மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 78
குறிஞ்சி மலர்
அத்தியாயம் 27 தொடர்ச்சி
“உங்களுடைய உடம்புக்கு என்ன?”
“உடம்பெல்லாம் நன்றாக இருக்கிறது. மனத்துக்குத் தான் எல்லா இழவும்.”
அவருடைய குரலில் இருந்த கடுமையான வறட்சியைக் கண்டு மேலே எதுவும் பேசத் தோன்றாமல் தயங்கி நின்றான் அரவிந்தன். கோபமோ, கவலையோ அதிகமாகி உணர்ச்சி வசப்பட்டால் இரத்தக்கொதிப்பு (பிளட்பிரசர்) வந்துவிடும் அவருக்கு.
“எல்லாப் பயல்களும் சமயம் பார்த்துத்தான் காலை வாரி விடுகிறார்கள். குனிந்து கொள்ளச் சொல்லிப் பச்சைக் குதிரை தாவி விட்டுக் குப்புறத் தள்ளியும் விடுகிறார்கள். தேர்தல் செலவுகளுக்காக நம்முடைய திருவேடகத்து மேலக்கால் பாசன நிலத்தை விலை பேசியிருந்தேன் அல்லவா?”
“ஆமாம்! நேற்று கிரயப் பத்திரம் எழுதப் போவதாகச் சொன்னீர்கள்.”
“நேற்று எழுதலாமென்றிருந்தேன். வாங்குகிற ஆள் வரவில்லை. இன்னும் வரவில்லை. சந்தேகப்பட்டுக் கொண்டே போய் விசாரித்ததில் வாங்குவதற்கிருந்த ஆள் தயங்குகிறான். பருமாக்காரரும் புது மண்டபத்து மனிதரும் போய் அவனை ஏதேதோ சொல்லிக் கலைத்திருக்கிறார்கள்.”
“ஒன்றும் குடிமுழுகிவிடாது. இவன் வாங்காவிட்டால் என்ன? ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள்.”
“அப்படியில்லை அரவிந்தன்; அந்த இடத்தில் அவ்வளவு பணம் போட்டு நிலம் வாங்க இப்போது வேறு எவரும் அவசரப்படமாட்டார்கள். பலவிதத்தில் பணநெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறேன் அப்பா. தாள் கடைக்கு ஆயிரக்கணக்கில் பாக்கி நிற்கிறது. தாட்சண்யத்துக்காகத்தான் கேட்கத் தயங்கிக் கொண்டு அவர்கள் பேசாமல் இருக்கிறார்கள்.”
அவரையும், அவருடைய தைரியத்தையும் அதிர்ச்சியடையச் செய்த சூழ்நிலை அரவிந்தனுக்குப் புரிந்தது. ஆறுதலாக ஏதாவது அவரிடம் நிறையப் பேச வேண்டும் என்று நினைத்தான். ஒன்றும் சொல்ல வரவில்லை. நாலைந்து நாட்கள் கழித்து அவன் கிராமத்துக்குப் புறப்பட்ட போது மீனாட்சிசுந்தரம் இரத்தக் கொதிப்பு அதிகமாகிப் படுக்கையில் வீழ்ந்துவிட்டார். முருகானந்தத்தை உடனிருந்து கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருந்தான் அவன். கிராமத்தில் சிற்றப்பாவின் பதினாறாம் நாள் கருமாதிக்குப் பருமாக்காரர் வரவில்லை. அவர் வரமாட்டார் என்பது அரவிந்தன் எதிர்பார்த்ததுதான். ‘சிற்றப்பாவின் கேதத்துக்கு அவர் வந்ததே தன்னை வசியப்படுத்தி அழைத்துப் போய் மீனாட்சிசுந்தரத்திடமிருந்து பிரித்துவிடலாம்’ என்ற நோக்கத்தோடுதான் என்பதை இப்போது அரவிந்தன் ஒருவாறு உய்த்துணர்ந்து புரிந்து கொண்டிருந்தான். அவன் அவருடைய வலையில் சிக்காமல் வந்துவிட்டதனால் இனிமேல் தன்னையும் மீனாட்சிசுந்தரத்தையும், பூரணியையும் தம்முடைய மொத்தமான எதிரிகளாக வைத்துக் கொண்டு அவர் வைரம் பாராட்டுவார் என்றும் அவன் உணர்ந்திருந்தான்.
மிகச் சிறிய உணர்ச்சிகளையும் சில்லறை நோக்கங்களையும் தவிர பெரிதாக எதையும் நினைக்கத் தெரியாத அப்பாவிக் கிராமத்து மக்கள் அரவிந்தனுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றிப் பலவிதமாகக் கற்பனை செய்தார்கள். அவன் கிராமத்துக்கே வந்து குடியேறி சிற்றப்பாவின் சொத்து சுகங்களை ஆளத்தொடங்குவான் என்று எல்லாருமே எதிர்பார்த்தனர். “தம்பி, இனிமேல் ஊரோடு வந்துவிட வேண்டியதுதான். மதுரையில் என்ன காரியம்? ஒருத்தனுக்கு கீழே கைகட்டிச் சேவகம் செய்கிற வேலை இனிமேல் எதற்கு? சொத்துக்களெல்லாம் மேற்பார்க்கணும், சிற்றப்பாவைப் போல் நகை ஈட்டுக்குக் கடன் கொடுக்கிற காரியத்தையும் தொடர்ந்து செய்யலாம். என்னமோ நான் உனக்குச் சொல்கிற அட்வைசு இதுதான்” என்று தமக்குத் தெரிந்த ஒரே ஆங்கில வார்த்தையைக் கருவத்தோடு உபயோகித்து அரவிந்தனிடம் அறிவுரை கூறினார் ஒரு கிழவர். அரவிந்தன் அவருடைய அறிவுரையைக் கேட்டுத் தனக்குள் சிரித்துக் கொண்டான். கருமாதி முடிந்த மறுநாள் காலை அரவிந்தன் செய்த முதல் காரியம் சிற்றப்பாவின் வீட்டு வாசலில் ‘இங்கே நகை ஈட்டின் பேரில் வட்டிக்குக் கடன் கொடுக்கப்படும்’ என்று அழுக்கும் கறையும் படிந்து தொங்கிய அறிவிப்புப் பலகையைக் கழற்றி எறிந்ததுதான்.
“சின்னதம்பி, அதைக் கழற்றாதீங்க! இன்னும் பல பேர் கணக்கு முடிக்காமல் கெடக்கு. ஈடு வைத்த நகையை ரொம்பப் பேர் திருப்பிக்கிட்டுப் போகலை. வட்டி தராமல் பலபேர் கழுத்தறுப்புச் செய்றாங்க” என்று ஒப்பாரி வைத்தார் சிற்றப்பாவின் கணக்குப்பிள்ளை.
சிரித்தவாறே அரவிந்தன் எல்லாக் கணக்கையும் பார்த்தான்; தாலியிலிருந்து மோதிரம் வரை ஏழை எளியவர்கள் கடனுக்காக ஈடுவைத்த நகைகள் குவிந்து கிடந்தன. கணக்குப்பிள்ளையை விசாரித்ததில் நகையை ஈடு வைத்தவர்கள் உள்ளூரிலும், அக்கம்பக்கத்துச் சிறு கிராமங்களிலும் இருப்பதாகத் தெரியவந்தது. “உடனே மிதிவண்டியில் புறப்பட்டுப் போய் எல்லாருக்கும் தகவல் தெரிவித்து இங்கே வரச் செய்யுங்கள்” என்று கணக்குப் பிள்ளையைத் துரத்தினான் அரவிந்தன். அவரும் என்னென்னவோ சொல்லி மறுத்தார். “கடன் கொடுத்தவங்க கடன் வாங்கியவங்களைப் போய் அழைக்கிறது வளமை இல்லீங்க” என்றார் கணக்குப்பிள்ளை.
“வளமையாவது மண்ணாங்கட்டியாவது. நான் சொல்லுகிறபடி போய் அழைத்து வாரும் ஐயா!” என்று அரவிந்தன் சிறிது இரைந்த பின்பே அவர் தடை சொல்லாமல் புறப்பட்டுப் போனார். பகல் பன்னிரண்டு மணிக்குள் நகை ஈடு வைத்தவர்கள் ஒவ்வொருவராக வந்து வீட்டின் முன்புறம் கூடிவிட்டார்கள். வறுமை வாட்டங்களாலும் ஏழைமை ஏக்கங்களாலும் இளைத்த அவர்களுடைய மெலிந்த தோற்றங்களைப் பார்த்து நெஞ்சு நெகிழ்ந்தான் அரவிந்தன். விடுதலையும், உரிமை வாழ்வும் பாரத நாட்டு நகரங்களின் வளர்ச்சிக்கும் வளங்களுக்கும் பயன்பட்டிருக்கிற அளவு கிராமங்களுக்கும் அவற்றில் வாழும் அப்பாவி மனிதர்களுக்கும் பயன்படுகிற காலம் இன்னும் சரியாக வரவில்லை என்று அவன் உணர்ந்தான். ‘பாரத நாட்டின் ஆயிரமாயிரம் கிராமங்களில் இருளடைந்த சூழலும் இருளடைந்த உள்ளங்களுமாக வாழும் எளியவர்களை மனத்தில் வைத்துக் கொண்டுதான் காந்தியடிகள் உழைத்தார். அவருடைய உழைப்பின் பயன் நகரங்களின் எல்லையோடு நின்று போய்விட்டதே!’ என்று எண்ணிக் குமுறினான் அரவிந்தன். வந்திருந்தவர்களையெல்லாம் உட்காரச் செய்துவிட்டு உள்ளே திரும்பி, “கணக்குப் பிள்ளை! அடகு நகைகளையும் அவற்றுக்கான பத்திரங்களையும் எடுத்துக் கொண்டு வாருங்கள்” என்று கட்டளையிட்டான். அவர் அவனுடைய மனத்தின் குறிப்பைச் சரியாக விளங்கிக் கொள்ளாமல், “நகைகளும், பத்திரங்களும் எதுக்குங்க தம்பி? யார் யார், எவ்வளவு வட்டி தரணும், எத்தனை தவணைங்கிறதெல்லாம் தனிக் காகிதத்திலே குறிச்சே வச்சிருக்கேன்” என்றார்.
“அது தேவையில்லை! நகைகளையும் பத்திரங்களையும் கொண்டு வாருங்கள்.”
அவன் குரலின் உறுதிக்கு அஞ்சி அப்படியே செய்தார் கணக்குப்பிள்ளை. யார் யாருடைய அடகு நகை எதுவோ அதை முறையாக அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, “நீங்களெல்லாரும் இந்தக் கடனுக்கு வட்டி தரவேண்டியதில்லை. அசலைத் தந்தால் போதும், அதையும் இப்போதே என்னிடம் தரவேண்டுமென்று அவசியம் கிடையாது. உங்களுக்கு நான் ஒரு முகவரி தருகிறேன். இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் உங்களால் முடிகிற போது அந்த முகவரிக்கு நீங்கள் தரவேண்டிய அசலை அனுப்பி இரசீது பெற்றுக் கொண்டால் போதும்” என்றான். ‘ஏழைப் பெண்கள் திருமண உதவி நிதிச் சங்கம், மணி நகரம், மதுரை’ என்ற முகவரியை எல்லாருக்கும் தனித்தனியே எழுதிக் கொடுத்தான். “தரும தொரையே! நீங்க நல்லாயிருக்கணும்” என்று வாழ்த்தினார் அடகு நகையைத் திரும்பப் பெற்றுக் கொண்ட ஒரு முதியவர். சிலர் அவனுடைய கால்களைத் தொட்டு வணங்க ஓடிவந்தார்கள். அவன் சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டான். கால்களைப் பின்னுக்கு நகர்த்திக் கொண்டு எல்லாரையும் வணங்கி விடை கொடுத்தான். கணக்குப் பிள்ளைக்குத் தலை சுழன்று மயக்கம் வரும் போலிருந்தது. தூணைப் பிடித்துக் கொண்டு சமாளித்தார். பையனுக்குப் பைத்தியமோ என்று சந்தேகமாகிவிட்டது அவருக்கு.
அதன் பின்னும் பத்து நாட்கள் வரை அவன் கிராமத்தில் தங்கினான். தேர்தல் செலவுகளையும், அச்சகத்துக் கடன்களையும் சுமக்க வழியின்றி மீனாட்சிசுந்தரம் திணறுவது நினைவை இறுக்கியது அரவிந்தனுக்கு. பக்கத்துக் கிராமத்தில் ஒரு பெரிய பண்ணையார் பணத்தைக் குவித்து வைத்துக் கொண்டு விலைக்கு எந்தச் சொத்து வருகிறதென்று காத்திருந்தார். அவரிடம் வீடு தவிர மற்ற சொத்துகள் ஐம்பத்தேழாயிரத்துச் சொச்சம் விலை போயிற்று. சிற்றப்பாவின் சொத்துகள் நல்ல சமயத்தில் மீனாட்சிசுந்தரத்துக்கு உதவ வேண்டுமென்று அவன் மனம் ஆர்வத்தோடு உந்தியது. கணக்குப்பிள்ளை, “பெண் கல்யாணத்துக்கு நிற்குதுங்க” என்று பஞ்சப்பாட்டு பாடினார். அவர் கையில் இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு, “இப்போதைக்கு இந்த வீட்டிலும் நீரே குடியிருந்து கொண்டிரும்” என்றான் அரவிந்தன். “நீங்க புண்ணியப் பிறவீங்க” என்று நாத்தழுதழுக்கக் கூறினார் அவர்.
‘ஐம்பத்தையாயிரம் ரூபாய் நோட்டுக் கற்றைகளை எண்ணி முன்னால் வைத்தால், தனது நன்றிக்குரிய முதலாளியின் இரத்தக் கொதிப்பு நோய் பஞ்சாகப் பறந்துவிடும்’ என்று நம்பி ஆவல் சுரந்தது அவன் மனத்தில். ஆனால் அன்று அவன் இரயிலுக்குப் புறப்படுவதற்கு முன் வந்த தந்தி அவனுடைய ஆவலைக் கொன்று கதறி அழும் அழுகையாய்ப் பொங்கி வரச் செய்தது. தந்தியைப் படித்துவிட்டுச் சிறு குழந்தைபோல் மாலை மாலையாகக் கண்ணீர் வடித்து அழுதான் அரவிந்தன்.
(தொடரும்)
தீபம் நா.பார்த்தசாரதி
குறிஞ்சி மலர்
Leave a Reply