அதிமுக–திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்: விசயகாந்து
நாகை நாடாளுமன்றத் தொகுதி தேசிய சனநாயகக் கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் இராவணன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விசயகாந்து திருவாரூர் கீழவீதியில் பரப்புரை ஆற்றினார்.
“கடந்த முறை தேர்தல் பரப்புரையின்பொழுது தவிர்க்க இயலாத காரணத்தினால் திருவாரூர் வர இயலவில்லை. அதற்காக முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எங்கள் கூட்டணி மக்கள் கூட்டணி, வெற்றிக் கூட்டணி, தேசிய சனநாயகக் கூட்டணி. தமிழக மக்களுக்கு நல்லது நடப்பதற்காகக் கூட்டணி வைத்துள்ளோம்.
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, முப்போகம் விளைந்த பகுதி. தற்போது ஒரு போகம் சாகுபடி நடைபெறுகிறது. 8 மணி நேரம் மின்தடை, அறுவடைக்கு எந்திரங்கள் இல்லை. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கூத்தாநல்லூரை தனி வட்டமாக மாற்றுவேன் எனக் கடந்த முறை தி.மு.க. கூறியது ஆனால் செய்யவில்லை.
திருவாரூரில் பாதாளச் சாக்கடைத் திட்டம் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் தோண்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பணி நிறைவு பெறவில்லை. கமலாலய குளத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து பல நாட்களாகியும் அதனையும் சீரமைக்கவில்லை. இந்த தேர்தலில் மக்களை ஏமாற்றி வரும் அ.தி.மு.க.விற்கும், தி.மு.க.விற்கும் தக்க பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும். வைப்புத்தொகை வாங்க முடியாத நிலை ஏற்படுத்திட வேண்டும்.
மீத்தேன் திட்டத்திற்கு தி.மு.க. ஆட்சியில் தான் இசைவளிக்கப்பட்டது. அதன் பின் அ.தி.மு.க. அரசு தடையில்லாச் சான்றும் வழங்கியது. ஆனால் மக்களின் எதிர்ப்பால் திடீரென அந்தத் திட்டத்தினை ஆய்வு செய்ய அ.தி.மு.க. அரசு ஒரு குழு அமைத்தது. குழு அமைத்து 8 மாதங்கள் ஆகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மீத்தேன் திட்டத்தில் தி.மு.க., காங்கிரசு, அ.தி.மு.க. ஆகிய 3 கட்சிகளும் மக்களை ஏமாற்றி வருகிறது.
நாகையில் சிறிய துறைமுகம் செயல்பட்டு வந்தது. அதன் மூலம் வெங்காயம், மீன் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் தற்போது அந்தத் துறைமுகம் செயல்படவில்லை. மீன் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும் எனக் கூறினார்கள். ஆனால் இதுவரை அமைக்கவில்லை. நாகை மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு அரசு மடல் எழுதிக்கொண்டிருக்கிறது. மடலின் மூலம் தீர்வு கிடைக்குமா?
மோடி தலைமையிலான கூட்டணி தேசிய சனநாயகக் கூட்டணி கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகளைக் கண்டிப்பாக நிறைவேற்றித் தருவோம். இன்று தி.மு.க. சொத்து விவரங்களை அ.தி.மு.கவும், அ.தி.மு.க.வின் சொத்து விவரங்களை, தி.மு.க.வும் மாறி, மாறி வெளிப்படுத்தி வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் மக்களை ஏமாற்ற மாட்டோம். கண்டிப்பாகத் தேவைகளை நிறைவேற்றி தருவோம். தி.மு.க. 5 முறை ஆட்சி செய்தது. அ.தி.மு.க. 3 ஆம் முறை ஆட்சி செய்து வருகிறது. அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் 40 ஆண்டுகள் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
எனவே மோடி தலைமையிலான ஆட்சி அமைந்திட 40 தொகுதிகளில் தேசிய சனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எனவே நாகை நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வடிவேல் இராவணனுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றியை பெற்றுத்தர வேண்டும்.”
இவ்வாறு அவர் பேசினார்.
Leave a Reply