indhi ethiruppu maravarkal

ஆதிக்க இந்தி, தமிழ்வேரில்
கொதிநீர் ஊற்றிய கொடுமையைக்
கண்டு சிறையில் மாண்ட
வீரச்செம்மல் “நடராசன்!”

இந்தி எனும் தேள் தமிழன்
தோள் மீது ஏறுவதைக்கண்டு
அதை நசுக்கிட எழுந்தான்
“தாளமுத்து!” அவன் சிறையில்
மடிந்த தமிழ்ச்சொத்து.

இந்தியை எரிக்க தன்னுடல்
எரித்த முதல் நெருப்பு
“கீழப்பழுவூர் சின்னச்சாமி!”
இவன்தான் நெருப்புக்குத்
தமிழை அறிமுகம் செய்தவன்!

தமிழுக்காக தீயைத் தீண்டியது
“சிவலிங்கத்தின்” சந்தன
உடல்! அது இந்தியை எரிக்க,
செந்தீயைத் தின்றது.

தமிழைக் காக்க தன்னுடலைத்
தீயாக்கி,
“இந்தி”யப் பேயைப் பொசுக்க,
உயிரைச் சிந்திய தீரன்…
வீரன் “அரங்கநாதன்!”

எழுதாத வெள்ளைத் தாளில்
“தமிழ்வாழ்க!” என்றெழுதி
எம் ஏழை உழவன் நஞ்சுண்டான்!
அவன் “கீரனூர் முத்து!”

மாணவன் “இராசேந்திரன்”
இதயம், குண்டடிபட்டு
இடிந்து
விழுந்தது! அந்த உயிர்க்
குருதி தமிழுக்காகச் செத்தது!

வறுமை தன்னைத் தின்றதையும்
மறந்து, தமிழை இந்தி தின்று
விடுமோ! என்றெண்ணி, நெருப்பை
உண்டு தமிழைக் காத்த
வித்து மாவீரன் “முத்து!”

“மண்மொழி” காக்க மண்ணெண்ணையில்
நனைந்தான் இவன் இந்தியைக்
கொளுத்தத் தன்னுடல் எரித்தான்!
அவன் ஆசிரியர் “வீரப்பன்!”

இந்தி எனும் கொடிய நஞ்சு
தமிழ் நாக்கில் ஒட்டுவதைக்
கண்டு தன் நாக்கில் நஞ்சைத்
தடவி, மாண்ட மா மறவன்!
விராலிமலை “சண்முகம்”

தமிழ் படிக்கும் வயதில்,
குரல்வளை பிடித்த இந்தியைத்
தடுக்க, பீளமேட்டில் “தண்டபாணி”
எனும் பிஞ்சு உடல்
நஞ்சுண்டது!

இந்தியைக் கொளுத்த தமிழ் மாணவன்
எரிந்தான்! அவன் “சாரங்கபாணி!”
“தமிழ்வாழ்க! தமிழ்வாழ்க!”
என்றே அவன் குரல் சாய்ந்தது!

-கவிபாசுகர்.
நன்றி :  ‘தூய தமிழ்ச்சொற்கள்’ முகநூல் பக்கம்