மொரிசியசின் பின்பேசின்(Beau Bassin)என்னும் நகரில் விடுதலைப்புலிகள் நினைவுத்தூண்  அமைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் துயர நினைவுநாளான மே 18, 2012 இல் திறக்கப்பட்டது இது. மொரிசியசிலுள்ள பியூபேசின் உரோசு குன்று (Beau Bassin Rose Hill) நகர் மன்றம் உலகத்தமிழர்களின் போற்றுதலுக்கும் உலக மனித நேயர்களின் பாராட்டுதலுக்கும் உரித்தாகியுள்ளது.  ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளாலும் போரிலும் தங்கள் இன்னுயிர் நீத்தவிடுதலைப்புலிகளையும் அப்பாவி மக்களையும் நினைவுகூரும் வகையில் மாவீரர் நினைவுத் தூண் அமைத்துள்ளதே இதற்குக் காரணம் ஆகும். மொரிசியசு தமிழ்க்கோயில் கூட்டமைப்பின் (Mauritius Tamil Temple Federation – MTTF)  வேண்டுகோளை ஏற்று,  இந்நகர்மன்றத்தலைவர் உலூயிசு ஆன்றே  தியூசைண்ட்டு (Louis Andre Toussaint) மாவீரர்நினைவுத் தூணை நிறுவியுள்ளார். இலங்கையில்  உயிரிழந்த 146,679 அப்பாவித் தமிழர்களுக்கும் தம் தாய்நாட்டைக் காப்பதற்காக உயிர் துறந்த 40,000 மாவீரர்களுக்கும் நினைவுத்தூண் ஒப்படைக்கப்படுவதாக நினைவுக் கல்வெட்டு தெரிவிக்கிறது.

ஈழம் நினைவுத்தூண்

மாநகரத் தலைவரின் அலுவலகத்தின் மிகப்பக்கத்திலேயே இந்நினைவுத்தூண் எழுப்பப்பட்டுள்ளது. மொரிசியசு “மனித உரிமைகளை மதிக்கும் நாடு” என்பதால், மொரிசியசு தமிழ்க்கோயில் கூட்டமைப்பின் வேண்டுகோளை எவ்வகைத் தயக்கமுமின்றி ஏற்றதாகவும் மாநகரத்தலைவர் பெருமையுடன் தெரிவித்தார். இந்த ஆண்டின் மாவீரர் நாளன்று மாநகரத்தலைவராலும் பெருந்திரளான மக்களாலும்  நினைவுத்தூணிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல், பொதுவளஆய மாநாட்டைப் புறக்கணித்து, தம் நாட்டில் வாழும் தமிழ் மக்களின் உணர்விற்கு மதிப்பளிக்கும் மொரிசியசு அரசைப் போற்றும் உலக மக்கள் பிறரைத் தூற்றாமல் என்ன செய்வார்கள்?

தமிழக அரசு தன்   பாதையை மாற்றிக் கொள்ளுமா?

உலகத் தமிழர்களின் ஆதரவை மீளப் பெறுமா?

முள்ளிவாய்க்கால் முற்றத்தைச் சீரமைத்துத் தருமா?

தானே, வீரவணக்க மாடம் எழுப்புமா?