அனித்தாவின் பெயரில் புலமைப்பரிசில் :

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம் !

  தனது கல்வி உரிமைக்காகப் போராடி சாவடைந்து கொண்ட தமிழக மாணவி அனித்தாவுக்கு தனது மரியாதை வணக்கத்தினைத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அவரது பெயரில் புலமைப்பரிசில் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் பணிமனை  விடுத்துள்ள அறிக்கையின் முழுவிவரம் :

  தமிழ்நாடு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி செல்வி அனித்தா சண்முகம் தன்னைத்தானே அழித்துத் தனது உயிரை மாய்த்த நிகழ்வு, உலகத் தமிழ் மக்களின் இதயங்களைச் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

பொது(நீட்) தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி போராடிய அவருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம் செலுத்தும் அதேவேளை அவரது பிரிவால் வாடும்; அவரது குடும்பத்தினரதும் மக்களதும் துயருடன் தன்னையும் இணைத்துக் கொள்கிறது.

அனித்தா முன்வைத்த கோரிக்கைக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டு மாணவர்களும் மக்களும் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமை கலந்த ஆதரவினை வெளிப்படுத்திக் கொள்கிறது.

தனது மருத்துவக் கல்விக்கான வாய்ப்பு  பொது(நீட்)(NEET) தேர்வுமுறையால் பறிக்கப்பட்டதை எதிர்த்து அனித்தா சட்டரீதியாகப் போராடி வெற்றியடைய முடியாத நிலையில் தனது உயிரினைத் தானே அழித்து இத் தேர்வு முறைக்கான எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

  அரசியல் முறையாகப் போராட வேண்டிய ஒன்று தொடர்பாகத் தனது உயிரினை மாய்த்துக் கொள்ளும் முடிவினை அனித்தா எடுத்துக் கொண்டது ஒரு துன்பியல் செய்தியே என நாம் இந்நிகழ்வைச் சுருக்கி விட முடியாது. புதிய தேர்வுமுறையால் தனது கல்வி வாய்ப்புப் பறிக்கப்பட்ட நிலையில் தனது மரணத்தின் ஊடாக  இச்செய்தியினை ஏனைய மாணவர்களின் நன்மை கருதிய ஓர் அரசியற்  சிக்கலாக  மாற்ற அனித்தா முற்பட்டிருக்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது.

 சமத்துவ வாய்ப்பற்ற ஒரு கல்விச் சூழலில் தேர்வுகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் என்பவை அரசியல்  முறையில் மிகுந்த கவனத்துடன் செய்யப்படவேண்டியவை. மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக ஆழமாகக் கருதப்பட்டு எடுக்கப்பட வேண்டியவை. வாழ்க்கையின் விளிம்புநிலையில் இருந்து போராடிக் கல்வியின் ஊடாக முன்னேற்றத்தை அடையத் துடிக்கும் அனித்தா போன்ற மாணவரின் கல்விவாய்ப்பு பறிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைவரதும் தலையாய கடமையாகும்.

  மாணவி அனித்தா முன்வைத்த   பொது(நீட்) தேர்வுமுறை  நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழ் நாட்டில் மாணவர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத் தேர்வு முறை குறித்துத் தமிழ்நாட்டு மாணவர்களும் மக்களும் வெளிப்படுத்தும் எதிர்ப்பினை சமூகநீதியின் அடிப்படையில் தமிழ்நாட்டு மாணவர்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் எதிர்ப்பாகவே நாம் நோக்குகிறோம்.

  தமிழ்நாடு வாழ் மாணவர்களின் போராட்டத்துக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்க த்தினர் தோழமையுணர்வுடன் கூடிய ஆதரவினை வெளிப்படுத்துவதுடன் இப் போராட்டம் வெற்றியடைவதற்கான எமது வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 அனித்தாவின் கோரிக்கைக்குக் கிடைக்கும் வெற்றி ஏதோவொருவகையில் அவரது மரணத்துக்கு நீதி வழங்குவதாகவும் அமையும் எனவும் கருதுகிறோம்.

 தனது கல்வி உரிமைக்காகப் போராடிய அனித்தாவின் நினைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அவரது பெயரில் புலமைப்பரிசில்  திட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளது என்பதனை நாம் இத் தருணத்தில் வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

இத் திட்டம் குறித்த விரிவான விவரங்கள் விரைவில் அறியத் தரப்படும்.

அனித்தாவின் உயிர்த் தியாகத்துக்கு வணக்கம் செலுத்தும் அதேவேளை தமது கல்வி உரிமைக்காகப் போராடும் மாணவர்கள் எவரும் தமது உயிரினை மாய்த்துப் போராடும் முடிவினை எடுத்துக் கொள்வதனைத் தவிர்க்குமாறும் தோழமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tmdas5@hotmail.comTGTE