70kaiyuuttu,curruption

குள்ளப்புரம் ஊராட்சியில் பலஇலட்சம் மோசடி!

ஊராட்சிச் செயலாளர் பணியிடைவிலக்கம்

ஊழலுக்குத் தண்டனை பணியிடைவிலக்கம் மட்டும்தானா?

  தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் ஊராட்சியில் பல இலட்சம் உரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. குள்ளப்புரம் ஊராட்சிமன்றத் தலைவராக இருப்பவர் சோதியம்மாள். இவர் இரண்டாவது முறையாக ஊராட்சிமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெரியகுளம் ஒன்றியத்திலேயே அதிக வருமானம் உள்ள ஊராட்சி குள்ளப்புரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஊராட்சிசெயலாளராகப் பணிபுரிந்த முத்துவேலன் என்பவர் பதவி உயர்வு பெற்று மாவட்ட ஆட்சியரகத்திற்கு மாற்றப்பட்டார்.

  அதன்பின்னர் ஊராட்சிச் செயலாளராக அ.வாடிப்பட்டி ஊராட்சிச் செயலாளர் நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்டவுடன் ஊராட்சித்தலைவர், ஊராட்சிசெயலாளர், ஊராட்சிமன்றத் துணைத்தலைவர் ஆகியோர் சேர்ந்து போலி ஆவணம் உருவாக்கிப் பல இலட்சம் உருபாய் மோசடி செய்துள்ளனர். இதன் பின்னர்ப் புகார் எழுந்ததையடுத்து கீழவடகரை ஊராட்சிச் செயலாளர் கணபதி நியமிக்கப்பட்டார். கணபதி நியமமிக்கப்பட்ட பின்னரும் போலி ஆவணம் உண்டாக்கிப் பணமோசடி நடைபெற்றுள்ளது. அதன்பின்னர் ஆண்டிபட்டியிலிருந்து ஊராட்சிச் செயலாளர் ஒருவரை நியமித்துள்ளனர்.

  இவ்வாறு தொடர்ச்சியாக ஊராட்சியில் ஊழல்கள் நடைபெற்றதால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல இலட்சம் மோசடி நடைபெற்று இருப்பதைக் கண்டுபிடித்து ஊராட்சித்தலைவர், துணைத்தலைவருக்கு வழங்கப்பட்ட காசோலைகளையும் ஆவணங்களையும் ஊராட்சி அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர். இதனால் காசோலை ஆணை வழங்கும் அதிகாரம் பறிக்கப்பட்டது. அதன்பின்னர் ஆய்வு செய்ததில் பல இலட்சம் உரூபாய் மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அ.வாடிப்பட்டி ஊராட்சிச் செயலாளர் செல்லப்பாண்டி தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

  இதே போலத் தேனி மாவட்டத்தில் பல ஊராட்சிகளில் போடாத சாலை, கட்டாத வீடுகள், ஏற்கெனவே போடப்பட்ட ஆழ்துளைக்குழாய்களில் வண்ணம் பூசிப் புதியதாக ஆழ்துளைக்குழாய் அமைத்திருப்பது போல   படம் எடுப்பது, அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் கொசுமருந்தினைப் பணம் கொடுத்து வாங்கியிருப்பதாகப் போலி ஆவணம் உருவாக்கிக் காசோலை மோசடி செய்திருப்பது, ஏற்கெனவே நடைபெற்ற பணிகளை மீண்டும் நடைமுறைப்படுத்தியதாகக் கணக்கு எழுதியது எனப் பல போலி ஆவணங்களும் தயாரிக்கப்பட்டு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வோர் அலுவலகத்திலும் ஒவ்வோர் ஆண்டும் தணிக்கை செய்யப்படும். ஆனால் ஊராட்சியில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தணிக்கை செய்யப்படுகிறது. இவற்றைத்தவிர ஊராட்சிச் செயலாளர் ஒரே ஊராட்சியில் பல ஆண்டுகளாகப் பணிபுரிவதால் அந்த ஊராட்சியில் நடைபெறும் ஊழல்கள் வெளியே தெரிவதில்லை. இதனால் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊராட்சித்துணைத்தலைவரின் கையெழுத்தைப் போட்டு பண மோசடி நடைபெற்றது. அப்போது இருந்து ஊராட்சித்தலைவரின் காசோலை அதிகாரம் பறிக்கப்பட்டு ஊராட்சிச்செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதன் தொடர்பாக விளக்கம் கேட்க வட்டார வளர்ச்சி அலுவலரைத் தொடர்பு கொள்ள முயற்சிசெய்தோம். அவரிடமிருந்து முறையான பதில் வரவில்லை. எனவே ஒவ்வோர் ஊராட்சியிலும் மாவட்ட ஆட்சியர் ஒரு குழு அமைத்து வரவு, செலவுக் கணக்கு பார்த்தால் இன்னும் பல ஊராட்சித்தலைவர்களின் மோசடிகள் வெளிவரும்.

70vaigaianeesu