ஏற்காடு இடைத் தேர்தல்: அதிமுக வெற்றி – பரிசும் தண்டனையும்
ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரோசா 1,42,771 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளரைவிட 78116 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் மாறன் 64, 655 வாக்குகள் பெற்றார். இது கடந்த தேர்தலில் தி.மு.க. பெற்ற வாக்கை விடச் சற்றுக் குறைவே. வேறு முதன்மைக் கட்சிகள் போட்டியிடாத சூழலில் தி.மு.க. கூடுதல் வாக்குகளைப் பெறும் என எண்ணியவர்கள் ஏமாற்றத்தைத் தழுவினர். மூன்றாம் இடத்தில் வாக்கு அளிக்க விரும்பாதவர்கள் எண்ணிக்கை 4,431 ஆகஇடம் பெற்றுள்ளது. இனி், ஒவ்வொரு தேர்தலிலும் இப்பிரிவிற்கான வாக்கான எண்ணிக்கை பெருகவே வாய்ப்பு உள்ளது.
“அதிமுக வேட்பாளர் சரோசா வெற்றி பெற்றுள்ளார் என்ற செய்தி எனக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் அளவில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் அரும்பணியாற்றி, அதிமுகவை வெற்றிப்பாதையில் நடைபோட, அல்லும் பகலும் அயராது உழைத்தவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றும்
“கடந்த இரண்டரை ஆண்டுக் கால ஆட்சி யில், பல்வேறு நலத் திட்டங்களைச் செயற்படுத்தி யுள்ளோம்; இவை, மக்களைச் சென்றடைந்து உள்ளன. அதை, ஏற்று, வரவேற்கும் வகையில், தமிழக மக்கள் அதிமுக அரசுக்கு கொடுத்த பரிசுதான் ஏற்காடு இடைதேர்தல் வெற்றி ” என்றும் அதிமுக கட்சித்தலைவியும் முதல்வருமான புரட்சித்தலைவி செயலலிதா தெரிவித்துள்ளார்.
“தேர்தல் விதிமுறைகளைக் காலில்போட்டு மிதித்துவிட்டு, ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி இது. நமது திமுக தொண்டர்கள் ஆற்றிய பணிகளுக்குப் பயன் கிடைக்கவில்லையே என்று வருந்திடாமல், ‘இது போன்ற தோல்விகளைத்தான் நம் எதிர்கால வெற்றிக்கு ஏணிப்படிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும்’ என்ற அறிவுரையையும், ஆறுதலையும் கூறித், தேர்தல் களத்தில் ஓயாமல் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, இந்தச் சூழ்நிலையிலும் திமுகவுக்கு வாக்களித்த தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் என் இதயமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன் எனத் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Leave a Reply