தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக் கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி!

இராமதாசு கண்டனம்.

  தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு  விலக்கிக் கொள்ள வேண்டும் என பாமாக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள இந்திய கடற்படை கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கடல்சார் பாதுகாப்பு தொழில்நுட்ப படிப்பில் சிங்களக் கடற்படையினர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இத்தகைய பட்டப்படிப்பில் தங்களது கடற்படை வீரர்களை சேர்த்துக் கொள்ளும்படி பல நாடுகள் கோரிக்கை விடுத்ததாகவும், அந்நாடுகளை விடுத்து, முன்னுரிமை அடிப்படையில் சிங்களப்படையினரை சேர்த்துக் கொள்ள இந்தியா முடிவு செய்திருப்பதாக இராசபக்சவிடம், இந்தியக் கடற்படை தளபதி தெரிவித்திருக்கிறார். தண்டிக்கப்பட வேண்டிய சிங்களப் படையினருக்கு இந்திய அரசு வரிந்து கட்டிக் கொண்டு பயிற்சி அளிக்கத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

  கடந்த 30 ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 3,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்கி, காயப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்களப் படையினரால்  தளையிடப்பட்டுள்ளனர். சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும் இன்றும் தொடர்கிறது. இதற்குக் காரணமான இலங்கை அரசைக் கண்டிக்க வேண்டிய இந்திய அரசு, முன்னுரிமை அடிப்படையில் சிங்களக் கடற்படையினருக்கு பயிற்சி அளிக்க முன்வந்திருப்பது தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயலாகும். சிங்களப் படையினருக்கு அளிக்கும் பயிற்சி, வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை அவர்கள் சுட்டுக்கொல்வதற்கு மட்டுமே பயன்படும்.

  ஈழத் தமிழர்களை படுகொலை செய்வதில் தொடங்கி தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் சுட்டுக் கொல்வது வரை அனைத்துச் சிக்கல்களிலும் 7 கோடி தமிழக மக்களின் உணர்வுகளை மத்தியஅரசு மதிப்பதே இல்லை. இதுகுறித்த தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. இந்தியா பயிற்சி அளிக்காவிட்டால் மற்ற நாடுகள் பயிற்சி அளிக்கத் தொடங்கிவிடும் என்று கூறியே சிங்களப் படையினருக்கு அனைத்து வகையான பயிற்சிகளையும் மத்திய அரசு அளித்து வருகிறது. உலக வல்லரசாக உருவெடுத்து வருவதாக அடிக்கடிக் கூறிக்கொள்ளும் இந்திய அரசு, குட்டி நாடான இலங்கையின் மிரட்டல்களுக்கு பணிந்து, அதன் கோரிக்கைகளை நிறைவேற்றுவது கண்டிக்கத்தக்கது.

  இலங்கை அதிபர் இராசபக்சவை சந்தித்துப் பேசிய இந்தியக் கடற்படைத் தளபதி  சோசி, சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து ஒரு  சொல்கூட பேசவில்லை. மாறாக, இதனை இரு நாட்டுக் கடற்படைகளும் சிறப்பாகக் கையாள்வதாகப் பாராட்டியுள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தாலும், போர்ப்படைகளின் தளபதிகளாக இருந்தாலும் இலங்கைக்குச் சென்றால் அந்நாட்டு அரசைப் பாராட்டுவதையும், தமிழக மீனவர்களைக் குறைகூறுவதையுமே வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

  மற்ற நாடுகளின் இறையாண்மை பற்றி பேசும் இந்தியா, சிங்களக் கடற்படையினரின் தாக்குதல்களால் இந்தியாவின் இறையாண்மைக் கேள்விக்குறியாக்கப்படுவது பற்றி கவலைப்படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இலங்கை தொடர்பான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தமிழர்களுக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது. இனியாவது இந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு , சிங்களப் படையினருக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசுநீக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.