இலங்கைக் கடற்படையினருக்குப் பயிற்சியளிப்பது தொடர்பான,  படைத்துறை ஒத்துழைப்புக் கொள்கையை மறு  ஆய்வு செய்யுமாறு  முதல்வர் செயலலிதா  தலைமையாளர் மன்மோகன்சிங்கிற்கு மடல் அனுப்பி உள்ளார்.

இந்தியக் கடற்படை சார்பில், நடத்தப்பெறும்  கடல்சார் பாதுகாப்பு தொழில் நுட்ப  நான்கு ஆண்டுகள்  பட்டப்படிப்பில் (பி.டெக்.), இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும்  மத்திய அரசு  இடம் அளிக்க உள்ளது.  இந்தியக் கடற்படைத் தளபதி  சோசி,  இலங்கையில் இதனைத் தெரிவித்தள்ளார். பிற நாடுகள் கேட்டும் தரப்படாத வாய்ப்பு இலங்கைக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். (கூட்டாளிக்குத்தானே முதலிடம்!) இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே  முதல்வர்  மடல் அனுப்பி உள்ளார்.

“இலங்கையில், சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள் நிலை குறித்தும், இதனால், அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்தும், கடந்த இரண்டாண்டுகளாக, பல மடல்கள் மூலம் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். இலங்கையில் நடக்கும், மனித உரிமை மீறல், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் கண்டனம் தெரிவித்து, தமிழக சட்டசபையில் ஏற்கெனவே, நான்கு முறை, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதே போல், தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து, தாக்குதல் நடத்திக் கைது செய்து, சிறையிலடைப்பதுடன், அவர்கள் படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால், மீனவர்கள் குடும்பத்தினருக்குக் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த போரில், படுகொலை செய்யப்பட்டவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வற்புறுத்தப்பட்டு வருகிறது.

 தமிழினப்படுகொலைகளுக்காக மீண்டும் மீண்டும் பயிற்சியா?

“நீலகிரி மாவட்டத்தில், இலங்கை இராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கப்பட்ட போது, நான்கு முறை மடல் எழுதியதுடன், இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது முழுமையாக நிறுத்தப்படும் வரை, இலங்கை இராணுவத்திற்கு எவ்விதப் பயிற்சியும் அளிக்கக் கூடாது என வலியுறுத்தியிருந்தேன். இலங்கைக்குப் போர்க்கப்பல்கள் கொடுக்கும் ஓப்பந்தத்தையும், இந்தியா  நீக்க வேண்டும் என்றும் மடலில் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், இலங்கைக் கடற்படை அதிகாரிகளுக்கு, கடல் சார் பாதுகாப்பு தொழில் நுட்பம் தொடர்பான, (‘பி.டெக்.’) பட்டப்படிப்புப் பயிற்சியை, இந்தியக் கடற்படை வழங்க உள்ளதாக,  தகவல்கள் வெளியாகி உள்ளன.

இராசபக்சேவுடன் சந்தித்து முடிவெடுப்பா?

“இலங்கை அதிபர் இராஜபக்சேவை,  அண்மையில், இந்தியக் கடற்படைத் தளபதி சந்தித்துப் பேசிய பின், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக, அங்குள்ள இலங்கை ஆட்சியாளர்கள், மேலும், வலிமையாகச் செயல்படவும், தமிழக மீனவர்கள் மீதும் தாக்குதல்களை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.எனவே, இந்த, ராணுவ ஒத்துழைப்பு கொள்கைக்கு, என் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ராணுவ ஒத்துழைப்பு கொள்கையை உடனடியாக, மறு பரிசீலனை செய்ய வேண்டும்.இது போன்ற, இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் திட்டத்தைத்  தொடரக் கூடாது எனப் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு, மடலில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

“முதல்வர், தலைமையாளருக்கு, இது குறித்தும், தமிழர்கள் நலன் பற்றியும் எத்தனை மடல்களை எழுதினாலும், அவை, ‘எங்கு’ சென்று சேர்கிறது, என்பது முதல்வருக்கு இன்னும் தெரியவில்லையே…!” எனப் பொது நல ஆர்வலர் பலர், இச்செய்தியை, ஊடகங்கள் வாயிலாகக் கண்ட பின், ஆதங்கப்படுவதைத் தினமலர் நாளிதழ் வெளிப்படுத்தியுள்ளது.