உலக மொழிகள் அனைத்திலும் தொல்காப்பியத்தை மொழிபெயர்க்க வேண்டும்
உலக மொழிகள் அனைத்திலும்
தொல்காப்பியத்தை மொழிபெயர்க்க வேண்டும்!
தொல்காப்பியரின் புகழ் பரவும் வகையில் உலக மொழிகள் அனைத்திலும் தொல்காப்பியம் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் ச.வே.சுப்பிரமணியம் பேசினார்.
தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியர், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள காப்பிக்காட்டில் பிறந்தவர். அங்கு அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை சார்பில் தொல்காப்பியரின் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருள்மிகு சதாசிவம் மனோன்மணிபுரம் கோயில் வளாகத்தில் இவ்விழா நடைபெற்றது. பாசக மூத்த தலைவர் எம்.ஆர். காந்தி, சிலையைத்திறந்து வைத்தார். விளாத்துறை ஊராட்சித் தலைவர் சுரேசு, தமிழாலயம் தலைவர் கு. பச்சைமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ச.வே.சுப்பிரமணியம் தொடக்கவுரையில் பேசியதாவது:
தொல்காப்பியம்தான் உலகின் முதல் இலக்கண நூல். உலக இலக்கண நூல்களிலெல்லாம் சிறந்ததும் தொல்காப்பியம்தான். மாந்தர் அனைவரும் உயர்திணை, மற்றெல்லாம் அஃறிணை என்று வகுத்தது தொல்காப்பியம்தான். இத்தகைய திணைப் பெருமை வேறு எந்த மொழி இலக்கண நூலுக்கும் இல்லை.
வடமொழி இலக்கண நூலான பாணினிக்கு முந்தையது தொல்காப்பியம். ஆனால் பாணினி குறித்து ஆங்கிலத்தில் 100 நூல்கள் உள்ளன. தொல்காப்பியம் குறித்து குறைந்த அளவு நூல்களே ஆங்கிலத்தில் உள்ளன. தொல்காப்பியரின் புகழும், தொல்காப்பியத்தின் சிறப்பும் உலகம் அறியும் வகையில், உலக மொழிகள் அனைத்திலும் தொல்காப்பியத்தை மொழி பெயர்க்க வேண்டும் என்றார் அவர்.
விழாவுக்குத்தலைமை வகித்து, அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் மு. மீனாட்சிசுந்தரம் பேசியதாவது:
தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழர்களின் இரண்டு கண்களாகும். திருவள்ளுவரும், திருக்குறளும் உலகளாவிய நிலையில் புகழ்பெற்ற அளவுக்கு தொல்காப்பியமும், தொல்காப்பியரும் உலக அளவில் சிறப்படையவில்லை. தொல்காப்பியரும், அதங்கோட்டாசானும், பனம்பாரனாரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்கள் என வரலாற்று நிலையில் வரையறுக்கப்படுகிறது. தொல்காப்பியர் காலம் வடமொழி இலக்கண நூலான பாணினியின் காலமான கி.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கும், புத்தர் காலமான கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்டது. தொல்காப்பியர் காலம் கி.மு. 8 ஆம் நூற்றாண்டு என வரையறுக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் இலக்கியத்தையும், வாழ்வியலையும் ஒருசேர கூறிய நூல் தொல்காப்பியம் மட்டுமே. இதை உலகளவில் எடுத்துச் செல்ல வேண்டும். பள்ளி மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தில் நன்னூல் இலக்கணம் அறிமுகம் செய்யப்பட்ட அளவுக்குத் தொல்காப்பியம் அறிமுகம் செய்யப்படவில்லை. தொல்காப்பியத்தைப் பாடத்திட்டத்தில் விரிவான அளவில் சேர்க்க வேண்டும்.
உலகளவில் பொதுவெளியில் தொல்காப்பியருக்கு இங்குதான் சிலை திறக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியர் பிறந்த ஊரான காப்பிக்காட்டில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது அவரது புகழுக்குப் பெருமை சேர்ப்பதாகும் என்றார்.
விழாவில் தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் கண்ணன் பேசியதாவது:
தொல்காப்பியருக்கு அவர் பிறந்த மண்ணில் சிலை எழுப்பியுள்ளது போற்றுதலுக்குரியது. தொல்காப்பியர் எழுத்து இலக்கணத்தையும், சொல் இலக்கணத்தையும் பொருள் இலக்கணத்தையும் நன்கு ஆய்ந்தவர். நூல் மரபுகள், மொழி மரபுகள், சொற்றொடர் குறிப்புகள் யாவற்றையும் தொகுத்துத் தம் நூலில் நிரல்பட அமைத்துள்ளார் என்றார்.
படத்திறப்பு: விழாவில் பனம்பாரனாரின் படத்தை அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை பொதுச் செயலர் இரா. முகுந்தன், நிலம்தரு திருவிற் பாண்டியனின் படத்தைத், தலைநகர்த் தமிழ்ச் சங்க அறக்கட்டளைத் தலைவர் வள்ளல் கு. வெள்ளச்சாமி, அதங்கோட்டாசானின் படத்தைச் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனப் பதிவாளர் முகிலை இராச. பாண்டியனும் திறந்து வைத்தனர்.
நூல் வெளியீடு: “தொல்காப்பியர்’ வரலாறு நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் ஆறு. அழகப்பன் வெளியிட்டார். அதை ஏ.பி.எசு. ஆன்றோ பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் டி. மனோ தங்கராசு (பத்மநாபபுரம்), சே.சி.பிரின்சு(குளச்சல்), எழுத்தாளர் பொன்னீலன், தில்லித்தமிழ்ச் சங்க இணைச் செயலர் குருமூர்த்தி, பொதுச் செயலர் என். கண்ணன், செயற்குழு உறுப்பினர் பி. குமார், தலைநகர் தமிழ்ச் சங்க அறக்கட்டளைச் செயலர் ம.கணபதி, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத் தலைவர் ம. முத்துராமன், ஐதராபாத்து மாநகர் தமிழ்ச் சங்க நிருவாகி கிருபானந்தன், சிவந்தி ஆதித்தனார் கல்லூரித் தலைவர் என். காமராசு, அனைத்துக் கேரளத் தமிழ்ப் பேரவைத் தலைவர் பி.எம். அபுபக்கர், அகரமுதரல ஆசிரியர் இலக்குவனார் திருவள்ளுவன், குமரி மாவட்ட வரலாற்றுப் பண்பாட்டுப் பேரவை பொதுச் செயலர் எசு. பத்மநாபன், தலைநகர் தமிழ்ச் சங்கத்துணைத் தலைவர் வெற்றியழகன், தமிழ்நாடு காமராசர் நற்பணி மன்ற நிருவாகி ஆர்.இராதாகிருட்டிணன், தமிழ்நாடு நற்பணி மன்றத் தலைவர் பி.கே. சிந்துகுமார், மைசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் புகழேந்தி, ‘முகம்’ இதழாசிரியர் இளமாறன், குமரி முத்தமிழ் மன்றத் தலைவர் முளங்குழி பா.இலாசர், அதங்கோட்டாசான் அறக்கட்டளை நிருவாகி கோவிந்தநாதன், சிவமொக்கா தாய் தமிழ்ச் சங்கத் தலைவர் டி.இராசசேகரப்பா, செயலர் தண்டபாணி, தமிழ்ச் சான்றோர் பேரவையைச் சேர்ந்த கி.கண்ணன், கருங்கல் தொழில் வருத்தகச் சங்கத் தலைவர் சியார்சு முதலானோர் வாழ்த்துரை வழங்கினர்.
குமரித்தமிழ்ப்பேரவைப் பொருளாளர் மகேசுவரி, ஓய்வு பெற்ற வணிக வரித் துறை ஆணையர் எம். பாசுகரன் ஆகியோர் நிகழ்ச்சிகளைத்தொகுத்து வழங்கினர். தலைநகர் தமிழ்ச் சங்க நிறுவனர் புலவர் தா.சுந்தரராசன் வரவேற்றார். பொருளாளர் ஞா.சரீதரன் நன்றி கூறினார்.
கவியரங்கம்: தொடர்ந்து குமரிச் செழியன் தலைமையில் கவியரங்கமும், தமிழார்வலர் கோ.முத்துக்கருப்பன் தலைமையில் கருத்தரங்கமும் நடைபெற்றன..
ஐந்தரை அடி உயரச் சிலை:
தொல்காப்பியரின் வெண்கலச் சிலை ஐந்தரை அடி உயரமும், நான்கு அடி அகலமும் 700 அயிரைக்கல்(கிலோ) எடையும் கொண்டதாகும். பத்தடித் தளத்தில் 11 அடி உயரம் கொண்ட பீடத்தில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
– தினமணி அனைத்துப்பதிப்பு
Leave a Reply