genocide01

  இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாகக் குற்றம்சாட்டியுள்ள இங்கிலாந்து வெளியுறவு-பொதுவள அலுவலகம், இதுதொடர்பாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்  இலங்கையில் கடந்த 3 மாதங்களில் மனித உரிமைப் பாதுகாப்பு  தொடர்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம்  பொதுவளஆய மாநாடு நடைபெற்ற போது  இலங்கையில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்திருப்பதாகவும், மனித உரிமை தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க வடக்கு மாகாண மக்களுக்குப் படையினர்  இசைவு வழங்கவில்லை என்றும், வடக்கு மாகாணத்திற்குச் சென்ற  செய்திக்கான அலைவரிசை (சேனல் 4) குழுவினருக்கு  எதிராகப் போராடுமாறு ஒரு பிரிவினரை அரசே தூண்டிவிட்டதாகவும் இங்கிலாந்து அரசு குற்றம் சுமத்தியுள்ளது.

  மேலும் தமிழ் மாணவர்கள் 5 பேரைக் கொன்ற சிறப்புப் பாதுகாப்புப் படை வீரர்கள் 12 பேருக்குப் பிணை வழங்கப்பட்டதைச் சுட்டிகாட்டியுள்ள  இங்கிலாந்து அரசு, சிங்கள அரசால், அறமற்ற வழிகளில் தமிழர்கள் தண்டிக்கப்படுவது குறித்து தன் கவலையைத் தெரிவித்துள்ளது.

  தமிழர்களைத் தண்டிக்கும் போக்கு தொடர்வதாகவும் கவலை தெரிவித்துள்ளது. கடந்த 3 மாதத்தில், இலங்கையில்  உசாவலுக்காக அழைத்துச் செல்லப்பட்ட பலர் கொல்லப்பட்டதாகவும், இரண்டு கடத்தல்  குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகவும்  அந்த அறிக்கையில் இங்கிலாந்து அரசு குறிப்பிட்டுள்ளது.