மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 53
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 52 தொடர்ச்சி)
குறிஞ்சி மலர்
19 தொடர்ச்சி
திருவேடகநாதரை வணங்கி வரவும், நிலங்கரைகளைப் பார்த்து வரவும் வாரத்துக்கு இரண்டு முறையாவது ஊருக்குப் போய் விட்டு வருவார் மீனாட்சிசுந்தரம். இன்னொரு பழக்கமும் அவரிடம் இருந்தது. தடங்கல்களும் சந்தேகமும் ஏற்படுகிற எந்தக் காரியமானாலும் திருவேடகநாதர் கோவிலில் போய்ப் பூக்கட்டி வைத்துப் பார்த்து உறுதி செய்து கொள்வதென்று வழக்கப்படுத்திக் கொண்டிருந்தார் அவர். இதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அரவிந்தனைத் தேர்தல் விசயமாகப் பூரணியைக் கலந்து கொண்டு வர கோடைக்கானலுக்கு அனுப்புவதற்கு முன் தினம் அதிகாலை அவனையும் கூட்டிக் கொண்டு திருவேடகத்துப் புறப்பட்டு விட்டார் அவர்.
மதுரைச் சீமையில் சோழவந்தானுக்கு அருகிலிருந்த வையை நதியின் வடபுறமும், தென்புறமும் அமைந்துள்ள பசுமை மயமான கிராமங்களின் அழகுக்கு ஈடு இணை இருக்க முடியாது. ‘வையை’ என்னும் ‘பொய்யாக் குலக்கொடி’ என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் வர்ணித்திருக்கிறாரே, அந்த வையை நல்லாளின் சீரிளமைத்திறம் காணவேண்டுமானால் தென்னஞ்சோலைகளுக்கு நடுவே அவள் அன்ன மென்னடை நடந்து கன்னிமை ஒயில் காட்டிக் கலகலத்து ஓடும் இப்பகுதியில் காண வேண்டும். பசுமைப் பூத்து எழுந்த வனத்தின் தூண்களை நட்டுப் பயிர் செய்தாற்போல் வாழைத் தோட்டங்கள், போகம் போகமாய் வெறும் நிலம் காண நேரமின்றிப் பசுமை காட்டி விளையும் நெற்கழனிகள், பசுமைக் குன்று புடைத்தெழுந்தாற் போல செறிந்து தெரியும் கொடிக்கால்கள். அந்தப் பகுதியில் வையைக் கரையின் ஒவ்வொரு கிராமமும் ஓர் இன்பக் காவியம். ஒவ்வொரு காட்சியும் ஒரு சொப்பன சௌந்தரியம். இந்தப் பகுதியின் வையைக் கரை மண்ணில் பிறந்தவரைப் போல் பெருமையும் கருவமும் கொள்ளத் தகுதியுடையவர் வேறெங்குமே இருக்க முடியாதென்பது மீனாட்சி சுந்தரம் அவர்களின் திடமான எண்ணம். திருஞானசம்பந்தப் பெருமான் மதுரைக்கு அருகில் சமணர்களோடு புனல்வாதம் புரிந்த காலத்தில் அவர் இட்ட ஏடு வையை நதியை எதிர்த்துச் சென்று கரையேறிய தலமாதலால் அந்த ஊருக்குத் ‘திரு ஏடகம்’ என்று பெயர் ஏற்பட்டிருந்தது. இதற்கு முன்பும் இரண்டு மூன்று அதிகாலையில் அவரோடு திருவேடகத்துக்கு வண்டியில் வந்திருக்கிறான் அரவிந்தன். அங்கு வரும்போதெல்லாம் அவனைக் கவர்ந்து மனதை அடிமை கொள்வன அந்தத் தேவாரப் பாடசாலையும், அதன் இயற்கைச் சூழ்நிலையும் தான்.
நகரச் சந்தடியின் ஓசை ஒலியற்ற அமைதியில் மூழ்கிக் கிடக்கும் அந்தப் பெரிய தென்னஞ்சோலைகளுக்குள்ளிருந்து தலைநீட்டும் கோபுரத்தின் அருகேயிருந்து தெய்வமே குரல் எடுத்து அழைப்பது போல், ‘குண்டலந்திகழ்தரு காதுடைக் குழகனை’ என்று அற்புதமான பண்ணில் ஞானசம்பந்தரின் பாடலை இளங்குரல்கள் பாடுகிற ஒரே ஒலிநாதம் என்கிற மதுரசக்தியே விண்ணிலிருந்து அந்தத் தோப்புக்குள் சன்னமாக இழைந்து குழைந்து உருகிக் கொஞ்சமாய் அமுத இனிமையுடன் ஒழுகிக் கொண்டிருப்பது போல் ஒரு பிரமையை உண்டாக்கும். இந்த அனுபவத்தில் தோய்வதை அரவிந்தன் பேரின்பமாகக் கருதினான். தொலைவிலிருந்து பார்க்கும் போது ஊர் தெரியாது. தென்னை மரங்களின் பரப்புக்கு மேலே அந்தப் பசுமைப் பரப்பையே தனமாகக் கொண்டு முளைத்துப் பூத்தாற் போல் கோபுரம் மட்டும் தெரியும். அங்கு வரும்போதெல்லாம், ‘இந்தக் கோபுரம், இந்தத் தேவாரக் குரல் ஒலி, இந்த எளிமை அழகு பொங்கும் தெய்வீகச் சிற்றூர்கள் இவைதான் தமிழ்நாட்டின் உயிர், பெருமை எல்லாம். இவை அழிந்த தமிழ்நாடு தமிழ்நாடாக இராது. இந்தப் பழைய அழகுகள் அழியவே கூடாது. இவற்றைக் கொண்டு பெருமைப்பட என்றும் தமிழன் கூசக்கூடாது, என்று மனமுருக அரவிந்தன் நினைப்பான். ஆனால் ஆடம்பர ஆரவாரங்களைக் கொழுக்கச் செய்து மனங்களை வளர்க்காமல் பணத்தை மட்டும் வளர்க்கும் நகரங்களின் வாழ்க்கை வேகத்திலும், அவசரத்திலும் இந்த அழகுகளைத் தமிழர்கள் மறந்தும், மறைத்தும் எங்கோ போய்க் கொண்டிருப்பதை நினைக்கும்போது அவன் உள்ளம் நோகும். ‘ஏடகம் கண்டு கைதொழுதால் கவலை நோய் அகலும்’ என்று சம்பந்தர் பாடியிருந்தார். உண்மையிலேயே கவலையைப் போக்குகிற ஏதோ ஒரு ஆற்றல் அந்த ஊரின் செயற்கை அழுக்குகள் படியாத இயற்கை அழகில் இருப்பதை அரவிந்தன் உணர்ந்தான். நெடுந்தூரத்திற்கு நெடுந்தூரம் ஆள் புழக்கமற்ற பெரிய தென்னந்தோப்பு ஒன்றில் பேதைப் பருவத்துச் சிறுமி ஒருத்தி தனியாகப் புகுந்து மருண்டு ஓடுவது போல் வையை நதி அந்தப் பிரதேசத்தில் பாய்ந்தோடுகிற அழகைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதுமே! ஆற்றின் இருகரையும் நிறைய ஆணவம் பொங்கிடப் பாய்கிற வழக்கம் வையையிடம் இல்லை. புது மணப்பெண் நடந்து செல்லுகிற மாதிரி ஒல்கி ஒசிந்து ஓர் ஓரமாகப் பாய்ந்து செல்வது வையையின் அடக்கத்துக்கு ஓர் அடையாளமோ?
தேவாரப் பாடசாலையைச் சுற்றிப் பார்த்துவிட்டு மீனாட்சி சுந்தரமும், அரவிந்தனும் ஏடகநாதரை வழிபடச் சென்றார்கள். அம்மன் சந்நிதியில் பூக்கட்டி வைத்துப் பார்ப்பதென்று திட்டம். ‘ஏலவார் குழலி அம்மை’ என்று எழில் வாய்ந்த தமிழ்ப்பெயர் திருவேடகத்து அம்மனுக்கு. திருஞானசம்பந்தர் காலத்துப் பாண்டியன் கட்டியதாக தல வரலாறு கூறும் அந்தக் கோயிலை பின்னாளில் நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் பெரிதாக்கி அழகுபடுத்தி இருந்தார்கள். தமிழ்நாட்டுத் திருத்தலங்களில் ஒவ்வொரு கோயிலும், ஒவ்வொரு கல்தூணும், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்குமே!
கோயிலுக்குள் மீனாட்சிசுந்தரம் அவனைக் கேட்டார். “என்னுடைய வழக்கம் தான் உனக்கு நன்றாகத் தெரியுமே. இந்தக் கோயிலில் பூக்கட்டி வைத்துப் பார்த்தபின் முடிவு நன்றாக இருந்தால் நான் எதையுமே நிறுத்த மாட்டேன். எப்பாடுபட்டாவது அந்தக் காரியத்தை நிறைவேற்றியே தீருவேன். இப்போது இங்கே அம்மனுடைய தீர்ப்பு எப்படி ஆகிறதோ அப்படியே செய்வதற்கு நீயும் இணங்குகிறாய், நீயும் கட்டுப்படுகிறாய் அரவிந்தன்! என்ன? உனக்குச் சம்மதந்தானே?”
அரவிந்தனுக்குச் சமய நம்பிக்கை உண்டு, ஆனால் சடங்குகளில் நம்பிக்கை குறைவு. அந்தச் சமயத்தில் அவரை விட்டுக் கொடுக்கலாகாதே என்பதற்காகச் ‘சம்மதந்தான்’ என்று சொல்லி வைக்க வேண்டியதாயிற்று அவர்கள் ஏலவார் குழலியம்மன் சந்நிதிக்கு முன் நின்றார்கள்.
“இதோ இது நந்தியாவட்டைப் பூ, அது செவ்வரளிப் பூ. இரண்டையும் ஒரே மாதிரி இலையில் கட்டிப் போடுகிறேன். வெள்ளைப் பூ வந்தால் பூரணி தேர்தலில் நிற்கிறாள். சிவப்புப் பூ வந்தால் நிற்கவில்லை” என்று சொல்லிப் பூக்களை அவனிடம் காட்டி விட்டு இலையில் வைத்து ஒரே அளவாக முடிந்து குலுக்கிப் போட்டார் அவர். எலிவால் பின்னலும் அழுக்குப் பாவாடையுமாக அம்மன் சந்நிதியில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் குழந்தையைக் கூப்பிட்டு, “இந்த இரண்டு பொட்டலங்களில் உனக்குப் பிடிச்ச ஏதாவது ஒண்ணை எடுத்துக் கொடு, பாப்பா!” என்று கூறினார் மீனாட்சிசுந்தரம். சிறுமி சிரித்துக் கொண்டே இரண்டு முடிச்சுக்களையும் பார்த்து இரண்டில் எதை எடுப்பதென்று தயங்கி நின்றாள். பின்பு குனிந்து ஒரு முடிச்சை எடுத்து அவர் கையில் கொடுத்துவிட்டு ஓடிவிட்டாள்.
“என்ன பூ என்று நீயே பிரித்துப் பார், அரவிந்தன்!” என்று அவனுடைய கையில் அதை அப்படியே கொடுத்தார் அவர். அரவிந்தனின் உள்ளம் ஆவலும் துடிப்பும் கொண்டு தவித்தது! தவிப்போடு பிரித்தான்.
வெள்ளை வெளேரென்று பச்சை இலைக்கு நடுவே நந்தியாவட்டைப் பூ சிரித்தது! ‘நீ தோற்றுவிட்டாய்’ என்று சொல்வது போல் சிரித்தது! மீனாட்சிசுந்தரமும் சிரித்தார்.
“தெய்வசித்தமும் என் பக்கம் தானப்பா இருக்கிறது. எல்லாம் நல்லபடியாகவே முடியும்! நீ நாளைக்குக் காலையில் கோடைக்கானல் புறப்படுகிறாய். உன்னோடு அந்த முருகானந்தத்தையும் அழைத்துக் கொண்டு போ. இருவரும் எப்படியோ எடுத்துச் சொல்லி பூரணியைச் சம்மதிக்கச் செய்துவிட வேண்டும். உன்னால் முடியும்! நான் இன்று மாலையே உங்கள் வரவு பற்றிப் பூரணிக்குத் தந்தி மூலமாகத் தெரிவித்து விடுகிறேன். .. ” என்று பெருமை பொங்கச் சொன்னார் அவர். அரவிந்தன் மௌனமாக ‘ஆகட்டும்’ என்பது போல் தலையசைத்தான்.
அவர்கள் இருவரும் திருவேடகத்திலிருந்து மதுரை திரும்பி வந்தனர். ‘ஒரு முக்கியமான காரியமாகச் சந்தித்துப் பேசிவர அரவிந்தனை அனுப்புவதாக’ அன்று மாலையில் கோடைக்கானலுக்கு தந்தி கொடுத்துவிட்டார் மீனாட்சிசுந்தரம்.
(தொடரும்)
தீபம் நா.பார்த்தசாரதி
குறிஞ்சி மலர்
Leave a Reply