எலிவால் அருவியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள எலிவால் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அதனைக்காணும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள டம்டம்பாறையிலிருந்து இந்த அருவியின் இயற்கைத்தோற்றத்தை கண்டு களிக்கலாம். தென்னிந்தியாவிலேயே மிக உயரமான அருவி இந்த எலிவால் அருவி. மூன்று ஆறுகளும் சங்கமித்துத் தலையாறு அருவியாக மஞ்சளாறு அணையை நோக்கிப்பாய்கிறது. இந்த அருவி உயரமாக இருப்பதால் தண்ணீர் விழும் தொலைவில் இருந்து ஏறத்தாழ 5 புதுக்கல் தொலைவு வரை அதன் சாரல் விழுந்து கொண்டே இருக்கிறது.
மேலும் தண்ணீர் விழும் இடத்தை நேடியாகக் காணமுடியாது. இதற்காகச் சுற்றுலாப் பயணிகள் எலிவால் அருவியின் இயற்கை அழகை கண்டு களிக்க டம்டம்பாறை பகுதியில் பார்வைக்கோபுரம் அமைத்து இயற்கை அழகைக் கண்டு களித்தனர். தற்பொழுது அந்தப் பார்வைக்கோபுரம் பழுதாகி உள்ளதால் டம்டம்பாறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கண்டு களித்து அதன் பின்னர்க் கொடைக்கானல் செல்கின்றனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்குத் தண்ணீரின்றி இந்த எலிவால் அருவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர்க் காட்சியளித்தது.
தற்பொழுது எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு தண்ணீர்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த எலிவால் அருவியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.
Leave a Reply