் பேசுவதுபோல் ஒரு பிரமையை உண்டாக்கிக் கொண்டாள் அவள். அவருடைய அற்புதக் கண்களிலிருந்து ஏதோ ஓர் ஒளி மெல்ல பாய்ந்து பரவி அவளிடம் வந்து கலக்கிறதா? அவள் மனத்தில் துணிவின் நம்பிக்கை ஒளி பூத்தது.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி