இதழுரை

nelson mandela 4

  முதுமையில் இறந்திருந்தாலும்  நலங் குன்றி யிருந்து இறப்பை எதிர்நோக்கியவர் என அறிந்திருந்தும்  ஆன்றோர் நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவு உலகெங்கும் துயர அலையை எழுப்பி யுள்ளது.

  எதனால் அவர் நலங்குன்றிப் போனார்? இன மக்களுக்காக ஏற்ற  சிறைவாழ்க்கைதானே காரணம்சிறையில் சுண்ணாம்புக்கல் உடைக்கும் வேலை பார்த்ததால் அல்லவா நுரையீரல் தொற்று நோய்க்கு ஆளானார், அல்லறுற்றார், நலமிழந்தார்! இல்லையேல் நலத்துடன் மேலும் வாழ்ந்திருப்பார் அல்லவா? எனவே, நோய்வாய்ப்பட்டு மறைந்தாலும் மக்கள் பணியினால்  பிணிக்காளாகி மறைந்த மாமனிதர், மண்டேலா அவர்கள்  எனலாம்.

 

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு. (குறள் 1025)

என்னும்  தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவாக்கிற்கேற்ப வாழ்ந்த ஆன்றோர் மண்டேலா அவர்கள். இன நலனுக்காக இன்னல்களை இனிமையாக எதிர்நோக்கி மக்கள் உள்ளங்களில் குடிகொண்ட இனநலத்தலைவர் மண்டேலா அவர்கள்.

 

  மண்டேலாவைப் போற்றுநர் அவரது எண்ணத்திற்கும் செயலுக்கும் மாறாக இருந்து கொண்டு அவரை வாழ்த்துவதில் பயனில்லை. உண்மையிலேயே அவரைப் பாராட்டுவதாக இருந்தால் அவர் எந்தக் கொள்கைக்காக வாழ்ந்தாரோ அந்தக்  கொள்கையை ஏற்பதாகத்தான் பொருள். அவரது கொள்கைக்கு உடன்பாடில்லை; ஆனால், அந்தக் கொள்கைக்காக வாழ்ந்தமையால் பாராட்டுகிறோம் என்பது போலியான செயல்பாடே!

  மண்டேலா நிற வெறிக்கு எதிராகப் போராடினார் என்றால் அந்த  நிறத்தை உடைய தம் இனத்திற்காகப் போராடினார் என்றுதானே பொருள்! இன நலனுக்காகப் போராடிய தலைவரைப் போற்றுபவர்கள், இன நலனுக்காகப் போராடும் பிறரையும் போற்றத்தானே செய்ய வேண்டும்!

 

  “அவர் காந்தியவாதி; அதனால் போற்றுகிறோம் என்று சொன்னார்கள் என்றால் அது கடைந்தெடுத்த பொய்யாகத்தான் இருக்கும். இன்னாசெய்யாமை(அகிம்சை)வடிவம் என்பது மண்டேலாவைப் பொறுத்தவரை ஒரு நடைமுறை உத்தியாக மட்டுமே இருந்தது. ஆனால் இது பலராலும் காந்திய வழி என்று தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது”  எனப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளதையும் சான்றாகக் கொள்ளலாம்(தமிழில் தீக்கதிர் இதழில் வந்ததை ஆயுதஎழுத்து வலைத்தளத்தில் காணலாம்).

   “அனைத்து இன மக்களும் சம உரிமையுடனும், நல்லிணக்கத்துடனும் ஒன்றாக வாழும் விடுதலை வாழ்வை, மக்கள் நாயகத்தை நான் கனவு காண்கிறேன்.  இந்தக் கனவை நிறைவேற்றவேண்டும் என்பதற்காகத்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தேவைப்பட்டால் இதற்காகச் சாகவும் ஆயத்தமாக இருக்கிறேன்” என்பதுதான் நெல்சன் மண்டேலாவின் வாக்குமூலம்.  எனவே, மண்டேலாவைத் தொழுபவர்கள், தம் மக்களின் உரிமைக்காகப் போராடுபவர்களையும் தொழ வேண்டுமல்லவா?

  தம் மக்கள் சம உரிமையுடன் வாழ இவர் நடத்திய போராட்டம் எப்படி யிருந்தது? ஆயுதம் தாங்காமலா இருந்தது?

 

  ஆப்பிரிக்கத்  தேசியப்  பேராயத்தின் படையைத் தலைமை தாங்கி மரபுசாரா கெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்திய ஆயுதப் போராளிதான் மண்டேலா.   அப்போது, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, அமெரிக்காவும் மண்டேலாவை எதிர்த்துப் பயங்கரவாத முத்திரை குத்தியதும் வரலாறுதான். அமெரிக்காவுக்குள் நுழைவதற்குள் சூலை 2008 வரை மண்டேலாவுக்கு தடை நீடித்திருந்ததும் வரலாறுதான். ஆனால், வரலாற்றின் உந்துதலால்காலம் திரும்பியுள்ளது. அன்றைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் வேறு வகை முத்திரை குத்தியவர்களும்  பாராட்டுகிறார்கள். ஆனால், இந்தப் பாராட்டு உண்மையாக அமைய என்ன செய்ய வேண்டும்?    இன நலப் போராளி மண்டேலா பற்றிய மதிப்பீட்டை மாற்றிக் கொண்டதுபோல்  இனநலனுக்காகப்  போராடும் ஈழ மக்களைப் போற்ற வேண்டும்!  நாட்டு மக்களுக்காக  இன்னுயிர்  நீத்த   ஈழப்  போராளிகளை வணங்க வேண்டும்! நாட்டு மக்கள் நலனுக்காகவே நாளும் வாழும் தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரனை மதிக்க வேண்டும்! ஆதலின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்! எனவே, இதுவரை செய்த தவறுகளும் குற்றங்களும் அதனால் நேர்ந்த இனப்படுகொலைகளும் போதும்!

 

  நிறவெறி ஆட்சி முடிவிற்கு வந்தபோதும் என்ன சொன்னார் மண்டேலா? “ஆயுதப்போராட்டத்தை நாம் நிறுத்தி வைக்கிறோம்; ஆனால் அதே நேரத்தில் ஆயுதப்போராட்டத்தை நாம் கைவிட்டுவிடவில்லை” என்றுதானே நாட்டுமக்களிடையே வீர உரையாற்றினார்! (முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பொழுது ஆயுதங்களை மெளித்தது நினைவிற்கு வருகிறதா?) மேற்கு வங்கத்திற்கு வந்தபொழுதும் தன்னைப் புரட்சியாளனாகத்தானே குறிப்பிட்டார்! மறப்போராளி சுபாசு சந்திர போசு அவர்களைத்தானே, தான் பின்பற்றும் நாயகனாகக்  குறிப்பிட்டார். ஆனால், அதே மறப்போராளி சுபாசு சந்திரபோசு அவர்களின் வழியில் செயல்படும் ஆயுதப் போராளிகளைப் பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவது ஏன்?

  எனவே இனநலத்திற்காக அறவழி போராடி, அதனால் பயனின்றி, ஆயுதவழிப் போராளியாக மாறிய மண்டேலாவை மதிப்பவர்கள் இன நலனுக்காக, நாட்டு நலனுக்காக, நாட்டு மக்கள் நலனுக்காக, வேறு வழியின்றிப் போராட்டப் பாதையில் செல்ல வேண்டி வந்தவர்களை மதிக்க வேண்டும்; அதற்கான காரணங்களைப் புரிந்து  கொண்டு, அவற்றை உடனே களைய முயல வேண்டும். உரிமைக்காகப் போராடுபவர்கள்மீது அரச வன்முறையைக் கட்டவிழ்த்து விடக்கூடாது. பன்னாட்டு அவை என்பது அதிகாரம் மிக்க சில நாடுகளின் கைப்பாவையாக இல்லாமல், அனைத்து நாடுகளின் உரிமைகளையும் பேணுவதாகவும் உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகளை மீட்டுத் தருவதாகவும் இருக்க வேண்டும்.

 

எனவே, மண்டேலாவை  நிறவெறிக்கு எதிரான போராளியாகப் பார்க்காமல், இனஉரிமை மீட்புப் போராளியாகப் பார்க்க வேண்டும். ஆதலின்

மண்டேலாவைப்  போற்றுபவர்களே!

இன உரிமைப் போராளிகளை மதியுங்கள்!

ஈழத்திற்கு ஏற்பு அளியுங்கள்!

தமிழீழத்தைப்போற்றுங்கள்!

ஓங்குக மண்டேலாவின் புகழ்! வெல்க தமிழீழம்!

 

இதழ் 4

கார்த்திகை 15, தி.பி.2044Akaramuthala-Logo

திசம்பர் 01, கி.பி.2013